கந்தர் அந்தாதி - செய்யுள் 88
செயலங்கை வாளை யிறைகோயி லைச்சிவ னாரமுதைச்
செயலங்கை வாளை முனிகொண்டல் வாளியைத் தேவர்பிரான்
செயலங்கை வாளை முனைவேலை யன்னவிச் சேயுறையுஞ்
செயலங்கை வாளை யுகள்செந்தில் வாழ்பவள் சேல்விழியே
பதம் பிரித்த வடிவம்:
செயல் அம் கை வாள் ஐ இறை கோயிலை, சிவனார் அமுதை,
செய லங்கை வாளை முனி கொண்டல் வாளியை, தேவர்பிரான்
செயல் அங்கை வாளை முனை வேலை, அன்ன இச்சேய் உறையும்
செய் அலம் கை வாளை உகள் செந்தில் வாழ்பவள் சேல் விழியே.
பொருள்:
செயல் அம் கை வாள் ஐ இறை கோயிலை
செயல் - சேற்றில் உண்டாவதும்
அம் - அழகுள்ளதும்
கை - ஒப்பற்றதும்
வாள் - ஒளி வீசுவதும்
ஐ - சிரேஷ்டமானதும்
இறை கோயிலை - பிரம்மாவின் இருப்பிடமானதுமான தாமரையையும்
சேற்றில் தோன்றுவதும், அழகானதும், ஒப்பற்றதும், ஒளிவீசுவதும், சிரேஷ்டமானதும், பிரம்மாவின் இருப்பிடமானதுமான தாமரையையும்...
சிவனார் அமுதை - சிவபெருமான் அமுது போல் உண்ட ஆலகால விஷத்தையும்...
செய லங்கை வாளை முனி கொண்டல் வாளியை
செய லங்கை - வெற்றி பொருந்திய லங்காபுரியின்
வாளை - பிரகாசமிக்க அழகை
முனி - கோபித்து அழித்த
கொண்டல் - மேக வண்ணனாகிய ஸ்ரீ ராமனின்
வாளியை - பாணத்தையும்
வெற்றி பொருந்திய இலங்கையின் அழகைக் கோபித்து அழித்த ராமபிரானின் அம்பையும் ...
தேவர்பிரான் செயல் அங்கை வாளை
தேவர்பிரான் - இந்திரனின்
செயல் - போர் புரியும்
அங்கை வாளை - கையில் தரித்திருக்கும் உடைவாளையும்
இந்திரன் கையில் தரித்திருக்கும் போர் புரியும் உடைவாளையும்...
முனை வேலை - கூரிய வேலாயுதத்தையும்
அன்ன - ஒத்திருக்கின்றன
இச்சேய் உறையும் - இந்த முருகக் கடவுள் வீற்றிருக்கும்
செய் அலம் கை வாளை உகள் செந்தில் வாழ்பவள் சேல் விழியே
செய் அலம் - நிலத்தை உழுகின்ற கலப்பையை
கை - மோதிக் கோபிக்கின்ற
வாளை - வாளை மீன்கள்
உகள் - புரள்கின்ற
செந்தில் - செந்திற்பதியில்
வாழ்பவள் சேல் விழியே - வசிக்கின்ற இப்பெண்ணின் சேல் மீன் போன்ற கண்களுமே.
நிலத்தை உழுகின்ற கலப்பையில் மோதிக் கோபிக்கின்ற வாளை மீன்கள் புரள்கின்ற செந்திலில் வாழும் இப்பெண்ணின் மீன் போன்ற கண்களுமே.
பொழிப்புரை:
வாளை மீன்கள் கலப்பையை மோதும் வளப்பத்தை உடைய செந்தில் தலத்தில் வாழும் இப்பெண்ணின் கண்கள் இரண்டும் பிரம்மனின் வாசஸ்தலமான தாமரையைப் போலவும், சிவபெருமான் உண்ட ஆலகால விஷத்தைப் போலவும், ராம பாணத்தைப் போலவும், இந்திரனின் கை வாளைப் போலவும், முருகப் பெருமானின் வேலாயுதத்தைப் போலவும் கூர்மையாக விளங்குகின்றன.
[இச் செய்யுள் "கண் நயந்துரைத்தல்" என்ற துறையைச் சேர்ந்தது. பிரமன், சிவன், திருமால், இந்திரன், முருகன் ஆகிய ஐவரையும் தொடர்புபடுத்தி கண்ணுக்கு உவமைப்படுத்தி கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது]
.jpg)
Comments
Post a Comment