கந்தர் அந்தாதி - செய்யுள் 79

செப்பா ரமுதலை மன்னோ திகனங் குரும்பைமுலை

செப்பா ரமுதலை கண்கா னகைமுருந் தீரிருகண்

செப்பா ரமுதலை வாவியிற் சென்ற பிரான்மருகன்

செப்பா ரமுதலை வேர்களை வான்வரைச் சீரினுக்கே


பதம் பிரித்த வடிவம்:

செப்பு ஆரமுது, அல் ஐ மன் ஓதி கனம், குரும்பை முலை

செப்பு, ஆர முது அலை கண், கால் நகை முருந்து, ஈரிருகண்

செ பார முதலை வாவியில் செற்ற பிரான் மருகன்

செப்பார முதலை வேர் களைவான் வரைச் சீரினுக்கே


பொருள்:


செப்பு ஆரமுது

செப்பு – சொல்லானது

ஆரமுது – தித்திக்கும் ஆரமுதம் போன்றது

சொல்லானது தித்திக்கும் அமுதம்.


அல் ஐ மன் ஓதி கனம்

அல் – இருள் நிறமும்

ஐ - அழகும்

மன் - நிலைபெற்ற

ஓதி - கூந்தலானது

கனம் – மேகம் போலும்

(கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே – அபிராமி அந்தாதி – பாடல் 69)

இருள் போன்ற கருமையும், அழகும், நிலைபெற்றதுமான கூந்தல் கார்மேகம்.


குரும்பை முலை செப்பு

கும்பையை ஒத்த தனமானது செப்பு போலும்.


ஆர முது அலை கண்

கண் விழியானது பழைமையான கடல் அலை போலும்.


கால் நகை முருந்து

ஒளிமிகுந்த பல்லானது மயிலிறகின் அடி போலும் உள்ளன.


யாருக்கு?


ஈரிருகண் செ பார முதலை வாவியில் செற்ற பிரான் மருகன்

ஈரிருகண் – நான்கு கண்களை உடைய

செ – சிவந்த

பார முதலை – பெரிய முதலை (முது முதலை – சீர்பாத வகுப்பு)

(பெரிய முதலையின் வாயில் சிக்கிய கஜேந்திரனை ரட்சிக்கும் பொருட்டு)

வாவியில் – தடாகத்தின் கண்

செற்ற பிரான் – விரைந்து சென்ற திருமாலின்

மருகன் – மருகனும்

நான்கு கண்களை உடைய சிவந்த பெரிய முதலையின் வாயில் சிக்கிக்கொண்ட கஜேந்திரனைக் காப்பதற்காக, அந்த தடாகத்திற்கு விரைந்து சென்ற திருமாலின் மருகனும்


செப்பார முதலை வேர் களைவான் 

செப்பார முதலை – தன்னை மிகவும் போற்றுபவரது பிறப்பின் மூலத்தை

வேர் களைவான் – வேரோடு அழிப்பவனுமான

தன்னைப் போற்றுவார்தம் பிறப்பின் மூலத்தை வேரோடு அழிப்பவனுமான (முருகப்பெருமானது)


வரைச் சீரினுக்கே

மலையில் வாழ்கின்ற மங்கைக்கே.


பொழிப்புரை:

தடாகத்தின் கண் முதலை வாயில் சிக்கிய யானையை ரக்ஷித்த திருமால் மருகனும், தன்னைத் துதிப்பவர்களின் பிறப்பை ஒழிப்பவனுமாகிய குமாரக் கடவுளினது அன்பிற்குரிய மலைவாழ் மங்கையின் மொழி அமுதம் போன்றும், கூந்தல் மேகம் போன்றும், தனங்கள் செப்பை ஒத்தும், கண்கள் கடலைப் போன்றும், பல் மயிலிறகின் அடிபோலும் தோன்றுகின்றன.


[இப்பாடல் ‘அவயவங்கூறல்’ எனும் துறையைச் சேர்ந்தது]

Comments