கந்தர் அந்தாதி - செய்யுள் 99
தீவினை யற்ற சினந்தீ ரகத்துண்மெய்த் தீபநந்தந்
தீவினை யற்ற வநந்தா தெடுத்தனஞ் செந்தினைமேல்
தீவினை யற்ற புனமான் கொழுநன் செழுங்கனகத்
தீவினை யற்ற வடியார்க் கருள்பெருஞ் செல்வனுக்கே
பதம் பிரித்த வடிவம்:
தீ வினையற்ற சினம் தீர் அகத்துள் மெய்த் தீபம்
(நம் தம்) தீவினை அல் தவ நந்தாது எடுத்தனம் செம் தினை மேல்
தீவினையற்ற புன மான் கொழுநன் செழும் கனகத்
தீவினை அற்ற அடியார்க்கு அருள் பெரும் செல்வனுக்கே
பொருள்:
தீ வினையற்ற சினம் தீர் அகத்துள்
தீ - அக்னியானது
வினையற்ற - தனது இயல்பான எரிக்கும் தன்மையை விட்டது போல
சினம் தீர் - கோபத்தை அடியோடு ஒழித்த
அகத்துள் - உள்ளத்துள் (சாந்த இதயமாகிய தகழியில்)
அக்னி, தன் இயல்பான எரிக்கும் தன்மையை விட்டது போல், கோபத்தை முற்றும் விட்ட உள்ளத்துள்...
மெய்த் தீபம் நம் தம் தீவினை அல் தவ நந்தாது எடுத்தனம்
மெய்த் தீபம் - சத்யம் என்னும் ஞான விளக்கை
நந்தாது - அணைந்துவிடாமல் எப்போதும் பிரகாசிக்கும்படி
நம்தம் - நம்முடைய
தீவினை - தீய வினையாகிய
அல் தவ - இருள் நீங்கும்படி
எடுத்தனம் - ஏற்றி வைத்தோம்
நம் தீவினை எனும் இருள் நீங்குமாறு, சத்யம் என்னும் ஞான விளக்கை, அணைந்துவிடாது எப்போதும் பிரகாசிக்கும்படி ஏற்றி வைத்தோம்.
செம் தினை மேல் தீவினையற்ற புன மான் கொழுநன்
செம் தினை மேல் - வளமையான தினைக் காட்டில்
தீவினையற்ற - தீய்ந்து போகாமல் எப்போதும் இருக்கும்
புன - தினைப்புனத்தில் வாழும்
மான் - மான் போன்ற வள்ளி நாயகியின்
கொழுநன் - மணாளனும்
வளமிக்க தினைக்காட்டில் தீய்ந்து போகாமல் எப்போதும் இருக்கும் தினைப்புனத்தில் வாழும் மான் போன்ற வள்ளியின் மணாளனும்
செழும் கனகத் தீவினை அற்ற அடியார்க்கு அருள் பெரும் செல்வனுக்கே
அற்ற அடியார்க்கு - உலக பசு பாச தொந்தங்களை அடியோடு நீக்கிய அடியார்களுக்கு
செழும் கனகத் தீவினை - செழுமையான பொன் போல் பிரகாசிக்கும் மோக்ஷ வீட்டினை
அருள் - வரமாகக் கொடுப்பவனுமாகிய
பெரும் செல்வனுக்கே - முக்திச் செல்வனுமான முருகப் பெருமானுக்கு
பற்றறுத்த அடியார்களுக்கு மோக்ஷத்தை அளிக்கும் முக்திச் செல்வனுமான முருகப் பெருமானுக்கு..
(மெய்த் தீபம் எடுத்தனம்)
"விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே" - இருந்த வீடும் - திருப்புகழ்
பொழிப்புரை:
வள்ளியை ஆட்கொண்டவனும், பந்த பாசங்களை அறுத்த மெய்யடியாருக்கு சாயுஜ்ய பதவியைக் கொடுப்பவனும், முத்தி முதலாளியாகியவனுமான முருகப் பெருமானுக்கு நமது உள்ளத்தில் கோபம் ஒழியும்படியும் மாயை இருள் நீங்கவும் சத்யம் என்னும் அணையாத ஞான தீபத்தை ஏற்றி வைத்தோம்.
.jpg)
Comments
Post a Comment