கந்தர் அந்தாதி - செய்யுள் 87
திறம்பா டுவர்தண் புனத்தெய்வ மேயென்பர் சேதத்துமாந்
திறம்பா டுவர்முது நீரெனக் காய்பவர் செந்தினைமேல்
திறம்பா டுவரிதழ் கண்டுரு காநிற்பர் செப்புறச்செந்
திறம்பா டுவரி லிவர்வல் லவர்நஞ் செயல்கொள்ளவே
பதம் பிரித்த வடிவம்:
திறம் பாடுவர்; "தண் புனத் தெய்வமே" என்பர்; "சேதத்து
(மாந்) திறம் பாடு உவர் முது நீர்" எனக் காய்பவர்; செம் தினை மேல்
திறம்பாள் துவர் இதழ் கண்டு உருகா நிற்பர் செப்புற;
(செந்)தில் தம் பாடு வரில் இவர் வல்லவர் நம் செயல் கொள்ளவே
பொருள்:
திறம் பாடுவர் - உன்னுடைய சாமர்த்தியத்தைப் புகழ்ந்து பேசுகின்றார்
"தண் புனத் தெய்வமே" என்பர் - குளிர்ந்த தினைப் புனத்தில் வாழும் தேவதையே என்று புகழ்கின்றார்
[இவர் யார் எனில்]
"சேதத்து மாந் திறம் பாடு உவர் முது நீர்" எனக் காய்பவர்
சேதத்து - என்றும் கெடுதலையே செய்து வந்த
மா - மாமரமாய் நின்ற சூரபத்மன்
திறம் - தனது சுற்றத்தாருடன்
உவர் முது நீர் - உவர்ப்பை உடைய பெரிய சமுத்திரத்தில்
பாடு - அழிந்து போனான்"
என - என்று தேவர்களெல்லாம் பேசும் படியாக
காய்பவர் - அவனை அழித்த கந்தக் கடவுள் ஆவார்.
என்றும் கெடுதலையே செய்து வந்தவனும் மாமரமாய் நின்றவனுமான சூரபத்மன் தன் சுற்றத்தாருடன் கடலில் அழிந்து போனான் என்று தேவர்களெல்லாம் பேசுமாறு அவனை அழித்த கந்தக் கடவுள் ஆவார்.
செம் தினை மேல் திறம்பாள் துவர் இதழ் கண்டு உருகா நிற்பர் செப்புற
செம் தினை மேல் - செழுமையான தினைப் புனத்திலிருந்து
திறம்பாள் - நீங்கிச் செல்லாத [ஏ வள்ளி நாயகியே!]
துவர் - பவளம் போன்ற
இதழ் கண்டு - உன்னுடைய அதரத்தைப் பார்த்து
செப்புற - ஏதாவது மறுமொழி வராதா என்று
உருகா நிற்பர் - சித்தம் குலைந்து நிற்கின்றார்
செழுமையான தினைப்புனத்தில் இருந்து நீங்காத வள்ளியின் பவளம் போன்ற அதரத்தைப் பார்த்து ஏதாவது மறுமொழி வராதா என்று சித்தம் குலைந்து நிற்கின்றார்.
[இப்பேற்பட்டவர்]
செந்தில் தம் பாடு வரில் இவர் வல்லவர் நம் செயல் கொள்ளவே
செந்தில் தம் பாடு வரில் -திருச்செந்தூர் ஆகிய தம் பதியிலும் இதே அன்பைக் காட்டினால்
நம் செயல் கொள்ளவே - நம்முடைய உபசாரத்தைக் கொள்ள
இவர் வல்லவர் - இவர் தகுதி உள்ளவரே
இப்படிப்பட்டவர் திருச்செந்தூர் ஆகிய தம் பதியிலும் இதே அன்பை காட்டினால் நம்முடைய உபச்சாரத்தை கொள்ள இவர் தகுதி உள்ளவராவார்.
பொழிப்புரை:
சூரனைச் சுற்றத்தாருடன் சமுத்திரத்தில் அழித்த கந்தக் கடவுள் இங்கு வந்து உன்னுடைய திறமையைப் புகழ்ந்து, "வன தேவதையே!" என்று உன்னை அழைத்து உன் இதழைப் பார்த்து உருகி நிற்கின்றார். தன்னுடைய பதியான திருச்செந்தூரிலும் இதே அன்பை அவர் காட்டினால் நீ அவரை ஏற்றுக் கொள்ளலாம்.
.jpg)
Comments
Post a Comment