கந்தர் அந்தாதி - செய்யுள் 91
திகிரி வலம்புரி மாற்கரி யார்க்குப தேசஞ்சொன்ன
திகிரி வலம்புரி செய்யா ரிலஞ்சிசெந் தூர்கனதந்
திகிரி வலம்புரி வேறும் படைத்தருள் சேய்தணியில்
திகிரி வலம்புரி சூடிய வாநன்று சேடியின்றே
பதம் பிரித்த வடிவம்:
திகிரி வலம்புரி மாற்கு அரியார்க்கு உபதேசம் சொன்ன
திகிரி வலம்புரி செய் ஆர் இலஞ்சி செந்தூர் கனத்
(தந்) திகிரி வலம் புரிவேறும் படைத்தருள் சேய் தணியில்
திகிரி வலம்புரி சூடியவா நன்று சேடி இன்றே
பொருள்:
திகிரி வலம்புரி மாற்கு அரியார்க்கு உபதேசம் சொன்ன திகிரி
திகிரி வலம்புரி - சக்ராயுதத்தை வலது கையில் தரித்துள்ள அல்லது சக்கரம், வலம்புரி சங்கு ஆகியவற்றை இருகரங்களிலும் ஏந்தியுள்ள
மாற்கு - திருமாலால்
அரியார்க்கு - தேடிக் கண்டுபிடிக்க அரிதானவரான பரமசிவனுக்கு
உபதேசம் சொன்ன - பிரணவப் பொருளை உபதேசித்த
திகிரி - சுவாமிமலைப் பகுதி
சங்கு சக்கரம் ஏந்திய திருமாலால் தேடியும் காணவொணாத பெரியவரான பரமசிவனுக்கு பிரணவத்தின் பொருளை உபதேசம் செய்த சுவாமி மலை.
வலம்புரி செய் ஆர் இலஞ்சி
வலம்புரி - வலம்புரிச் சங்குகள்
செய் - வயல்களில்
ஆர் - நிறைந்திருக்கும்
இலஞ்சி - இலஞ்சிப்பதி
வலம்புரிச் சங்குகள் வயல்களில் நிறைந்திருக்கும் இலஞ்சிப்பதி.
செந்தூர் - திருச்செந்தூர்
கனத் தந்திகிரி - மேகங்கள் சூழ்ந்ததும் பாம்பு போன்ற வடிவுடையதுமான திருச்செங்கோடு
வலம் - திருவலம்
புரிவேறும் படைத்தருள் சேய்
புரிவேறும் - தனக்கு உறைவிடமான வேறு பல தலங்களையும்
படைத்தருள் - உருவாக்கிய
சேய் - குமாரக் கடவுளின்
தன் உறைவிடமான வேறு பல தலங்களையும் உருவாக்கிய குமார கடவுளின்..
தணியில் திகிரி வலம்புரி சூடியவா நன்று சேடி இன்றே
தணியில் - திருத்தணியில்
திகிரி - மூங்கிலானது
வலம்புரி - நந்தியாவர்த்தன மலர்களை
சூடியவா - சூடியிருக்கும் குறிப்பு
நன்று சேடி இன்றே (இன்றே நன்று சேடி) - தோழியே! இத்தினத்தில் நன்றாக அமைந்திருக்கிறது.
திருத்தணியில் மூங்கில் ஆனது நந்தியாவர்த்தன மலர்களை சூடியிருக்கும் குறிப்பு இத்தின்னத்தில் நன்றாக உள்ளது என் தோழியே!
பொழிப்புரை:
தோழியே! திருமாலால் தேடிக் கண்டுபிடிக்க முடியாத பரமசிவனுக்கு உபதேசித்த சுவாமிமலை, இலஞ்சி, செந்தூர், திருச்செங்கோடு, திருவலம் முதலான பல இடங்களிலும் உறைந்திருக்கும் கந்தக் கடவுள் அது திருத்தணிமலை மேல் மூங்கில் நந்தியாவர்த்தனத்தைச் சூடியிருக்கும் குறிப்பு மிக நன்றாக அமைந்துள்ளது.
பின் குறிப்பு:
இது குறிப்புப் பொருள். தலைவி தன் தோழிக்கு உணர்த்தல் என்னும் துறையைச் சார்ந்தது. மூங்கில் மேல் நந்தியாவர்த்தன மலரைச் சூட்டி, தலைவன், தலைவிக்கு, அவள் தன்னைச் சந்திக்க வேண்டிய இடத்தைப் பற்றிக் குறிப்பால் உணர்த்தியுள்ளான்.
நந்தியாவர்த்தன மலர் பகல் நேரத்தில் மலரும். அதனால் இது பகற்குறி எனப்படும். பகல் பொழுதில் தலைவி தன்னை எங்கு சந்திக்க வேண்டும் என்று தலைவன் குறிப்பால் உணர்த்துவது பகற்குறி எனப்படுகிறது.
சிராமலைக் கோவை நூலில் பின்வரும் குறிப்பு உள்ளது.
"புலி மேல் யானை வாழ்ந்திடச் செய்தனர்"
புலி - வேங்கை மரம்
யானை - ஆம்பல் பூ
வேங்கை மரத்தில் ஆம்பல் பூ என்பது அடையாளக் குறி. ஆம்பல் பூ இரவு நேரத்தில் மலரும். அதனால் இது இரவுக்குறி எனப்படும். இரவு நேரத்தில் தலைவி தன்னை எங்கு சந்திப்பது என்று தலைவன் குறிப்பிடுவது இரவுக்குறி ஆகும்.
தலைவி குமார கடவுளின் பல தலங்களுள் தணிகைக்கு மட்டுமே சிறப்பு அடைமொழி கூறியிருப்பதனால் தணிகாசலனே அவளுக்கு உகந்த நாயகன் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறாள்.
"சுந்தரக்கிரி தொல்புவி தனிற்பல எனினும்
இந்த வெற்பினில் ஆற்றவும் மகிழ்ச்சியுண் டெமக்கே"
என்று முருகனே வள்ளியிடம் கூறுவதாகக் கந்த புராணம் குறிப்பிடுகிறது.
செய்யுள் 91 பொருளுரை காணொளி:
.jpg)
Comments
Post a Comment