கந்தர் அந்தாதி - செய்யுள் 76
செம்மலை வண்டு கடரங்க மாவென்ற திண்படைவேற்
செம்மலை வண்டு வசவார ணத்தனைச் செப்பவுன்னிச்
செம்மலை வண்டு தவந்தமிழ்ப் பாணதெண் டீங்கையில்வாய்
செம்மலை வண்டு விருப்புறு மோவிது தேர்ந்துரையே
பதம் பிரித்த வடிவம்:
செம் மலை வண்டு உகள் தரங்கம் மா வென்ற திண் படை வேல்
செம்மலை, வண் துவச வாரணத்தானை, செப்ப உன்னி
செம்மலை; வண்டு தவு அம் தமிழ்ப் பாண! தெள் தீம் கையில் வாய்
செம்மலை வண்டு விருப்புறுமோ? இது தேர்ந்து உரையே.
பொருள்:
செம் மலை வண்டு உகள் தரங்கம் மா வென்ற திண் படை வேல் செம்மலை
செம் மலை - சிவந்த நிறமுடைய கிரௌஞ்ச கிரியையும்
வண்டு உகள் தரங்கம் - சங்கினங்கள் உலவுகின்ற கடலின்கண்
மா வென்ற - மா வடிவாய் நின்ற சூரனையும் ஜெயித்த
திண் படை வேல் - திண்ணிய வேலாயுதத்தை உடைய
செம்மலை - கடவுளை
சிவந்த நிறமுடைய கிரௌஞ்ச கிரியையும் சங்குகள் நிறைந்த கடலிடத்தே மா மரமாய் நின்ற சூரபத்மனையும் வென்ற வலிமை மிக்க வேலாயுதத்தை உடைய கடவுளை...
வண் துவச வாரணத்தானை - வளப்பமிக்க கோழிக்கொடியை உடைய முருகனை...
செப்ப உன்னி செம்மலை
செப்ப - புகழ்ந்து பாட
உன்னி - எண்ணி (பின்னர்)
செம்மலை - உன் மனத்தை மூடிவிடாதே
புகழ்ந்து பாட நினைத்து, பின்னர் மாறிவிடாதே.
வண்டு தவு அம் தமிழ்ப் பாண!
வண்டு தவு - குற்றமற்ற முறையில்
அம் தமிழ்ப் பாண - அழகிய தமிழில் பாடும் பாணனே!
குற்றமற்ற முறையில் அழகிய தமிழில் பாடும் பாணனே!
தெள் தீம் கையில் வாய் செம்மலை வண்டு விருப்புறுமோ? இது தேர்ந்து உரையே
தெள் - தெளிந்தும்
தீம் - இனிப்புற்றும்
கையில் - கரத்தினில்
வாய் - வாய்ப்பினும்
செம்மலை - பழைய பூவை
வண்டு - வண்டினங்கள்
விருப்புறுமோ - விரும்புமா?
[அதேபோல் பழையவளாகிவிட்ட என்னை முருகன் விரும்ப மாட்டான்]
இது தேர்ந்து உரையே - இதை ஆய்ந்து, என்னைப் பற்றிப் பாடுவதை விட்டுவிட்டு , முருகப் பெருமானின் பெருமைகளைப் பலகாலும் புகழ்ந்து பாடுவாயாக.
தெளிவாகவும் இனிப்பாகவும் இருந்தாலும் கையில் கிடைத்த பழைய மலரை வண்டுகள் விரும்புமா? அதேபோல் பழையவளாகிவிட்ட என்னை முருகன் எப்படி விரும்புவான்? இதை மனதில் கொண்டு, என்னைப் புகழ்வதை நிறுத்திவிட்டு முருகனைப் புகழ்ந்து பலகாலும் பாடு.
பொழிப்புரை:
குற்றமற்ற முறையில் இன்னிசை பாடும் தமிழ்ப் பாணனே! அன்றலர்ந்த மலர்களை மட்டுமே வண்டுகள் நாடும். அதுபோல நான் வாடிய பூவாகிவிட்டதனால் முருகன் என்னை விரும்ப மாட்டான். எனவே, என்னைப் போற்றிப் பாடுவதை விட்டுவிட்டு, கிரௌஞ்ச கிரியையும் மாவடிவ சூரனையும் வென்ற கோழிக்கொடியோனாம் வேலாயுதக் கடவுளின் திருப்புகழைக் குறைவின்றி என்றென்றும் புகழ்ந்து பாடுவாயாக.
.jpg)
Comments
Post a Comment