குகன் என்பவர் மனதினிலும்...

 


இன்று (27.03.2026) ராம நவமி நன்னாள். அருணகிரிநாதரின் பாக்களில் ராமாயணம் பற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட குறிப்புகள் வந்துள்ளன.

'சருவி இகழ்ந்து' எனத் தொடங்கும் திருப்புகழின் இறுதியில் "குகன் என்பவர் மனதினிலும் பரிவொன்றி அமர்ந்தருள் பெருமாளே" என்ற குறிப்பு வருகிறது. 'குகன் என்னும் நாமத்தை எப்பொழுதும் உச்சரிப்பவர் மனதில் அவன் பரிவுடன் வந்து அமர்வான்' என்பது இதன் ஒரு பொருள். மற்றொரு சுவையான கருத்தையும் 'சுப்பிரமணிய பராக்கிரமம்' எனும் நூலில் காணலாம்.

கங்கையாற்றின் அருகில் ச்ருங்கிபேரம் என்ற நகரத்தைச் சுற்றியிருந்த காட்டில், குகன் என்னும் வேட மன்னன் வாழ்ந்து ஆண்டு வந்தான். குறிஞ்சிக் கடவுளாம் முருகப்பெருமானிடத்தே பக்தி பூண்டு எக்காலமும் குகன் என்ற திருநாமத்தை உரைத்து வந்தமையால் அந்த வேடனுக்கு, "குகன்" என்பதே பெயராயிற்று. வழிப்போக்கர்களுக்கு தேனும் தினைமாவும் மற்ற உணவுகளையும் கொடுத்து உபசரித்து வந்தான். 

ராமபிரான் சீதையுடனும் லக்ஷ்மணனுடனும் வனவாசம் சென்ற போது, இந்த ச்ருங்கிபேரத்தை அடைந்த போது, அவர்களை மனமகிழந்து வரவேற்று, பணிவிடைகள் செய்தான். ஆற்றைக் கடந்து அக்கரையில் உள்ள சித்ரகூடத்தை அவர்கள் அடைய, தானே ஓடத்தில் அவர்களை ஏற்றி, அவ்விடத்திற்குக் கொண்டுவிட்ட குகன், ராமனை விட்டுப் பிரிய மனமில்லாமல் தானும் அவர்களோடு வருவதாகக் கூறினான். அவனது அன்பை மெச்சிய ராமன், "குகனொடு ஐவர் ஆனோம்" என்று கூறி, அவனைத் தன் சகோதரனாக ஏற்று, வனவாசம் முடிந்து திரும்பி வருகையில் மீண்டும் சந்திப்பதாகக் கூறி விடைபெற்றார். ராமன் வருவார் என்று நாளும் காத்திருந்து அவரது நினைவாலேயே பல நூறு வருட காலம் வாடி வந்த குகன், தன் குலதெய்வமான முருகப்பெருமானை நோக்கித் தவம் செய்தான். அப்போது அவனிடம் கருணை கொண்ட முருகப்பெருமான், குகனின் முன் வேட உருவில் தோன்றி, "ராமனோடு வனத்துக்குச் சென்ற சீதையை ராவணன் கடத்திச் செல்ல, ராமன் அவனோடு போரிட்டு சீதையை மீட்டு, பிறகு அயோத்திக்குத் திரும்பி, அங்கு ஆட்சி செய்து, மறுபடியும் வைகுந்தத்திற்கு ஏகினார்" என்று கூறினார். ராமபிரான் வைகுந்தத்தை அடைந்தார் என்று கேட்டதும் மனமுடைந்து மூர்ச்சையானான் குகன். அவனைத் தேற்ற வேண்டி, முருகப்பெருமான் ராமனின் வடிவத்தையும், வள்ளி, தெய்வானை இருவரும் சீதை, லக்ஷ்மண வடிவங்களையும் எடுத்துக்கொண்டு நடந்த சம்பவங்களை நாடகமாய் நடித்துக் காட்டினர். பிறகு குகனுக்கு முக்தி அளித்தார் முருகப்பெருமான்.

தன்னை மனத்தால் நினைத்து வந்த குகனிடம் அன்பு காட்டி, அருள் செய்த முருகப் பெருமானை, "குக சுவாமி மூர்த்தி" என்று போற்றுகிறது சுப்பிரமணிய பராக்ரமம்‌.

திருச்செந்தூர்ப் புராணத்திலும் இந்த நிகழ்வு பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:


கங்கையின் வடபால் சிங்கிபேரி பட்டினத்தில் காமர் 

தங்கு எழில் சிலை இராமன் தனைத் தியானித்து வாழும் 

துங்க மா குகற்கு இராமன் தொல்கதை அனைத்தும் சோராது 

அங்கு நாடகக் கூத்தாக அருளொடு நடித்துக் காட்டி 


சுந்தரச் சிலை இராமன் தோற்றமும் காட்டி ஞானம் 

முந்திய பிரமானந்த முக்தியும் கொடுத்து வேத 

மந்திர குகச்சுவாமி என்னவும் வாய்ந்து

(பேரா)நந்த நாயகன் என்றோது நாமமும் குமரன் பெற்றான் 


ஓரிரு சொற்களைக் கொண்டு ஒரு பெரும் நிகழ்வைக் கூறும் அருணகிரியாரின் சொல்லாட்சியை நினைக்கும் போது மனத்தில் பிரமிப்பும் பரவசமும் நிறைகிறது என்றால் அது மிகையல்ல!

"யாது நிலையற்றலையும் ஏழு பிறவிக்கடலை ஏறவிடு நற்கருணை ஓடக்காரன்" என்று திருவேளைக்காரன் வகுப்பில் அருணகிரிநாதரால் போற்றப்பட்ட நம் குகன், கங்கையில் படகோட்டிவந்த குகனுக்கு அருள்புரிந்தததில் வியப்பேதுமில்லையே!!

மாலோனையும் அவன் மருகனையும் வணங்கி நலமும் வளமும் பெறுவோம்.

Comments