கந்தர் அந்தாதி - செய்யுள் 95

திறவா வனக புரிவாச னீக்கச் சிகரிநெஞ்சந்
திறவா வனச முனியைவென் றோய்தென் றிசைத்திருச்செந்
திறவா வனமயி லோயந்த காலமென் சிந்தைவைக்கத்
திறவா வனநின் றிருவான தண்டைத் திருவடியே 

பதம் பிரித்த வடிவம்:

திறவு ஆ அனக புரி வாசல் நீக்க சிகரி நெஞ்சம்
திறவு ஆ வனச முனியை வென்றோய்! தென்திசை
(திருச்செந்) தில் தவா வன மயிலோய்! அந்தக் காலம் என் சிந்தை வைக்க
திறவாவன நின் திருவான தண்டை திருவடியே

பொருள்:

திறவு ஆ அனக புரி வாசல் நீக்க 

அனக புரி - பாபமற்ற கயிலாயத்தின்

வாசல் நீக்க - கதவைத் திறப்பதற்கு

திறவு ஆ - திறவுகோல் ஆனவனே

பாபமற்ற கயிலாயத்தின் கதவை திறப்பதற்கு திறவுகோல் ஆனவனே!

சிகரி நெஞ்சம் திறவு  - கிரௌஞ்ச கிரியின் மார்பு பிளக்கும்படிச் செய்து

- ஆச்சரியமான விதத்தில்

வனச முனியை வென்றோய்! 

வனச முனியை - தாமரையில் வாழும் பிரமனையும் 
வென்றோய் - ஜெயித்தவனே! 

தாமரையில் வாழும் பிரமனையும் ஜெயித்தவனே!

தென்திசை திருச்செந்தில் தவா வன மயிலோய்! 

தென்திசை - தெற்கு திசையில் உள்ள

திருச்செந்தில் - திருச்செந்தூர்ப் பதியை விட்டு

தவா - நீங்காமல் அமைந்து அருளுகின்ற

வன மயிலோய் - அழகிய மயில்வாகனத்தை உடையவனே! 

தெற்கு திசையில் உள்ள திருச்செந்தூரை விட்டு நீங்காமல் அமைந்து அருளுகின்ற அழகிய மயில் வாகனத்தை உடையவனே!

அந்தக் காலம் என் சிந்தை வைக்க

அந்தக் காலம் - என் உடல் அழியும் அந்தக் கடைசி காலத்தில்

என் சிந்தை வைக்க - என் மனதை ஒரு வழிப்படுத்த

என் உடல் அழியும் அந்த இறுதி நேரத்தில் என் மனதை ஒரு வழிப்படுத்த

திறவாவன நின் திருவான தண்டை திருவடியே

திறவாவன - அடைக்கல ஸ்தானம் எதுவென்றால்

நின் திருவான தண்டை திருவடியே - உனது தண்டை அணிந்த திருத்தாள்களே.

அடைக்கல ஸ்தானம் எதுவென்றால் உனது தண்டை அணிந்த திருத்தாள்களே.

பொழிப்புரை:

சிவகதி அடைவதற்கு கயிலாயத்தின் திறவுகோலாய் இருப்பவனே! கிரௌஞ்ச கிரியை அழித்தவனே! பிரமனைச் செற்றவனே! செந்திலில் சதாகாலமும் விளங்கும் மயில் வாகனனே! என் உடல் அழியும் அந்தி காலத்தில் என் மனது தண்டை அணிந்த உன் திருவடியில் அடைக்கலம் அடைய வேண்டும். 

Comments