கந்தர் அந்தாதி - செய்யுள் 92
சேடி வணங்கு வளைத்தோ ளனெப்புணர் சேயவட
சேடி வணங்கு திருத்தணி காவல நின்செருக்காற்
சேடி வணங்கு கொடியிடை யாரையென் செப்புமுலைச்
சேடி வணங்கு தலைக்களி றீந்தது செல்லநில்லே
பதம் பிரித்த வடிவம்:
சேடு இ அணங்கு வளை தோள் எனப் புணர் சேய!
(வட) சேடி வணங்கு திருத்தணி காவல! நின் செருக்கால்
சேடி வணங்கு கொடி இடையாரை என் செப்பு?
(முலைச்) சேடு இவ்வணம் குதலைக் களிறு ஈந்தது செல்ல நில்லே
பொருள்:
சேடு இ அணங்கு வளை தோள் எனப் புணர் சேய!
சேடு - அழகாக இருக்கிறது
இ அணங்கு வளை தோள் - இந்த மங்கையின் வளை அணிந்த தோள்கள்
என - என்று புகழ்ந்து சொல்லி
புணர் - முன்பு என்னைப் புணர்ந்த
சேய! - குமாரக் கடவுளே!
இந்த மங்கையின் வளை அணிந்த தோள்கள் மிக அழகாக இருக்கிறது என்று புகழ்ந்து சொல்லி, முன்பு என்னைப் புணர்ந்த குமார கடவுளே!
வடசேடி வணங்கு திருத்தணி காவல!
வடசேடி வணங்கு - வெள்ளிமலையின் வட பாரிசத்தில் வாழும் வித்யாதாரர்கள் வணங்குகின்ற
திருத்தணி காவல! - தணிகை மலைக்கு அதிபனே!
வெள்ளிமலையின் வட பாரிசத்தில் வாழும் வித்யாதரர்கள் வணங்குகின்ற திருத்தணிகை மலைக்கு அதிபனே!
நின் செருக்கால் சேடி வணங்கு கொடி இடையாரை என் செப்பு?
நின் செருக்கால் - நீ தழுவிய பெருமிதத்தால்
சேடி வணங்கு கொடி இடையாரை - இறுமாப்புக் கொண்டு துவளுகின்ற கொடி போன்ற இடையுடைய பரத்தையரை
என் செப்பு? - நான் நிந்தித்துப் பேச என்ன இருக்கிறது?
நீ தழுவிய பெருமிதத்தால் இறுமாப்புக் கொண்டு துவளுகின்ற கொடி போன்ற இடையை உடைய பரத்தையரை நான் நிந்தித்துப் பேச என்ன இருக்கிறது?
முலைச் சேடு இவ்வணம் குதலைக் களிறு ஈந்தது செல்ல நில்லே
முலைச் சேடு - என் யௌவன அழகை
இவ்வணம் - இம்மாதிரியாகக் குலைக்கும் படி
குதலைக் களிறு - மழலை மொழி பேசும் இந்த பாலகன்
ஈந்தது - செய்துவிட்டான்
செல்ல நில்லே - என் அருகில் வராமல் அங்கேயே நின்று கொள்.
என் யௌவனம் இவ்வாறு குலையும் படி, மழலை மொழி பேசும் இந்த பாலகன் செய்து விட்டான். என் அருகில் வராமல் அங்கேயே நின்று கொள்.
பொழிப்புரை:
முன்பு என் அழகைப் புகழ்ந்து என்னைப் புணர்ந்த கந்தனே! தேவர்கள் போற்றும் திருத்தணி மலைக்கு அதிபனே! உன்னைக் கூடிய பெருமையினால் இறுமாப்புக் கொண்டிருக்கும் பரத்தையரை நான் நிந்தித்துப் பேச என்ன இருக்கிறது? அதனால் என்ன பயன்? இந்த என் குழந்தை என்னுடைய யௌவன அழகைச் சீர்குலையச் செய்துவிட்டான். எனவே புறக்கண்ணால் உன்னைக் காணவரும் அடியார்களாகிய பரத்தையரிடமே நீ போய்க்கொள். நீ நானற, அத்வைதமாக நான் உன்னிடம் முன்பே கலந்து விட்டேன்.
.jpg)
Comments
Post a Comment