கந்தர் அந்தாதி - செய்யுள் 93

செல்லலை யம்பொழில் சூழ்செந்தி லானறி யானிறைகைச்
செல்லலை யம்பொழி லெங்கணு மேற்ப வெனத்தெறித்த
செல்லலை யம்பொழி லங்கைக் கருடிரு மானிறம்போற்
செல்லலை யம்பொழி லாகவ மாதுயிர் சேதிப்பதே 

பதம் பிரித்த வடிவம்:

செல் அலை அம் பொழில் சூழ் செந்திலான் அறியான், இறை கை
செல்லல் ஐயம் பொழில் எங்கணும் ஏற்ப எனத் தெறித்த
செல்லல் ஐயம் பொழில் லங்கைக்கு அருள் திருமால் நிறம் போல்
செல் அல் ஐயம்பு ஒழி லாகவம் மாது உயிர் சேதிப்பதே

பொருள்:

செல் அலை அம் பொழில் சூழ் செந்திலான் அறியான்

செல் அலை அம் பொழில் - மேகத்தை முட்டும் அளவு வளர்ந்துள்ள அழகிய சோலைகள்

சூழ் செந்திலான் - நிறைந்துள்ள செந்திற்பதியில் உறைபவன் 

அறியான் - அறிகின்றான் இல்லை 

மேகத்தை முட்டும் அளவு வளர்ந்து உள்ள அழகிய சோலைகள் சூழ்ந்த செந்தில் பதியில் உறையும் முருகப்பெருமான் அறிகின்றான் இல்லை.

இறை கை செல்லல் ஐயம் பொழில் எங்கணும் ஏற்ப எனத் தெறித்த

பொழில் எங்கணும் - உலகம் எங்கும்

ஐயம் ஏற்ப செல்லல் என - பிச்சை வாங்கப் போக வேண்டாம் எனச் சொல்லி

இறை கை தெறித்த - சிவனாரது கையில் இருந்த பிரம்ம கபாலத்தில் தனது ரத்தத்தை ஒழுகவிட்டவரும் 

உலகம் எங்கும் பிச்சை எடுக்கப் போக வேண்டாம் எனச் சொல்லி சிவனாரது கையில் இருந்த பிரம்ம கபாலத்தில் தனது ரத்தத்தை ஒழுகவிட்டவரும்...


செல்லல் ஐயம் பொழில் லங்கைக்கு அருள் திருமால் நிறம் போல்

செல்லல் ஐயம் - துன்பத்தையும் பயத்தையும் 

பொழில் லங்கைக்கு அருள் - பெருமையுடைய இலங்கைக்கு உண்டாக்கியவருமான

திருமால் நிறம் போல் - ராமபிரானாம் மகாவிஷ்ணுவின் கரிய நிறம் போல

துன்பத்தையும் பயத்தையும் பெருமை நிறைந்த இலங்கைக்கு உண்டாகிய வருமான ராமபிரானாம் மகாவிஷ்ணுவின் கரிய நிறம் போல...

செல் அல் ஐயம்பு ஒழி லாகவம் மாது உயிர் சேதிப்பதே

செல் அல் - விளங்குகின்ற இராக் காலத்தில்

ஐயம்பு - மன்மதனின் பஞ்ச பாணங்களும்

லாகவம் மாது உயிர் - மிக நுட்பமான அல்லது மெல்லியிலாளான இப்பெண்ணின் உயிரானது

ஒழி - அழியும்படி

சேதிப்பதே - வதைக்கின்றதை (செந்தில் ஆண்டவன் அறிகின்றான் இல்லை)

விளங்குகின்ற இரவுப் பொழுதில், மன்மதனின் பஞ்சபாணங்களும் மிக நுட்பமான இப்பெண்ணின் உயிரானது அழியும்படி வதைக்கின்றது. இதை செந்திலான் அறியவில்லை.

பொழிப்புரை:

சிவனார் கைக் கபாலத்தில் ரத்தத்தை பாய்ச்சியவரும் இலங்கையை அழித்தவருமாகிய திருமாலின் நிறம் போல் கறுத்திருக்கும் இராக்காலத்தில் மன்மதனின் பாணங்கள் இப் பெண்ணின் உயிரை வதைப்பதை திருச்செந்திற்பதியான் அறிகின்றான் இல்லை.

[திருமாலின் செருக்கை அடக்க ரத்த பிட்சைக்காக அவரிடம் வந்த வைரவருக்கு அஞ்சித் திருமால் தனது மத்தகத்தைப் பிளந்து, வைரவர் கையில் இருந்த பிரம்ம கபாலத்தில் தமது ரத்தத்தை நெற்றி நரம்பின் வழியே ஒழுகவிட்டார்]

Comments