கந்தர் அந்தாதி - செய்யுள் 74

சேரப் பொருப்பட வித்தே னிறைவன் றிரைசிறையைச்

சேரப் பொருப்பட வல்லவன் சூரைச் சிகரியுடன்

சேரப் பொருப்பட வென்றண்ட ரேத்திய சேவகன்வான்

சேரப் பொருப்பட வேணியிற் சேர்த்தவன் செய்தவமே


பதம் பிரித்த வடிவம்:


சேரப் பொருப்பு அடவித் தேன் இறைவன்; திரை சிறையைச்

சேர் அப்பு ஓர் உப்பு அட வல்லவன்; சூரைச் சிகரியுடன்

சேரப் பொருப் பட வென்று அண்டர் ஏத்திய சேவகன்; வான்

சேர் அப்பு ஒருப்பட வேணியில் சேர்த்தவன் செய் தவமே


பொருள்:


சேரப் பொருப்பு அடவித் தேன் இறைவன்


சேர – சேர ராஜனின் ஆளுகைக்குட்பட்ட

பொருப்பு – கொல்லிமலையையும் வெள்ளிமலையையும் போன்ற

அடவி – வள்ளிமலைக் காட்டில் வாழ்கின்ற

தேன் – இனிய மொழிகளை உடைய வள்ளிநாயகியின்

இறைவன் – காதலனே!


சேரனின் ஆட்சிக்கு உட்பட்ட கொல்லிமலையையும் வெள்ளிமலையையும் போன்ற வள்ளிமலைக்காட்டில் வாழ்கின்ற இனிய மொழிகளை உடைய வள்ளியின் நாயகனே!


திரை சிறையைச் சேர் அப்பு ஓர் உப்பு அட வல்லவன்;


திரை – அலையானது 

சிறையை – கடற்கரையை

சேர் அப்பு – அழிக்கும்படி மோதுகின்ற

ஓர் உப்பு – ஒப்பற்ற உப்புக் கடலை

அட வல்லவன் – வற்றும்படி வேலைப் பிரயோகித்த சாமர்த்தியனே!


கரையை அழிக்கும்படி மோதுகின்ற அலைகளை உடையதும், உப்பு நிறைந்ததும், ஒப்பற்றதுமான கடலை வற்றச்செய்த வேலேந்திய சமர்த்தனே!


சூரைச் சிகரியுடன் சேரப் பொருப் பட வென்று அண்டர் ஏத்திய சேவகன்


சூரை – சூரனை

சிகரியுடன் – கிரவுஞ்சகிரியுடன்

சேர – அடியோடு

பொரு - போர் செய்து 

பட – அழியும்படி

வென்று – ஜெயித்து

அண்டர் ஏத்திய – தேவர்களால் துதிக்கப்பட்ட

சேவகன் – மஹாவீரனே!


சூரபத்மனை, அவனுக்குக் கவசமாய் விளங்கிய கிரௌஞ்ச கிரியோடு சேர்த்து அழித்து வென்று, தேவர்களால் துதிக்கப்பட்ட மாவீரனே!


வான் சேர் அப்பு ஒருப்பட வேணியில் சேர்த்தவன் செய் தவமே


வான் சேர் அப்பு - ஆகாச கங்கையை

ஒருப்பட – ஒன்றாக

வேணியில் – சடைமேல்

சேர்த்தவன் – அடக்கி தரித்த பரமசிவன்

செய் தவமே – செய்த தவத்தால் அவதாரம் செய்தவனே!


சிரத்தில் கங்கையைத் தரித்த ஈசன் செய்த தவத்தால் அவதரித்தவனே!


பொழிப்புரை:


கொல்லிமலை, வெள்ளிமலை போன்ற வள்ளிமலையில் வாழ்கின்ற வள்ளி நாயகியின் மணாளனும் கடலை வேலினால் வற்றும்படிச் செய்தவனும் சூரனையும் கிரௌஞ்ச கிரியையும் அடியோடு அழித்து, தேவர்களால் துதிக்கப்படுபவனுமாகிய மாவீரனே! கங்காதரராகிய சிவபெருமான் செய்த தவத்தின் பயனாய் அவதரித்தவனே.

Comments