கந்தர் அந்தாதி - செய்யுள் 75

செய்தவத் தாலஞ்சு சீரெழுத் தோதிலந் தீதலருஞ்

செய்தவத் தாலஞ்சு கம்பெறச் சேயுரைக் கேற்றுருப்போய்ச்

செய்தவத் தாலஞ்சு வைக்கனி யீன்றதென் னேம்வினையே

செய்தவத் தாலஞ்சு கின்றன மும்மலச் செம்மல்கொண்டே


பதம் பிரித்த வடிவம்:


செய் தவத்தால் அஞ்சு சீர் எழுத்து ஓதிலம்; தீது அலரும்

செய் தவத் தாலம் சுகம் பெறச் சேய் உரைக்கு ஏற்று உருப்போய்ச்

செய்த அத் தாலம் சுவைக்கனி ஈன்றது என்னேம்; வினையே

செய்து அவத்தால் அஞ்சுகின்றனம் மும்மலச் செம்மல் கொண்டே


பொருள்:


செய் தவத்தால் அஞ்சு சீர் எழுத்து ஓதிலம்


செய் தவத்தால் – முன் பிறவியில் செய்த தவத்தினால்

அஞ்சு சீர் எழுத்து – சீரிய பஞ்சாட்சரத்தை (உபதேசம் பெற்று)

ஓதிலம் – துதிக்கின்றோம் இல்லை


முற்பிறப்பில் செய்த தவத்தினால் பஞ்சாட்சரத்தை உபதேசம் பெற்று துதிப்பதில்லை.


தீது அலரும் செய் தவத் தாலம் சுகம் பெறச் 


தீது அலரும் – தீமை விளையும்

செய் – நரகபூமி

தவ – அழிந்து போகவும்

தாலம் – பூவுலகம்

சுகம் பெற – நன்மை பெறவும்


தீமை நிறைந்த நரகம் அழியவும், பூலோகம் நலம் பெறவும்


சேய் உரைக்கு ஏற்று உருப்போய்ச் செய்த அத் தாலம் சுவைக்கனி ஈன்றது என்னேம்


சேய் உரைக்கு – சம்பந்தராய் அவதரித்து அருள் செய்த தேவாரப் பாட்டினால்

ஏற்று உருப்போய் – ஆண் உருவம் நீங்கி

செய்த அத் தாலம் – சிவந்த அந்தப் பெண்ணுருவாகிய பனை

சுவைக்கனி ஈன்றது என்னேம் – இனிய பழத்தைக் கொடுத்தது என்று சொல்லித் துதிக்கவும் இல்லை.


சம்பந்தராய் அவதரித்து, அவர் அருளிய தேவாரத்தால் ஆண் உரு நீங்கி, பெண்ணுரு பெற்ற அந்த பனைமரம் இனிய கனிகளைக் கொடுத்தது என்று சொல்லி துதிக்கவும் இல்லை.


பவமாய்த்து ஆணதுவாகும் பனை காய்த்தே மண நாறும்

     பழமாய்ப் பார்மிசை வீழும்படி 

[தவர் வாள் தோமர – திருவோத்தூர்த் திருப்புகழ்]

 

வினையே செய்து அவத்தால் அஞ்சுகின்றனம் மும்மலச் செம்மல் கொண்டே


வினையே செய்து – தீமைகளையே செய்து கொண்டு

மும்மல – மூன்று மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை எனும்

செம்மல் கொண்டே – போர்வையைத் தரித்துக்கொண்டு

அவத்தால் அஞ்சுகின்றனம் – நடுக்கமுற்று பயந்துகொண்டிருக்கிறோம்.


தீமைகளையே செய்துகொண்டு, மும்மலப் போர்வையைத் தரித்துக்கொண்டு, நடுக்கமுற்று பயந்துகொண்டிருக்கிறோம்.


பொழிப்புரை:


நெஞ்சமே! உலகோர் நரகம் எய்தாமல் இன்பத்தை அடைய, சம்பந்தர் அருளிச் செய்த தேவார நூல்களைப் படியாமலும், குமாரக் கடவுளைத் துதியாமலும், பஞ்சாட்சரத்தை ஜெபிக்காமலும், தவம் செய்யாமலும் தீவினையாலும் மும்மலங்களினாலும் கட்டுண்டு வீணாகத் திரிகின்றோம்.

Comments