கந்தர் அந்தாதி - செய்யுள் 48
சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்திற்
சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற்
சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே
பதம் பிரித்த வடிவம்:
“சேய அன்பு உந்தி வன வாச மாதுடன் சேர்ந்த செந்தில்
சேய! வன்பு உந்து இகல் நிசாசராந்தகா! சேந்த!” என்னில்
சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளி பொன் செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாறவே தரும் சேதம் இன்றே
பொருள்:
சேய அன்பு உந்தி வன வாச மாதுடன் சேர்ந்த செந்தில் சேய!
சேய - அழகுடனும்
அன்பு – மிகுந்த காதலுடனும்
உந்தி – கானாறு பாய்கின்ற
வனவாச மாதுடன் – வள்ளிமலையில் வாழ்கின்ற வள்ளியுடன்
சேர்ந்த செந்தில் சேய! – கந்தர்வ மணம் புரிந்துகொண்ட செந்தில் குமரனே!
அழகும் காதலும் உடையவளும் கானாறு பாயும் வள்ளிமலையில் வாழ்பவளுமான வள்ளியை கந்தர்வ மணம் புரிந்துகொண்ட செந்தில் குமரனே!
வன்பு உந்து இகல் நிசாசராந்தகா!
வன்பு உந்து – மிக்க வலிமையும்
இகல் நிசாசராந்தகா – பகைமையும் உடைய அசுரர்களை அழித்தவனே! (அரக்கர்களுக்கு யமனாக வந்தவனே!)
வலிமையும் பகைமையும் உடைய அசுரர்களை அழித்தவனே!
சேந்த! – செந்நிறமுடையவனே!
என்னில் – என்றெல்லாம் துதித்தால்
சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளி பொன் செங்கதிரோன் சேயவன்
சேயவன் - செவ்வாய்
புந்தி - புதன்
பனிப்பானு - சந்திரன்
வெள்ளி - சுக்கிரன்
பொன் - வியாழன்
செங்கதிரோன் - சூரியன்
(செங்கதிரோன்) சேயவன் – சூரியனுடைய பிள்ளையான சனைச்சரன்
(ஆகியோரின் வக்கிரத்தால்)
புந்தி தடுமாறவே தரும் சேதம் இன்றே - நமது சித்தத்தைத் தடுமாறச் செய்யும் தீமை இல்லாது போகும்
[ராகு, கேது இரண்டும் சாயாக்ரஹங்கள் என்பதால் இங்கு குறிப்பிடப்படவில்லை]
பொழிப்புரை:
“வள்ளியை மணந்த செந்தில் குமரனே! அசுரர்கள் குலாந்தகனே! சேந்தனே!” என்று முருகப்பெருமானைத் துதித்தால், நவக்கிரஹங்களால் ஏற்படும் தீமை நம்மை அணூகாது.
பின் குறிப்பு:
“வேயுறு தோளி பங்கன் … அடியாரவர்க்கு மிகவே!” என்று வரும் கோளறு பதிகத்தை ஒத்த கருத்தினை உடைய இச்செய்யுள் தினசரி பாராயணத்திற்கு உரியதாகும்
.jpg)
Comments
Post a Comment