கந்தர் அந்தாதி - செய்யுள் 98

சீரங்க ராக மறமோது திகிரி செங்கைகொண்ட
சீரங்க ராக மருகந்த தேசிக செந்தினைமேற்
சீரங்க ராக தனகிரி தோய்கந்த செந்தமிழ்நூற்
சீரங்க ராக விநோதவென் பார்க்கில்லை தீவினையே 

பதம் பிரித்த வடிவம்:

சீரம் கரா கம் அற மோது திகிரி செம் கை கொண்ட
சீரங்கர் ஆகமர் உகந்த தேசிக! செம் தினை மேல்
சீர் அங்க ராக தன கிரி தோய் கந்த! செந்தமிழ்நூல்
சீரங்க! ராக விநோத! என்பார்க்கு இல்லை தீவினையே

பொருள்:

சீரம் கரா கம் அற மோது திகிரி செம் கை கொண்ட சீரங்கர் 

சீரம் - கலப்பையையும்
கரா - முதலையின் 
கம் - தலையை 
அற - அற்று விழும்படி 
மோது - எதிர்த்துத் தகர்த்த
திகிரி - சக்ராயுதத்தையும்
செம் கை கொண்ட - அழகிய கையில் தரித்திருக்கும்
சீரங்கர் - ஸ்ரீரங்கநாதராகிய திருமாலும்

கலப்பையையும் முதலையின் தலையை அறுத்துத் தகர்த்த சக்ராயுதத்தையும் அழகிய கையில் கொண்ட ஸ்ரீரங்கநாதராகிய திருமாலும்..

ஆகமர் - சிவாகமங்களை அருளிச்செய்த சிவபெருமானும் 

உகந்த தேசிக! - மனமகழ்ச்சி கொள்ளும் ஆச்சாரிய மூர்த்தியே!

செம் தினை மேல் சீர் அங்க ராக தன கிரி தோய் கந்த! 

செம் தினை மேல் - செழுமை மிக்க தினைப் புனத்தில் வாழும்

சீர் அங்க ராக - அழகுமிக்க வள்ளி நாயகியின் வாசனை திரவியம் பூசிய
தன கிரி தோய் - மலை போன்ற மார்பகங்களை அணைக்கும்

கந்த! - கந்தக் கடவுளே

செழுமை மிக்க தினைப் புனத்தில் வாழும் அழகு மிக்க வள்ளியின் வாசனை திரவியம் பூசப்பட்ட மலை போன்ற மார்பகங்களை அணைக்கும் கந்தக் கடவுளே!

செந்தமிழ்நூல் சீரங்க! 

செந்தமிழ்நூல் - சிறந்த தமிழ்ப் பனுவல்களில் சொல்லப்படும்

சீரங்க - சீர் முதலிய எட்டு வகைகளிலும் வல்ல கவி ச்ரேஷ்டனே!

சிறந்த தமிழ்ப் பாக்களில் சொல்லப்படும் சீர் முதலிய எட்டு வகைகளிலும் வல்ல கவி ச்ரேஷ்டனே!

ராக விநோத! - இசைப் பிரியனே!

என்பார்க்கு இல்லை தீவினையே

என்பார்க்கு - என்று துதிப்போர்க்கு
இல்லை தீவினையே - தீவினைகளால் வரும் பாதிப்புகள் இல்லை.

என்று துதிப்பாரை தீவினைகள் அணுகா.


திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை செயித்தருளும் இசைப்பிரிய... 
(கருப்புவிலில் - பழநித் திருப்புகழ்)

பொழிப்புரை:

கலப்பையையும் சக்ராயுதத்தையும் ஏந்திய மகாவிஷ்ணுவும், ஆகமங்களின் தலைவரான சிவபெருமானும் போற்றி மகிழ்கின்ற குருமூர்த்தியே! வள்ளி மணாளனே! தமிழ்ப் பாவலனே! சங்கீதப் பிரியனே! என்றெல்லாம் போற்றித் துதிப்பவர்க்கு தீவினைகள் அணுகாது. 

(பலராமரும் திருமாலின் அவதாரம் என்பதால் அவருடைய ஆயுதமான கலப்பையை மகாவிஷ்ணு ஏந்தி இருப்பதாக இங்கு கூறப்பட்டுள்ளது).

Comments