கந்தர் அந்தாதி - செய்யுள் 90
சித்தத் தரங்கத்தர் சித்தியெய் தத்திரி கின்றதென்னர்ச்
சித்தத் தரங்கத்தர் சந்ததி யேசெந்தி லாய்சலரா
சித்தத் தரங்கத்த ரக்கரைச் செற்றகந் தாதிங்களிஞ்
சித்தத் தரங்கத்தர் சேயா ரணத்தந் திகிரியையே
பதம் பிரித்த வடிவம்:
சித்தத் தரங்கத்தர் சித்தி எய்தத் திரிகின்றது என்
(அர்ச்)சித்து? அத்தர் அங்கத்தர் சந்ததியே! செந்திலாய்!
(சலரா)சித் தத்தரம் கத்து அரக்கரைச் செற்ற கந்தா! திங்கள்
(இஞ்)சித் தத்து அரங்கத்தர் சேய் ஆரண தந்தி கிரி ஐயே!
பொருள்:
சித்தத் தரங்கத்தர் சித்தி எய்தத் திரிகின்றது என் அர்ச்சித்து?
சித்தத் தரங்கத்தர் - கடல் அலை போல் அலைகின்ற மனத்தை உடையவர்
சித்தி எய்த - முத்தி வீடு அடையும் பொருட்டு
திரிகின்றது என் அர்ச்சித்து? - [அர்ச்சித்துத் திரிகின்றது என்?] - ஆடம்பரமாக வெளிபூஜை மட்டும் செய்து வீணாகக் காலத்தைப் போக்குவதால் என்ன பயன்?
கடல் அலை போல் அலைகின்ற மனத்தை உடையவர்கள் முக்தி வீடு அடைவதற்காக ஆடம்பரமாக வெளிபூஜை மட்டும் செய்து வீணாகக் காலத்தைக் கழிப்பதால் என்ன பயன்?
அத்தர் அங்கத்தர் சந்ததியே!
அத்தர் அங்கத்தர் - எந்நாட்டவர்க்கும் சுவாமியும் எலும்பு மாலை பூண்டவருமாகிய சிவனின்
சந்ததியே - மைந்தனே!
எந்நாட்டவர்க்கும் இறைவனும் எலும்பு மாலை அணிந்து வரும் ஆகிய சிவ பெருமானின் மைந்தனே!
செந்திலாய்! - செந்திலாண்டவனே!
சலராசித் தத்தரம் கத்து அரக்கரைச் செற்ற கந்தா!
சலராசி - சமுத்திரத்தின் கண்
தத்தரம் - தத்தம் பெருமையை (கூறி)
கத்து - ஆர்ப்பரித்து வந்த
அரக்கரை - அசுரர்களை
செற்ற - அழித்த
கந்தா! - கந்தக் கடவுளே!
கடலின் கண் தத்தம் பெருமைகளை ஆரவாரத்துடன் கூறி வந்த அசுரர்களை அழித்த கந்தப் பெருமானே!
திங்கள் இஞ்சித் தத்து அரங்கத்தர் சேய் ஆரணத் தந்தி கிரி ஐயே!
திங்கள் இஞ்சித் தத்து - நிலவு கோயில் மதில் மேல் தவழ்ந்து செல்லும் (அளவு உயர்ந்துள்ள)
அரங்கத்தர் - ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் ரங்கநாதரின்
சேய் - பிள்ளையாகிய பிரம்மா (ஓதுகின்ற)
ஆரணத் தந்தி கிரி - வேதங்கள் பூசிப்பதும் பாம்பு போன்ற வடிவம் உடையதுமான செங்கோட்டு மலையில் வசிக்கும்
ஐயே! - சுவாமியே!
நிலவானது கோயில் மதில் மேல் தவழ்ந்து செல்லும் அளவிற்கு உயர்ந்துள்ள ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் ரங்கநாதரின் பிள்ளையாகிய பிரம்மா ஓதும் வேதங்கள் பூசிப்பதும் பாம்பு போல் வடிவுடையதுமான செங்கோட்டு மலையில் வசிக்கும் தலைவனே!
பொழிப்புரை:
பரமேஸ்வரனின் மைந்தனே! கடலின் கண் அசுரர்களை வென்ற கந்தக் கடவுளே! திருமாலின் குமாரனாகிய பிரம்மா ஓதும் வேதங்கள் பூஜிக்கும் நாகாசல வேலவனே! மனத்தை அடக்க முடியாமல், சிலர், முத்திவீடையும் பொருட்டு ஆர்ப்பாட்டமாக பூஜை செய்வதால் என்ன பயன்?
ஆராதனர் ஆடம்பரத்து மாறாது சவாலம் பனத்தும்
ஆவாகன மா மந்திரத்து மடலாலும்
ஆறார்தெச மாமண்டபத்தும் வேதாகமம் ஓதும் தலத்தும்
ஆமாறு எரி தாம் இந்தனத்து மருளாதே
(ஆராதனர் - பொதுத் திருப்புகழ்)
கந்தர் அந்தாதி செய்யுள் 90 விளக்கவுரை:
.jpg)
Comments
Post a Comment