கந்தர் அந்தாதி - செய்யுள் 83
தீரா கமல சலிகித போக மெனத்தெளிந்துந்
தீரா கமல மெனக்கரு தாததென் சேயவநூல்
தீரா கமல குகரம் பொறுப்ப னெனத்திருக்கண்
தீரா கமல மரவே கருகச் சிவந்தவனே
பதம் பிரித்த வடிவம்:
தீரா கமலச லிகித போகம் எனத் தெளிந்தும்
தீ ராகம் அலம் எனக் கருதாதது என்? சேய், அவம் நூல்
தீர் ஆகம! லகு கரம் பொறுப்பன் எனத் திருக்கண்
தீ ராகம் அலமரவே கருகச் சிவந்தவனே!
பொருள்:
தீரா கமலச லிகித போகம் எனத் தெளிந்தும்
கமலச - தாமரையில் உற்பவித்த அல்லது விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் தோன்றிய பிரம்மனால்
லிகித - தலையில் எழுதப்பட்ட
போகம் - அனுபவ பிராப்தம்/ தலைவிதி
தீரா - ஒருகாலும் மாறாது
எனத் தெளிந்தும்- என்று தெரிந்திருந்தும்
தாமரையில் உதித்த பிரம்மனால் தலையில் எழுதப்பட்ட விதி ஒரு காலம் மாறாது என்று தெரிந்திருந்தும்...
தீ ராகம் அலம் எனக் கருதாதது என்?
தீ - எனது புத்தி
ராகம் - மேன்மேலும் ஆசைப்படுவதனால்
அலம் என - இனிப் பயன் ஏதும் இல்லை என்று
கருதாதது என்? - நினைக்காததற்கு என்ன காரணம்?
மேன்மேலும் ஆசைப்படுவதனால் இனிப் பயன் இல்லை என்று என் புத்தி நினைக்காததற்கு காரணம் என்ன?
[முதலை வாயிலிருந்து சுந்தரர் குழந்தையை மீட்டுக் கொடுத்தாரே அதனாலோ? மார்க்கண்டேயரை எமனிடமிருந்து சிவனார் காத்தார் என்பதனாலோ? அல்லது திருமயிலையில் சம்பந்தப்பெருமான் எலும்பிலிருந்து பெண்ணை உயிர்பித்தார் என்பதனாலோ?]
சேய்! அவ நூல் தீர் ஆகம!
சேய்! - சேயோனே!
அவ நூல் - பயனற்ற (சமணர்களின்) சாத்திரங்களை
தீர் - அழித்துவிடக்கூடிய
ஆகம - பரிசுத்தமான (தேவாரம் முதலான) ஆகம நூல்களை உரைத்தவனே!
சேயோனே! சமணர்களின் பயனற்ற சாத்திரங்களை அழித்துவிடக்கூடிய தேவாரம் முதலான ஆகம நூல்களை உரைத்தவனே!
லகு கரம் பொறுப்பன் எனத் திருக்கண்
தீ ராகம் அலமரவே கருகச் சிவந்தவனே!
லகு கரம் பொறுப்பன் - அக்னி தேவன், "இத் தீப்பொறி மிக அற்பமானது, என் கரத்தால் மிகவும் சுலபமாகத் தாங்கிச் செல்வேன்"
என - என்று மமதையுடன் சொல்ல
திருக்கண் - தனது சிவந்த கண்களினால்
தீ ராகம் - அந்த அக்னியின் சிவந்த நிறமும் காந்தியும்
அலமரவே - வருத்தமுறவே
கருகச் சிவந்தவனே! - கருகிப்போகும்படிக் கோபித்தவனே!
(சூடு தாங்க முடியாமல் அக்னிதேவன் அந்நெருப்புப் பொறிகளைக் கங்கையிடம் அளித்துவிட்டான்).
"இந்தத் தீப்பொறிகள் மிகவும் லகுவானவை; எளிதில் இவற்றை சுமப்பேன்" என்று இறுமாந்திருந்த அக்னியின் நிறமும் ஒளியும் வருத்தமுற்று கருகுமாறு அவனைக் கோபித்த விழிகளை உடையவனே.
பொழிப்புரை:
குமாரக் கடவுளே! ஞானசம்பந்தராக அவதரித்து பரிசுத்த வேதாகமங்களான தேவார நூல்களை அளித்தவனே! "இக் கனல் பொறி லகுவானது நான் கரத்தில் தாங்கிக் கொள்வேன்" என்று வன்மை பேசிய அக்னியின் வீறு அடங்கி, உடல் கருகக் கோபித்த விழியை உடையோனே! கமலோற்பவனான பிரம்மா விதித்த விதியின் அனுபவம் தவறாது என்று தெளிந்தும் என் அறிவானது ஆசைப்படுவது பயனற்றது என்று கருதாதது ஏன்?
.jpg)
Comments
Post a Comment