கந்தர் அந்தாதி - செய்யுள் 81
சிகாவல வன்பரி தப்பாடு செய்யுஞ்செவ் வேலவிலஞ்
சிகாவல வன்பரி வூரார் மதனித் திலஞ்சலரா
சிகாவல வன்பரி யங்கங் குழல்பெற்ற தேமொழிவஞ்
சிகாவல வன்பரி யானல மன்றிலுந் தென்றலுமே
பதம் பிரித்த வடிவம்:
சிகாவல! அன்பர் இதப்பாடு செய்யும் செவ்வேல!
(இலஞ்)சி காவல! வன்பரி ஊரார் மதன் நித்திலம்
(சலரா)சி கா அலவன் பரியங்கம் குழல் பெற்ற தேமொழி
(வஞ்)சி காவு அல வன்பரியானலம் அன்றிலும் தென்றலுமே
பொருள்:
சிகாவல! - மயில் வாகனனே!
அன்பர் இதப்பாடு செய்யும் செவ்வேல!
அன்பர் - அன்புடைய அடியார்கள் இடத்தில்
இதப்பாடு செய்யும் - இன்னருளைக் காட்டும்
செவ்வேல - சிறந்த வேலாயுதத்தை உடையவனே!
அன்பர்களிடம் அருளைப் பொழியும் சிறந்த வேலாயுதனே!
இலஞ்சி காவல! - இலஞ்சிப் பதிக்கு அதிபனே!
வன்பரி ஊரார் மதன் நித்திலம் சலராசி கா அலவன் பரியங்கம் குழல் பெற்ற தேமொழி வஞ்சி காவு அல
வன்பரி - என்னை இழி சொற்களால் பேசும்
ஊரார் - இந்த ஊர் மக்களும்
மதன் - மன்மதனும்
நித்திலம் சலராசி - முத்துக்கள் நிறைந்த சமுத்திரமும் அதன் ஓசையும்
கா - சோலைகளும்
அலவன் - சந்திரனும்
பரியங்கம் - கட்டிலும்
குழல் - இரவில் ஒலிக்கும் புல்லாங்குழல் ஓசையும்
பெற்ற தேமொழி வஞ்சி காவு - என்னைப் பெற்றெடுத்த இனிய மொழியை உடைய தாயாரின் காவலும்
அல - பெரிதல்ல
எனக்குத் துன்பம் விளைவிக்கும் ஊராரின் பழிச்சொல், என் மேல் பாணங்களை விடும் மன்மதன், சதா ஒலி செய்யும் சமுத்திரம், இனிய சோலை, அழல் போல் நிலவொளி வீசும் சந்திரன், கட்டில், இரவில் ஒலிக்கும் புல்லாங்குழல், தாயாரின் காவல் இவையெல்லாம் கூட பெரிதல்ல.
வன்பரியானலம் அன்றிலும் தென்றலுமே
அன்றிலும் தென்றலுமே - காமச் சின்னமாகிய அன்றில் பறவையும் காமனின் தேராகிய தென்றல் காற்றும்
வன்பரியானலம் - கொடிய குதிரை முகத்தை உடைய வடவாமுக அக்கினியைப் போல என்னை வருத்துகின்றன.
அன்றில் பறவையும் தென்றல் காற்றும் வடவாமுக அக்னியைப் போல் என்னை வாட்டுகின்றன.
பொழிப்புரை:
மயில் வாகனக் கடவுளே! அடியார்களுக்கு இன்னருள் செய்யும் இலஞ்சிப் பதியோனே! எனக்குத் துன்பம் விளைவிக்கும் ஊராரின் பழிச்சொல், என் மேல் பாணங்களை விடும் மன்மதன், சதா ஒலி செய்யும் சமுத்திரம், இனிய சோலை, அழல் போல் நிலவொளி வீசும் சந்திரன், கட்டில், இரவில் ஒலிக்கும் புல்லாங்குழல், தாயாரின் காவல் இவையெல்லாம் கூட பெரிதல்ல. அன்றில் பட்சியும் தென்றல் காற்றும் ஊழி காலத்து நெருப்பைப் போல சுட்டெரிகின்றன.
.jpg)
Comments
Post a Comment