கந்தர் அந்தாதி - செய்யுள் 82
தென்றலை யம்பு புனைவார் குமார திமிரமுந்நீர்த்
தென்றலை யம்புய மின்கோ மருக செழுமறைதேர்
தென்றலை யம்பு சகபூ தரவெரி சிந்திமன்றல்
தென்றலை யம்பு படுநெறி போயுயிர் தீர்க்கின்றதே
பதம் பிரித்த வடிவம்:
தென் தலை அம்பு புனைவார் குமார, திமிர முந்நீர்
தென் தலை அம்புய மின் கோ மருக, செழுமறைத் தேர்
தென் தலை அம் புஜகபூதர, எரிசிந்தி மன்றல்
தென்றல் ஐ அம்பு படு நெறி போய் உயிர் தீர்க்கின்றதே
பொருள்:
தென் தலை அம்பு புனைவார் குமார
தென் - வண்டுகள் இசைபாடுகின்ற
தலை - சென்னியின் கண்
அம்பு - கங்கா ஜலத்தை
புனைவார் - தரித்திருக்கும் பரமசிவனின்
குமார - மைந்தனே
வண்டுகள் ஆர்ப்பரிக்கும் திருமுடிமேல் கங்கா நதியை தரித்திருக்கும் சிவபெருமானின் மைந்தனே!
திமிர முந்நீர் தென் தலை அம்புய மின் கோ மருக
திமிர - இருளின் நிறம் கொண்ட
முந்நீர் - கடலால் சூழப்பட்ட
தென் தலை - அழகிய பூமாதேவிக்கும்
அம்புய மின் - தாமரையில் வசிக்கும் ஸ்ரீதேவிக்கும்
கோ - தலைவனாகிய திருமாலின்
மருக - மருகனே
கருநிறம் கொண்ட கடலால் சூழப்பட்ட அழகிய பூமாதேவிக்கும் தாமரையில் வசிக்கும் ஸ்ரீதேவிக்கும் தலைவனாகிய திருமாலின் மருகனே!
செழுமறைத் தேர் தென் தலை அம் புஜகபூதர
செழுமறை - வளமையான வேதங்கள் எல்லாம்
தேர் - பூஜிக்கும்
தென் தலை - தெற்குத் திசைக்கண் இருக்கும்
அம் - சிறந்த, அழகிய
புஜகபூதர - சர்ப்பம் போல் காட்சியளிக்கும் செங்கோட்டு மலைக்கு அதிபனே
வளம் வாய்ந்த வேதங்கள் பூஜிக்கும் தெற்கு திசையில் இருக்கும் அழகிய சர்ப்பம் போல் காட்சியளிக்கும் செங்கோட்டு மலைக்கு அதிபனே!
எரிசிந்தி மன்றல் தென்றல் ஐ அம்பு படி நெறி போய் உயிர் தீர்க்கின்றதே
எரிசிந்தி - அக்னியைக் கொட்டிக்கொண்டு
மன்றல் - மணம் நிரம்பிய
தென்றல் - தென்றல் காற்று
ஐ அம்பு - மன்மதனின் ஐந்து மலர் பாணங்களும்
படி நெறி போய் - என் உடலில் புண் வழியே போய்
உயிர் தீர்க்கின்றதே - என் உயிரை வருத்துகின்றன
அக்னியை இறைத்துக்கொண்டு மணம் நிறைந்த தென்றல் காற்றும் மன்மதனின் மலர்வாளிகளும் என் உடலின் புண்வழியே போய் உயிரை வருத்துகின்றன.
பொழிப்புரை:
வண்டுகள் இசைபாடுகின்ற சிரசின் கண் கங்கா ஜலத்தை தரித்திருக்கும் சிவபெருமானின் மைந்தனே! ஸ்ரீதேவி பூதேவி சமேதரான திருமாலின் மருகோனே! வேதங்கள் தொழும் நாகாசல வேலனே! தென்றல் காற்று என் தேகத்தில் காம பாணங்களால் விளைந்த புண் வழியே உள் சென்று என் உயிரை வருத்துகின்றன. ஆதலால் நீ என்னை ஆட்கொண்டு அருள வேண்டும்.
கந்தர் அந்தாதி செய்யுள் 82 உரை:
.jpg)
Comments
Post a Comment