கந்தர் அந்தாதி - செய்யுள் 84

சிவசிவ சங்கர வேலா யுததினை வஞ்சிகுறிஞ்
சிவசிவ சங்கர வாமயில் வீர செகந்திருக்கண்
சிவசிவ சங்கர மாவை யெனுந்திற லோய்பொறைவா
சிவசிவ சங்கர மான்பட்ட வாவொளி சேர்ந்தபின்னே

பதம் பிரித்த வடிவம்:

சிவ சிவ சம் கர வேலாயுத! தினை வஞ்சி குறிஞ்(சி)
வசி வசம் கரவா மயில் வீர! செகம் திருக்கண் 
சிவ சிவ சங்கர மாவை எனும் திறலோய்! பொறை வா(சி)
வசிவசம் கர மான் பட்ட ஆ ஒளி சேர்ந்த பின்னே 

பொருள்:

சிவ சிவ சம் கர வேலாயுத! 

சிவ - ஏக வஸ்துவாகிய
சிவ - சிவபெருமானிடத்தில்
சம் - ஜெனித்து
கர வேலாயுத - கரத்தில் வேலாயுதத்தைப் பிடித்தவனே!

ஏக நாயகனான சிவபெருமானிடம் தோன்றி, கையில் வேலை ஏந்தியவனே!

தினை வஞ்சி குறிஞ்சி வசி வசம் கரவா மயில் வீர! 

தினை - தினைப் புனத்தைக் காத்து வந்த
வஞ்சி - வஞ்சிக்கொடி போன்ற
குறிஞ்சி வசி - குறிஞ்சி நிலத்தில் வசித்து வந்த வள்ளியின்
வசம் கரவா - பக்கத்தை விட்டு நீங்காத
மயில் வீர! - மயில்வீரனே! 

தினைப் புனத்தை காத்தவளும் வஞ்சிக்கொடி போன்றவளும் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்து வந்தவளுமான வள்ளியின் பக்கத்தை விட்டு நீங்காத மயில்வீரனே!

செகம் திருக்கண் சிவ சிவ சங்கர மாவை எனும் திறலோய்!

செகம் - இவ்வுலகத்தில்  
திருக்கண் - உன் சிவந்த விழியால்
சங்கர மாவை - (சம்ஹார மாவை) - எல்லாவற்றையும் அழித்து வந்தவனும் மாமரமாக நின்றவனுமான சூரபத்மனை
சிவ சிவ -கோபிப்பாயாக, கோபிப்பாயாக
எனும் - என்று கூறி வேலாயுதத்தை ஏவிய
திறலோய்! - வலிமையுடைய வீரனே!

எல்லாவற்றையும் அழித்து வந்தவனும் மாமரமாய் நின்றவனுமான சூரபத்மனை, இவ்வுலகத்தில், உன் சிவந்த விழியால், "சென்று கோபிப்பாயாக கோபிப்பாயாக" என்று கூறி, வேலாயுதத்தை ஏவிய வலிமைமிக்க வீரனே!

பொறை வாசி வசிவசம் கர மான் பட்ட ஆ ஒளி சேர்ந்த பின்னே 

பொறை - மிகுந்த பொறுமை எனும்
வாசி - பாணத்தின்
வசிவசம் - கூர்மையினால்
கர - கோபம் முதலான
மான் - மிருகங்கள் (மான் என்பது மிருகங்களுக்கான பொதுப்பெயர்)
பட்ட - விழுந்து விட்டன
ஒளி சேர்ந்த பின்னே - உனது அருட்பிரகாசம் என்னிடம் கலந்தவுடனே
ஆ - என்ன ஆச்சரியம்!

உனது அருட்பிரகாசம் என்னிடம் கலந்த உடனே, மிகுந்த பொறுமை எனும் அம்பின் கூர்மையினால் கோபம் முதலான மிருகங்கள் விழுந்து விட்டன. என்ன ஆச்சரியம்!

மனனே பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே என்று கந்தர் அநுபூதி பாடல் 37 இல் பாடுகிறார் அருணகிரிநாதர். [பொறுமை என்னும் ஞான வாளினால் அகந்தையை அடியோடு வெட்ட வேண்டும்]

பொழிப்புரை:

ஏகனாம் சிவபெருமானின் குமாரனே! இச்சா சக்தியாகிய வள்ளியை என்றும் பிரியாதவனே! வேலாயுதத்தை நோக்கி "மாமரமாய் நிற்கும் சூரனை அழித்து வா" என்று பணித்த வீரனே! உன்னுடைய திருவருள் என்னில் கலந்தவுடன், பொறுமை என்கிற பாணத்தால், கோபம் என்கிற காட்டு மிருகத்தை அழித்துவிட்டேன். இது என்ன ஆச்சரியம்!

Comments