கந்தர் அந்தாதி - செய்யுள் 78
திரிபுரத் தப்புப் புவிதரத் தோன்றி சிலைபிடிப்பத்
திரிபுரத் தப்புத் தலைப்பட நாண்டொடுஞ் சேவகன்கோத்
திரிபுரத் தப்புத் திரமான் மருக திருக்கையம்போ
திரிபுரத் தப்புத் துறையா யுதவெனச் செப்புநெஞ்சே
பதம் பிரித்த வடிவம்:
திரி; புரத்து அப்பு புவி தரத் தோன்றி சிலை பிடிப்ப
திரிபுரத்து அப்புத் தலைப்பட நாண் தொடும் சேவகன்
(கோத்)திரிபுரத்து அப் புத்திர! மால்மருக! திருக்கை
(அம்போ)தி ரிபு ரத்தப் புத்துறை ஆயுத! என செப்பு நெஞ்சே
பொருள்:
திரி – திரிவாயாக
புரத்து அப்பு புவி தரத் தோன்றி சிலை பிடிப்ப
புரத்து – பூர நன்னாளில்
அப்பு – கடல் சூழ்ந்த
புவி – பூவுலகத்தை
தரத் தோன்றி – ஈன்றருளும்படித் தோன்றி
சிலைபிடிப்ப – தனது வாமபாகத்தில் உள்ள பார்வதியின் இடக்கரத்தால் மேருவாகிய வில்லைப் பிடித்துக்கொள்ளச் செய்து
பூர நன்னாளில் தோன்றி, கடல் சூழ்ந்த பூமியை ஈன்றருளுபவளும் தனது வாமபாகத்தில் இருப்பவளுமான பார்வதியின் இடக்கரத்தால் மேருமலையாகிய வில்லைப் பிடிக்கச் செய்து…
திரிபுரத்து அப்புத் தலைப்பட நாண் தொடும் சேவகன்
திரிபுரத்து – முப்புரத்தின் மேல்
அப்புத் தலைப்பட – விஷ்ணுவாகிய பாணத்தைப் பிரயோகம் செய்யும் பொருட்டு
நாண் தொடும் – தனது பாகமாகிய வலக்கையால் வாசுகியாகிய நாணைத் தொடுத்த
சேவகன் – வீரனாம் பரமசிவனது
முப்புரத்தை அழிக்க, விஷ்ணுவாகிய அம்பை, வாசுகி எனும் பாம்பாகிய நாணை, தன் வலக்கரத்தால் ஏற்றித் தொடுத்த வீரனாம் சிவபெருமானது…
கோத்திரிபுரத்து அப் புத்திர!
கோத்திரி – திருச்செங்கோட்டு மலையை
புரத்து – தனது நகரமாக ஸ்தாபிதம் செய்த
அப் புத்திர – சாமர்த்தியம் மிக்க மைந்தனே!
திருச்செங்கோட்டு மலையைத் தனது நகரமாக ஸ்தாபித்த சாமர்த்தியமிக்க மைந்தனே!
மால் மருக – திருமால் மருகனே!
திருக்கை அம்போதி ரிபு ரத்தப் புத்துறை ஆயுத!
திருக்கை – திருக்கை எனும் மீன் வகையை உடைய
அம்போதி – கடலின் கண்
ரிபு – எதிரிகளாகிய அரக்கர்களது
ரத்தப் புத்துறை – ரத்தத்தையே புதிய உறையாகக் கொண்ட
ஆயுத – வேலாயுதத்தை உடையவனே!
திருக்கை எனும் மீன் வகையை உடைய கடலிடத்தே எதிரிகளாகிய அரக்கர்களை அழித்து, அவர்களின் ரத்தத்தையே உறையாகக் கொண்ட வேலாயுதத்தை உடையவனே!
என செப்பு நெஞ்சே
என – என்றெல்லாம்
செப்பு – புகழ்ந்து சொல்லி
நெஞ்சே – மனமே
என்றெல்லாம் புகழ்ந்து சொல்வாய் மனமே!
[திரி – நீ திரிவாயாக]
பொழிப்புரை:
உலகத்தை சிருஷ்டிக்கும் பொருட்டு பூர நட்சத்திரத்தி அவதரித்த பார்வதியை, அவளது இடக்கையால் மேருவாகிய வில்லைப் பிடிக்கச் செய்து, தனது வலக்கையால் நாணை ஏற்றி முப்புரங்களை அழித்த சிவபெருமானின் திருச்செங்கோட்டு மலையைத் தன் இருப்பிடமாகக் கொண்ட கந்தப் பெருமானே! மால் மருகனே! என்று துதித்துக்கொண்டு மனதே! நீ பொழுதைக் கழிப்பாயாக.
.jpg)
Comments
Post a Comment