கந்தர் அந்தாதி - செய்யுள் 85
சேந்த மராத்துடர் தானவர் சேனையைத் தெண்டிரைக்கண்
சேந்த மராத்துடன் கொன்றசெவ் வேல திருமுடிமேற்
சேந்த மராத்துட ரச்சூடி மைந்த திளைத்திளைத்தேன்
சேந்த மராத்துட ரின்னாரி யென்னுமிச் சேறுபுக்கே
பதம் பிரித்த வடிவம்:
சேந்த, மராத்துடர் தானவர் சேனையைத் தெள் திரைக் கண்
சேந்து, அ மராத்துடர் கொன்ற செவ்வேல! திருமுடிமேல்
சே இந்து அம் அரா துள்தர சூடி மைந்த! திளைத்து இளைத்தேன்
சே, தமரா துடர் இல் நாரி என்னும் இச்சேறு புக்கே
பொருள்:
சேந்த - கந்தக் கடவுளே!
மராத்துடர் தானவர் சேனையைத் தெள் திரைக் கண் சேந்து
மராத்துடர் - கடப்ப மாலையை அணிந்து
தானவர் சேனையை - அசுரர்களின் கூட்டத்தை
தெள் திரை - தெளிந்த அலைகளையுடைய சமுத்திரத்தில்
கண் சேந்து - கண்கள் கோபத்தால் சிவந்து
கடப்ப மாலையை அணிந்து அசுரர்களின் கூட்டத்தை தெளிந்த அலைகளுடைய சமுத்திரத்தில் கண்கள் கோபத்தால் சிவந்து...
அ மராத்துடர் கொன்ற செவ்வேல!
அ மராத்துடர் - அந்த மாமரமாய் நின்ற சூரனுடன்
கொன்ற செவ்வேல! - போரிட்டுக் கொன்ற அழகிய வேலாயுதத்தை உடையவனே!
அங்கு (கடலில்) மாமரமாய் நின்ற சூரனுடன் போரிட்டு கொன்ற அழகிய வேலாயுதத்தை உடையவனே!
திருமுடிமேல் சே இந்து அம் அரா துள்தர சூடி மைந்த!
திருமுடிமேல் - அழகிய ஜடையின் மேல்
சே இந்து - இளம் பிறை
அம் - கங்கா ஜலம்
அரா - பாம்பு
துள்தர - (அவர் நடனமாடும் போது, இவையெல்லாம்) துள்ளிக் குதிக்கும்படி
சூடி - சூடி இருக்கும் பரமசிவனின்
மைந்த! - குமாரனே!
அழகிய ஜடை மேல் (அவர் ஆடும் போது துள்ளிக் குதிக்கும்) பிறை சந்திரனையும் கங்கையையும் பாம்பையும் சூடி இருக்கும் பரமசிவனின் குமரனே!
திளைத்து இளைத்தேன்; சே; தமராத்துடர் இல் நாரி என்னும் இச்சேறு புக்கே
தமராத்துடர் - சுற்றமாகப் பற்றிக்கொள்ளும்
இல் - மனை வாழ்க்கை
நாரி - பெண்டிர் (பெண்ணாசை)
என்னும் - என்று சொல்லப்படுகின்ற
இச்சேறு புக்கே - இந்தப் பிரபஞ்ச சேற்றில் புகுந்து
திளைத்து இளைத்தேன் - மெலிந்து வருந்துகிறேன்
சே - என்னைக் காத்தருள்வாயாக
பற்றிக்கொள்ளும் மனைவி வாழ்க்கை பெண்டிர் எனும் பிரபஞ்ச சேற்றில் மெலிந்து வருந்துகிறேன்; என்னைக் காத்தருள்வாயாக.
பொழிப்புரை:
சமுத்திரத்தில் மா மரமாய் நின்ற சூரனையும் அரக்கர் சேனையையும் வென்ற, கடப்ப மாலை அணிந்த வீரனே! சென்னியின் கண் சந்திரனையும் கங்கையையும் பாம்பையும் சூடிய சிவபிரானின் குமரனே! இல்லறச் சேற்றில் விழுந்து, வழி தடவித் தெரியாமல் வருந்துகின்ற என்னை, நீ தான் காப்பாற்றி அருள வேண்டும்.
.jpg)
Comments
Post a Comment