கந்தர் அந்தாதி - செய்யுள் 89

சேலையி லாருந் தவன்சூல மேறச் சினத்தவன்கண்

சேலையி லாருந் திவனோற் பவையர சிந்திரியச்

சேலையி லாரும் பராபரி புக்குறச் சிக்கெனுமிச்

சேலையி லாருந் திறையிட் டனர்தங்கள் சித்தங்களே

பதம் பிரித்த வடிவம்:

சேலை இலார் உந்து அ வன் சூலம் ஏறச் சினத்தவன், கண்

சேல் ஐயில் ஆர் உந்தி வனோற்பவை அரசு, இந்திரியச்

சேலை இலார் உம்பர் ஆப ரிபு குறச் சிக்கெனும்

(இச்) சேலையில் ஆரும் திறை இட்டனர் தங்கள் சித்தங்களே

பொருள்:

சேலை இலார் உந்து அ வன் சூலம் ஏறச் சினத்தவன்

சேலை இலார் - அசோக மரத்தை இருப்பிடமாகக் கொண்ட அமணர்கள்

உந்து அ வன் சூலம் ஏற - உயர்ந்த அந்தக் கழுவில் ஏறி மடியும்படி 

சினத்தவன் - சம்பந்தப் பிள்ளையாகத் தோன்றி, தேவாரம் பாடி ஜெயித்தவன்

அசோக மரத்தை இருப்பிடமாகக் கொண்ட அமணர்கள் கழுவில் ஏறி மடியும்படி ஞானசம்பந்தராகத் தோன்றி அவர்களை வென்றவனும்..

கண் சேல் ஐயில் ஆர் உந்தி வனோற்பவை அரசு

கண் சேல் ஐயில் ஆர் - சேல் மீனையும் வேலாயுதத்தையும் ஒத்த கூரிய விழியை உடைய

உந்தி வனோற்பவை அரசு - காட்டாற்றின் வளப்பத்தை உடைய வள்ளிமலைக் காட்டில் அவதரித்த வள்ளியம்மையின் நாயகன் 

மீன் போன்ற வடிவினையும் வேல் போல் கூர்மையையும் கொண்ட கண்களை உடையவளும் வளமிக்க வள்ளிமலையில் அவதரித்தவளுமான வள்ளியின் நாயகனுமான முருகப்பெருமான் 


இந்திரியச் சேலை இலார் உம்பர் ஆப ரிபு குற

இந்திரியச் சேலை - பஞ்சேந்திரியங்களின் சேட்டைகளை 

இலார் - நீக்கிய தவ சிரேஷ்டர்களுக்கும்

உம்பர் - தேவர்களுக்கும்

ஆப - ஏற்பட்ட ஆபத்துகளுக்கும் காரணமான

ரிபு - சத்ருவகிய சூரபத்மனை 

குற - குற்றும்படி

இந்திரியங்களை வென்ற தவசீலர்களுக்கும் தேவர்களுக்கும் ஆபத்து விளவித்த எதிரியான சூரபத்மனை குற்றும்படி...


சிக்கெனும் இச் சேலையில் ஆரும் திறை இட்டனர் தங்கள் சித்தங்களே

சிக்கெனும் இச் சேலையில் - இறுக்கிக் கட்டிய பீதாம்பரப் பட்டில் 

ஆரும் - எல்லா மாதர்களும்

தங்கள் சித்தங்களே - தத்தம் உள்ளங்களை

திறை இட்டனர் - கப்பமாகச் செலுத்திவிட்டனர்

[மாதர்களின் உள்ளத்தைக் கவர்ந்தான் முருகன்]

["கந்தவேள் மருங்கில் சேலையும்" - கந்தர் அலங்காரம் 27]

இடையில் கட்டிய பீதாம்பரப் பட்டின் அழகால் கவரப்பட்ட மாதர்கள் அனைவரும் தத்தம் உள்ளங்களைப் பறிகொடுத்துவிட்டனர்.

பொழிப்புரை:

அமணர்களைத் தேவாரம் பாடி ஜெயித்தவரும், வள்ளி நாயகனுமாகிய குமாரக் கடவுள், அமணர்களைக் கொல்லும் உறுதியுடன் கட்டியிருந்த பீதாம்பரக் கச்சையின் அழகால் கவரப்பட்ட மாதர்கள் அனைவரும் தத்தம் உள்ளங்களைப் பறிகொடுத்துவிட்டனர்.

Comments