கந்தர் அந்தாதி - செய்யுள் 94
சேதிக் கனைத்து களதாக்கு நோக்கினன் செல்வசெந்திற்
சேதிக் கனைத்து நிலைபெறச் சூரங்கஞ் சீரங்கமால்
சேதிக் கனைத்து வரிதோ யயில்கொடெற் சேர்க்கவந்தாற்
சேதிக் கனைத்து வருமா மறலி திறலினையே
பதம் பிரித்த வடிவம்:
சேது இக்கனைத் துகளதாக்கும் நோக்கினன் செல்வ!
(செந்தில்) சே! திக்கு அனைத்தும் நிலை பெறச் சூர் அங்கம் சீரங்கம் மால்
சே திக்க நைத்து உவரி தோய் அயில் கொடு எற் சேர்க்க வந்தால்
சேதி கனைத்து வரு மா மறலி திறலினையே
பொருள்:
சேது இக்கனைத் துகளதாக்கும் நோக்கினன் செல்வ!
சேது இக்கனை - சிவந்த கரும்புவில்லை உடைய மன்மதனை
துகளதாக்கும் - சாம்பலாகச் செய்த
நோக்கினன் செல்வ! - நெருப்பு விழியுடைய சிவபிரானின் குமரனே!
சிவந்த கரும்பு வில்லை உடைய மன்மதனைச் சாம்பலாகச் செய்த நெருப்பு விழியுடைய சிவபிரானின் குமரனே!
செந்தில் சே! - செந்தில் ஆண்டவனே!
திக்கு அனைத்தும் நிலை பெறச் சூர் அங்கம் சீரங்கம் மால் சே திக்க நைத்து
திக்கு அனைத்தும் நிலை பெற - (மாமரமாய் நின்ற சூரனால் நிலைகுலைந்த) எட்டுத் திக்குகளும் முன்போல் ஸ்திரமான நிலையை அடையவும்
சீரங்கம் மால் - ஸ்ரீரங்கநாதராகிய திருமாலின்
சே திக்க - மகனாம் பிரம்மா திகைப்படையவும்
சூர் அங்கம் நைத்து - சூரபத்மனின் உடலை வருத்தி அழித்து
மாமரமாய் நின்ற சூரனால் நிலைகுலைந்த எட்டுத் திக்குகளும் முன் போல் ஸ்திரமான நிலையை அடையவும் திருமாலின் மகனாம் பிரம்மன் திகைப்படையவும் சூரபத்மனின் உடலை வருத்தி அழித்து
உவரி தோய் அயில் கொடு
உவரி தோய் - பின் சமுத்திரத்தில் குளித்து வந்த
அயில் கொடு - வேலாயுதத்தைக் கையில் ஏந்திக்கொண்டு
பின் சமுத்திரத்தில் குளித்து வந்த வேலாயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு..
எற் சேர்க்க வந்தால் சேதி கனைத்து வரு மா மறலி திறலினையே
எற் சேர்க்க வந்தால் - எமதூதர்கள் என்னைப் பிடித்துப் போக வந்தால்
கனைத்து வரு - பெரிய சப்தத்தைப் போட்டுக் கொண்டு வரும்
மா - எருமை வாகனத்தை உடைய
மறலி திறலினையே - எமனுடைய வலிமைத்திறனை
சேதி - நீ கண்டித்து அடக்க வேண்டும்
எம தூதர்கள் என்னைப் பிடித்துப் போக வந்தால் பெரிய சத்தத்தை போட்டுக் கொண்டு வரும் எருமை வாகனத்தை உடைய எமனுடைய வலிமைத்திறனை நீ கண்டித்து அடக்க வேண்டும்.
பொழிப்புரை:
செந்தில் ஆண்டவனே! மன்மதனை எரித்த சிவபிரானின் நெற்றிக்கண்ணிலிருந்து உதித்த குமரனே! பிரம்மன் முதலான தேவர்களெல்லாம் திகைக்கவும் உலகெலாம் நிலைத்து விளங்கவும் சூரபத்மனை அழித்தவனே! என்னைப் பிடிக்க எமபடர்கள் வரும் போது, கையில் வலிய வேலாயுதத்தை ஏந்தி, எமனுடைய வலிமையை நீ தோற்கடிக்க வேண்டும்.
.jpg)
Comments
Post a Comment