கந்தர் அந்தாதி - செய்யுள் 77
தேரை விடப்பணி யேறேறி முப்புரஞ் செற்றபிரான்
தேரை விடப்பணி சூராரி யென்க தெரிவையர்பால்
தேரை விடப்பணி வாய்ப்படு மாறு செறிந்தலகைத்
தேரை விடப்பணித் தென்றோடி யென்றுந் திரிபவரே
பதம் பிரித்த வடிவம்:
“தேரை விடப் பணி ஏறு ஏறி, முப்புரம் செற்ற பிரான்
தேர் ஐ! விள் தப்பு அணி சூராரி!” என்க; தெரிவையர்பால்
தேரை விடப்பணி வாய்ப் படுமாறு செறிந்து, அலகைத்
தேரை விடு அப்பு அணித்து என்று ஓடி என்றும் திரிபவரே!
பொருள்:
தேரை விடப் பணி ஏறு ஏறி, முப்புரம் செற்ற பிரான் தேர் ஐ!
தேரை – தேவர்களெல்லாம் ஒன்று கூடிச் சமைத்த தேரை
விட – அச்சு முறியும்படி
பணி – செய்து
ஏறு ஏறி – திருமாலாகிய இடப வாகனத்தில் ஏறி
[காளை ஏறு கர்த்தன் எந்தை அருள்பாலா – மாலினாலெடுத்த கந்தல் – வைத்தீசுவரன் கோயில் திருப்புகழ்]
முப்புரம் – முப்புரங்களை
செற்ற பிரான் – சிரித்து எரித்த சிவபெருமானுக்கு
தேர் ஐ – பிரணவப் பொருளை அறிந்துகொள்ளும்படி உபதேசித்த சுவாமியே
முப்புரங்களை அழிக்க தேவர்கள் எல்லோரும் ஒன்றுகூடிச் சமைத்த தேரை அச்சுமுறியும்படி செய்து, திருமாலாகிய இடபத்தின் மேல் ஏறி, முப்புரங்களை சிரித்து அழித்த சிவபெருமானுக்கு, பிரணவோபதேசம் செய்த கடவுளே!
விள் தப்பு அணி சூராரி! என்க
விள் – குறிப்பிடத்தக்க
தப்பு – குற்றத்தால்
(தேவர்களை இழிவுபடுத்திச் சிறையில் வைத்திருந்தது, சிறையினின்று விடாது இருந்தது ஆகிய குற்றங்கள்)
அணி சூராரி – நெருங்கிய சூரனை அழித்தவனே!
என்க – என்று துதிப்பீர்களாக
குற்றமுடைய அசுரனாகிய சூரபத்மனை அழித்தவனே என்றெல்லாம் துதிப்பீர்.
தெரிவையர்பால் தேரை விடப்பணி வாய்ப் படுமாறு செறிந்து
தெரிவையர்பால் – விலைமகளிரிடத்தில்
தேரை – தவளையானது
விடப்பணி – விஷத்தையுடைய பாம்பினது
வாய் படுமாறு – வாயில் அகப்பட்டாற் போலும்
செறிந்து – மாட்டிக் கொண்டு
[‘காலனது நா, அரவ வாயிலிடு தேரை’ – நீலமுகிலான திருப்புகழ்]
தவளையானது பாம்பின் வாயில் எப்படி மாட்டிக்கொண்டு துன்பப்படுமோ அதுபோல விலைமாதர்களிடத்தில் மாட்டிக்கொண்டு
அலகைத் தேரை விடு அப்பு அணித்து என்று ஓடி என்றும் திரிபவரே!
அலகைத் தேரை – பேய்த்தேர் எனும் கானல் நீரை
(பூத்தாரும் பொய்கைப் புனல் இதுவே எனக் கருதிப்
பேய்த்தேர் முகக்குறும் பேதை குணம் ஆகாமே – திருவாசகம்)
விடு அப்பு – ஊறுகின்ற ஜலமானது
அணித்தென்று – இதோ சமீபத்தில் உள்ளது என்று
ஓடி என்றும் திரிபவரே – எப்போதும் ஓடி அலைந்து திரிபவர்களே!
அவர்களிடம் பெறும் கானல் நீர் போன்ற சிற்றின்பத்தை “உண்மை இன்பம் – இதோ நமக்கு மிக அருகில் உள்ளது” என்று எண்ணி, எப்போதும் அவர்களையே நாடிச் சென்று உழல்பவர்களே!
பொழிப்புரை:
சிற்றின்ப இச்சையால் பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல, விலைமாதர்கள் வசம் சிக்கி, கானல் நீர் போன்ற அவர்களது பொய்யான இன்பத்தைத் தேடித் திரிகின்ற உலகத்தீரே! “முப்புரம் செற்ற பரமசிவனுக்கு பிரணவத்தின் பொருளை உரைத்த தெய்வமே! சூரசம்ஹாரனே!” என்று துதியுங்கள். நீங்கள் நற்கதி அடைவீர்கள்.
.jpg)
Comments
Post a Comment