கந்தர் அந்தாதி - செய்யுள் 97
சிறுமிக் குமர நிகர்வீர் பகிரச் சிதையுயிர்த்துச்
சிறுமிக் குமர சரணமென் னீருய்விர் செந்தினைமேற்
சிறுமிக் குமர புரைத்துநின் றோன்சிலை வேட்டுவனெச்
சிறுமிக் குமர வணிமுடி யான்மகன் சீறடிக்கே
பதம் பிரித்த வடிவம்:
சிறு உமிக்கும் மர நிகர்வீர் பகிர; சிதை
(உயிர் துச்)சில் துமி குமர சரணம் என்னீர், உய்வீர்; செம் தினை மேல்
சிறுமிக்கு மரபு உரைத்து நின்றோன், சிலை வேட்டுவன்
(எச்)சில் து மிக்கும் அரவு அணி முடியான் மகன் சீறடிக்கே
பொருள்:
சிறு உமிக்கும் மர நிகர்வீர் பகிர
சிறு உமிக்கும் - அற்பமான சிறு உமியைக் கூட
பகிர - தானம் செய்வதற்கு மனமில்லாமல்
மர நிகர்வீர் - மரம் போல் நிற்பவர்களே
(மரமானது தான் இருந்த இடத்தை விட்டு நகராது. அதனால் மனம் சற்றும் இளகாது இருப்பவர்களை இவ்வாறு கூறுகிறார் போலும்!)
அற்பமான சிறு உமியைச் சிறிதளவு கூட தானம் செய்வதற்கு மனம் இல்லாமல் மரக்கட்டை போல் நிற்பவர்களே!
சிதை உயிர் துச்சில் துமி குமர சரணம் என்னீர், உய்வீர்
சிதை - அழிந்து போவதும்
உயிர் துச்சில் - உயிருக்கு இருப்பிடமானதுமான இத் தேகத்தில்
துமி - தும்மல் உண்டாகும் போதிலும்
குமர சரணம் என்னீர் - முருகா நான் உன் அடைக்கலம் என்று சொல்வீர்
உய்வீர் - அதன் மூலமாக நற்கதி அடைவீர்
அழிந்து போவதும் உயிருக்கு இருப்பிடமாக இருப்பதுமான இந்த உடலில், தும்மல் உண்டாகும் போது "குமரா சரணம்" என்று சொல்லுங்கள்; நீங்கள் நற்கதி அடைவீர்கள்.
செம் தினை மேல் சிறுமிக்கு மரபு உரைத்து நின்றோன்
செம் தினை மேல் - சிவந்த தினைப் புனத்தில் வாழும்
சிறுமிக்கு - வள்ளி நாயகிக்கு
மரபு உரைத்து நின்றோன் - தனது தாய் தந்தையர் அடியார்களை ஆட்கொண்ட சரித்திரத்தை எடுத்துரைத்து அவளுடைய அன்பை வேண்டி நின்றவனும்
சிவந்த தினைப் புனத்தில் வாழும் வள்ளிக்கு தனது தாய் தந்தையர் அடியார்களை ஆட்கொண்ட சரித்திரத்தை எடுத்துரைத்து அவளுடைய அன்பை வேண்டி நின்றவனும்...
சிலை வேட்டுவன் எச்சில் து மிக்கும் அரவு அணி முடியான் மகன் சீறடிக்கே
சிலை வேட்டுவன் - வில்லைத் தரித்த வேடனாம் திண்ணன் (பின்னால் கண்ணப்ப நாயனார் என்ற பெயர் பெற்றவர்)
எச்சில் - தான் முதலில் ருசி பார்த்து நைவேத்தியம் கொடுத்த மாமிசத்தை
து - மிகவும் களிப்புடன் உண்டவரும் (ததி தித்தித்ததே து - கந்தர அந்தாதி 54)
(இதவிய காண் இவை ததை என வேடுவன் எய்திடும் எச்சில் தின்று லீலாச்சலம் ஆடும் தூயவன் - வதன சரோருக - வெள்ளிகரம் திருப்புகழ்)
மிக்கும் - மிக மேன்மையான விதத்தில்
அரவு அணி முடியான் - சர்ப்பத்தை தரித்த சடையை உடையவருமான சிவபெருமானின்
மகன் - மைந்தனுமாகிய கந்த கடவுளின்
சீறடிக்கே - சிறிய திருவடிகளை தியானித்துக் கொண்டே
வில்லேந்திய வேடனாம் திண்ணன் (கண்ணப்ப நாயனார்) படைத்த அவரது எச்சில் தோய்ந்த மாமிசத்தை அவர்தம் குற்றமற்ற பக்திக்காக மகிழ்வோடு ஏற்றுக்கொண்டவரும் பாம்பை அணிகலனாக அணிந்தவருமான சிவபிரானின் மைந்தனாம் கந்தப் பெருமானின் சிறிய திருவடிகளை (ரட்சை தரு சிற்றடி) தியானித்துக் கொண்டே (தும்மும் போது கூட 'குமரா சரணம்' என்று சொல்லுங்கள்)
பொழிப்புரை:
உமி அளவு கூடப் பகிர்ந்து கொடுக்க மனம் இல்லாத கட்டை போன்றவர்களே! தும்மும் போது, வள்ளியை வலிய ஆட்கொண்டவனும், கண்ணப்பனின் எச்சில் பட்ட மாமிசத்தை அவரது பக்திக்காக மகிழ்வோடு ஏற்றுக் கொண்ட, சர்ப்ப ஆபரணராகிய சிவபெருமானின் குமாரனும் ஆகிய குமரக்கடவுளின் திருவடிகளைத் தியானித்த வண்ணம், "குமரா சரணம்" என்று ஓதுவீர்களாக. நீங்கள் நற்கதி அடைவீர்கள்.
.jpg)
Comments
Post a Comment