கந்தர் அந்தாதி - செய்யுள் 86
சேறலைத் தாறலைக் கப்பா லெழுந்து செழுங்கமுகிற்
சேறலைத் தாறலைக் குஞ்செந்தி லாய்சிந்தை தீநெறியிற்
சேறலைத் தாறலைத் தீர்க்குங் குமார திரியவினைச்
சேறலைத் தாறலைக் கத்தகு மோமெய்த் திறங்கண்டுமே
பதம் பிரித்த வடிவம்:
சேறு அலைத்து ஆறு அலைக்கு அப்பாலெழுந்து செழும் கமுகில்
சேல் தலை தாறு அலைக்கும் செந்திலாய், சிந்தை தீ நெறியில்
சேறலை தாறு அலை தீர்க்கும் குமார, திரிய வினைச்
சேறு அலைத்து ஆறலைக்கத் தகுமோ? மெய்த்திறம் கண்டுமே
பொருள்:
சேறு அலைத்து ஆறு அலைக்கு அப்பாலெழுந்து செழும் கமுகில் சேல் தலை தாறு அலைக்கும் செந்திலாய்
சேறு - சேற்றை
அலைத்து - உழக்கி
ஆறு அலைக்கு - ஆற்றின் அலையில்
அப்பாலெழுந்து - மேலே எழுந்து
செழும் - வளப்பமான
கமுகில் - பாக்கு மரத்தில்
சேல் - சேல் மீன்கள்
தலை - மரத்தின் உச்சியில் இருக்கும்
தாறு - குலைகளை
அலைக்கும் - மோதித் தாக்கும் (வளப்பத்தை உடைய)
செந்திலாய் - செந்தில் பதியோனே
சேற்றைக் கலக்கி ஆற்றின் ஆற்றின் அலையில் மேலெழுந்து வளமிகு பாக்கு மரத்தின் உச்சியில் இருக்கும் குலைகளை சேல் மீன்கள் மோதித் தாக்கும் செந்திற்பதியோனே!
சிந்தை தீநெறியில் சேறலை தாறு அலை தீர்க்கும் குமார
சிந்தை - என் சித்தமானது
தீநெறியில் - கெட்ட மார்க்கத்தில்
சேறலை - போய்ச் சேருவதையும்
தாறு அலை - அளவில்லாத அஞ்ஞான இருளை அடைவதையும்
தீர்க்கும் - தீர்க்கின்ற
குமார - குமாரக் கடவுளே!
என் மனமானது கெட்ட மார்க்கத்தில் போய்ச் சேர்வதையும் அஞ்ஞான இருளில் மூழ்குவதையும் தீர்க்கும் குமாரக் கடவுளே!
திரிய வினைச் சேறு அலைத்து ஆறலைக்கத் தகுமோ? மெய்த்திறம் கண்டுமே
திரிய - மாறுபடும்படி
வினைச் சேறு - இருவினைகளால் ஏற்படும் பிரபஞ்சச் சேற்றில்
அலைத்து - என்னை உழல வைத்து
ஆறலைக்கத் தகுமோ? - வழிப்பறி செய்பவர் போல் என் உயிரைப் போக்கிவிடத் தகுமோ?
மெய்த்திறம் கண்டுமே - உன்னுடைய அருட்பிரகாசத்தின் உண்மை திறனை உணர்ந்து, அதுவே பற்றுக்கோடாகக் கருதி இருக்கும் என்னை (ஆறலைக்கத் தகுமோ?)
உன் அருளின் உண்மை திறனை உணர்ந்து அதுவே பற்றுக்கோடாகக் கருதி இருக்கும் என்னை,
இருவினைகளால் மாறி மாறி ஏற்படும் பிரபஞ்ச சேற்றில் உழல வைத்து, வழிப்பறி செய்பவர் போல் என் உயிரைப் போக்கிவிடத் தகுமோ?
பொழிப்புரை:
செந்திலாண்டவனே! என் மனம் அவ நெறியில் சென்று அஞ்ஞான இருளில் மூழ்குவதைத் தவிர்த்தாளும் குமாரக் கடவுளே! உன் அருளின் வலிமையை உணர்ந்து அதையே பற்றுக்கோடாகக் கருதி இருக்கும் என்னை இல்லறச்சேற்றில் மூழ்க விடுவது உன் கருணைக்கு ஏற்ற செயல் அன்று.
.jpg)
Comments
Post a Comment