கந்தர் அந்தாதி - செய்யுள் 100
செல்வந் திகழு மலநெஞ்ச மேயவன் றெய்வமின்னூர்
செல்வந் திகழு நமதின்மை தீர்க்கும்வெங் கூற்றுவற்குச்
செல்வந் திகழுந் திருக்கையில் வேறினை காத்த செல்வி
செல்வந் திகழு மணவாள னல்குந் திருவடியே
பதம் பிரித்த வடிவம்:
செல் வந்தி கழுமலம் நெஞ்சமே! அவன் தெய்வ மின் ஊர்
செல் வந்து இகழும் நமது இன்மை தீர்க்கும்; வெம் கூற்றுவற்கு
செல் வந்தி கழும் திருக் கையில் வேல்; தினை காத்த செல்வி
செல்வம் திகழும் மணவாளன் நல்கும் திருவடியே
பொருள்:
செல் வந்தி கழுமலம் நெஞ்சமே!
நெஞ்சமே! - ஏ மனமே!
செல் - சென்று
கழுமலம் - கந்தக் கடவுள் இப்பூவுலகத்தில் சம்பந்தராய் அவதரித்த சீர்காழிப் பதியை
வந்தி - துதிப்பாயாக
மனமே! கந்தக் கடவுள் பூவுலகத்தில் சம்பந்தராய் அவதரித்த சீர்காழிப் பதிக்குச் சென்று, பின்னர் அப் பதியைத் தியானிப்பாயாக.
(அதன்மூலம்)
அவன் தெய்வ மின் ஊர் செல் வந்து இகழும் நமது இன்மை தீர்க்கும்
அவன் தெய்வ மின் - அந்தக் குமாரக் கடவுளின் தெய்விக நாயகியாகிய தேவசேனை
ஊர் - ஊர்ந்து செல்லும் வாகனமாகிய
செல் - மேகங்கள்
வந்து - நல்ல மழையைப் பொழிந்து
இகழும் - இகழ்ச்சிக்கு இடமான
நமது இன்மை - நம்முடைய வறுமையை
தீர்க்கும் - போக்கிவிடும்
அவ்வாறு தியானிப்பதால், முருகப் பெருமானின் நாயகியான தெய்வானையின் வாகனமான மேகங்கள் தேவையான அளவு மழையைப் பொழிந்து, இகழ்ச்சிக்கு இடமான வறுமையை அகற்றும்.
வெம் கூற்றுவற்கு செல் வந்தி கழும் திருக் கையில் வேல்
வெம் கூற்றுவற்கு - கொடிய யமன்
செல் வந்தி - நம் மேல் செலுத்தும் நரக தண்டனையை
கழும் - போக்கிவிடும்
திருக் கையில் வேல் - அவனுடைய வேலாயுதமானது.
அவனுடைய திருக்கரத்தில் உள்ள வேலாயுதமானது யமன் நம் மேல் செலுத்தும் நரக தண்டனையைப் போக்கிவிடும்.
தினை காத்த செல்வி செல்வம் திகழும் மணவாளன் நல்கும் திருவடியே
தினை காத்த செல்வி - பக்திப் பயிரைக் காத்து வளர்த்த வள்ளி நாயகியின்
செல்வம் திகழும் - பெரும் பேறாக விளங்கும்
மணவாளன் - மணவாளனாகிய முருகப் பெருமான்
நல்கும் திருவடியே - குக சாயுஜ்யமாகிய தனது சரணங்களைக் கொடுத்தருள்வான்
பக்திப் பயிரைக் காத்து வளர்த்து வந்த வள்ளிநாயகியின் பெரும் பேறாக விளங்கும் மணவாளனான முருகப்பெருமான், தனது சரணங்களை கொடுத்து, முக்தியை அருள்வான்.
பொழிப்புரை:
மனமே! கந்தக் கடவுள் பூமியில் அவதரித்த சீர்காழி நகரைத் தியானிப்பாயாகில், தேவசேனையின் அருளால் போதுமான அளவு மழை பெய்து நாட்டில் வளம் பெருகும். வேலாயுதம் யம பயத்தை நீக்கிவிடும். வள்ளிமணாளன் முக்திச் செல்வத்தைக் கொடுப்பான்.
அந்தாதி இல்லா இறைவனுக்கு அந்தாதி அன்று உரைத்த அருணகிரிநாதா! எம்மை நீ என்று அருளே!!
.jpg)
Comments
Post a Comment