கந்தர் அந்தாதி - செய்யுள் 96
திருக்கையம் போதிக ளோகஞ்ச மோநஞ்ச மோதிருமால்
திருக்கையம் போசெய்ய வேலோ விலோசனந் தென்னனங்கத்
திருக்கையம் போருகக் கைந்நீற்றின் மாற்றித்தென் னூல்சிவபத்
திருக்கையம் போக வுரைத்தோன் சிலம்பிற் சிறுமிதற்கே
பதம் பிரித்த வடிவம்:
திருக்கை அம்போதிகளோ, கஞ்சமோ, நஞ்சமோ, திருமால்
திருக்கை அம்போ, செய்ய வேலோ, விலோசனம் தென்னன்
(அங்கத்) திருக்கை அம்போருக கைந்நீற்றின் மாற்றி தென்னூல்
சிவபத்தி ருக்கு ஐயம் போக உரைத்தோன் சிலம்பில் சிறுமிதற்கே
பொருள்:
88 ஆம் கந்தர் அந்தாதி செய்யுள் போல், இச்செய்யுளும் கண் நயந்துரைத்தல் என்ற துறையைச் சேர்ந்தது.
திருக்கை அம்போதிகளோ, கஞ்சமோ, நஞ்சமோ, திருமால் திருக்கை அம்போ, செய்ய வேலோ, விலோசனம்
திருக்கை அம்போதிகளோ - செம்பழுப்பு நிறமும், 1 1/2 அடி நீளம் வளர்வதுமான திருக்கை என்னும் மீன் வகைகள் வாழும் கடல்களோ
கஞ்சமோ - தாமரையோ?
நஞ்சமோ - விஷமோ?
திருமால் திருக்கை அம்போ - திருமாலின் கையில் இருக்கும் பாணமோ?
செய்ய வேலோ - சிவந்த வேலாயுதமோ?
விலோசனம் - இப்பெண்ணின் கண்!
இப்பெண்ணின் கண்ணானது, செம்பழுப்பு நிறமும் ஒன்றரை அடி நீளம் வளர்வதுமான திருக்கை என்னும் மீன் வகைகள் வாழும் கடலோ? தாமரையோ? விஷமோ? திருமாலின் கையில் இருக்கும் பாணமோ? அல்லது சிவந்த வேலாயுதமோ?
(எந்தப் பெண் என்று அடுத்து சொல்கிறார்)
தென்னன் அங்கத் திருக்கை அம்போருக கைந்நீற்றின் மாற்றி
தென்னன் - முன்னும் பின்னும் கூன் விழுந்திருந்த நெடுமாறன் என்னும் பாண்டியனின்
அங்கத் திருக்கை - அங்கக் கூனாகிய குறைபாட்டை
அம்போருக - தாமரை போன்ற
கைந்நீற்றின் - தன் திருக்கையினில் தரித்த விபூதியால்
மாற்றி - நீக்கி
மார்பிலும் முதுகிலும் என்று இரண்டு இடங்களில் உடலில் கூன் பெற்ற நெடுமாறன் என்ற பாண்டிய மன்னனின் அங்கக் குறைபாட்டை தாமரை போன்ற தன் திருக்கையில் தரித்த விபூதியால் நீக்கி..
தென்னூல் சிவபத்தி ருக்கு ஐயம் போக உரைத்தோன் சிலம்பில் சிறுமிதற்கே
தென்னூல் - தமிழ் நூலும்
சிவபத்தி - சிவபக்தியை உண்டாக்குவதும்
ருக்கு - ரிக் வேத சாரமுமாகிய தேவாரப் பாக்களை
ஐயம் போக - பரசமய நூல்களால் உண்டாகும் 'எச்சமயம் பெரிது?' எனும் ஐயம் தீரும்படியாக
உரைத்தோன் - பாடி அருளிய திருஞானசம்பந்தராகத் தோன்றிய முருகக் கடவுளின்
சிலம்பில் - மலையின் கண் வாழும்
சிறுமிதற்கே - இந்தச் சிறுமி தனக்கே
தமிழ் நூலும், சிவ பக்தியை உண்டாக்குவதும், ரிக் வேதத்தின் சாரமுமான தேவாரப் பாக்களை, பர சமய நூல்களால் உண்டாகும் சந்தேகம் தீரும் படியாகப் பாடி அருளிய ஞானசம்பந்தராக தோன்றிய குமாரக் கடவுளின் மலையில் வாழும் இந்தச் சிறுமி தனக்கே.
பொழிப்புரை:
சம்பந்தப் பெருமானாகத் தோன்றி சமணத்தைத் தழுவிய பாண்டியனின் கூனைத் திருநீறு பூசி மாற்றியவனும், எது உண்மையான சமயம் என்று தெரியாமல் இருக்கும் சந்தேகத்தைப் போக்கி, "சிவனே பரம்பொருள்" என்ற உண்மையைத் தன் தேவாரப் பாக்களின் மூலமாக மொழிந்தருளியவனுமான முருகப்பெருமானின் மலையில் வாழும் இப் பெண்ணின் கண் ஆழ்ந்த கடலோ? அழகிய தாமரையோ? விஷத்தைப் போன்று கொடுமையானதோ? திருமால் தரித்திருக்கும் கூர்மையான பாணமோ? அல்லது வேலாயுதமோ?
.jpg)
Comments
Post a Comment