கந்தர் அந்தாதி - செய்யுள் 80

சீராம ராம சிவசங்க ராநுந் திருமுடிக்குச்

சீராம ராம துகரத் துழாயென்பர் தெண்டிரைமேற்

சீராம ராம நிறந்திறக் கத்தொட்ட சேய்கழற்குச்

சீராம ராம னிமையோர் மகுடச் சிகாவிம்பமே


பதம் பிரித்த வடிவம்:

சீ ராம ராம, சிவசங்கரா, நும் திருமுடிக்குச்

சீர் ஆம் அரா மதுகரத் துழாய் என்பர்; தெள் திரை மேல்

சீரா மராம நிறம் திறக்கத் தொட்ட சேய் கழற்குச்

சீராம் அரா மன் இமையோர் மகுட சிகாவிம்பமே.


பொருள்:

சீ ராம ராம, சிவசங்கரா, நும் திருமுடிக்குச் சீர் ஆம் அரா மதுகரத் துழாய் என்பர்

சீ ராம – (ஸ்ரீ) லக்ஷ்மிக்கு நாயகனான அழகிய

ராம – ராமமூர்த்தியே!

சிவசங்கரா – பரமசிவனே!

நும் திருமுடிக்கு – உங்களது அழகிய திருமுடிக்கு

சீர் – சிறந்தவை

ஆம் – கங்கா ஜலமும்

அரா – பாம்பு ஆபரணமும்

மதுகரத்துழாய் என்பர் – தேன் சிந்தும் துளசி மாலை என்பர்

[முரண் நிரல் நிறை அணி]

அகிலம் உண்ட மாலுக்கு அணிகலம் தண் அம் துழாய்” – கந்தர் அலங்காரம்.


திருமாலே! உங்கள் திருமுடிக்கு அழகு துளசிமாலை; சிவபெருமானே! உங்கள் திருமுடிக்கு அணியாய்த் திகழ்வன கங்கையும் பாம்புகளுமே என்று கூறுவர்.


தெள் திரை மேல் சீரா மராம நிறம் திறக்கத் தொட்ட சேய் கழற்குச் சீராம் அரா மன் இமையோர் மகுட சிகாவிம்பமே

தெள் – தெளிந்த

திரைமேல் – அலைகள் வீசுகின்ற கடலின் கண்

சீரா – உடைவாளை

மராம – மரமாய் நின்ற சூரபத்மனின்

நிறம் – மார்பை

திறக்க – பிளக்கும்படி

தொட்ட – விடுத்த / ஏவிய

சேய்கழற்கு – முருகனின் திருவடிக்கு

சீராம் – சிறப்பாக அமைந்தவை

அரா – நெருங்கிய

மன் – நிலைபெற்ற

இமையோர் – தேவர்களின்

மகுட – கிரீடம் அணிந்த

சிகாவிம்பமே – வட்ட வடிவமான தலைகளேயாம்

[மயிலேறும் ஐயன் காலுக்கு அணிகலம் வானோர் முடியும் – கந்தர் அலங்காரம்]

தெளிந்த அலைகள் வீசும் கடலில், மரமாய் நின்ற சூரனின் நெஞ்சைப் பிளக்குமாறு உடைவாளை ஏவிய முருகப்பெருமானின் திருவடிக்குச் சிறப்பாக அமைந்தவை நிலைபெற்றவர்களும் எப்போதும் நெருங்கி கூட்டத்தோடு காணப்படும் தேவர்களின் கிரீடம் அணிந்த அவர்களது தலைகளேயாம்.


பொழிப்புரை:

பரமசிவனே! நும் திருமுடிக்கு கங்கையும் பாம்பும் ஆபரணங்களாம்; திருமாலே! உமது திருமுடிக்குச் சிறந்தது திருத்துழாய் மாலையாம்; மெய்யில் வாளை அணிந்து, சமுத்திரத்தின்கண் சூரனை வென்ற குமரக்கடவுளின் திருவடிக்கோ தேவர்களது முடித்தலைகளே சிறப்பாய் அமைந்தவையாம்.

Comments