கந்தர் அந்தாதி - செய்யுள் 73
திசாமுக வேதனை யன்பாற் கரன்றிங் கடங்களவ
திசாமுக வேதனை யீறிலு மீறிலர் சீறுமம்போ
திசாமுக வேதனை வென்கண்ட வேலன் றினைப்புனத்தந்
திசாமுக வேதனை நண்ணுதண் கார்வரை சேர்பவரே
பதம் பிரித்த வடிவம்:
திசாமுக வேதன் ஐயன் பாற்கரன் திங்கள் தங்கள்
(அவதி) சாம் உக வேதனை ஈறிலும் ஈறிலர்; சீறும்
(அம்போ)தி சாமுக வேதனை வென் கண்ட வேலன் தினைப்புன
(தந்)தி சாமுக வேய் தனை நண்ணு தண் கார் வரை சேர்பவரே
பொருள்:
திசாமுக வேதன் ஐயன் பாற்கரன் திங்கள் தங்கள் அவதி சாம் உக வேதனை ஈறிலும் ஈறிலர்
திசாமுக – நான்கு திசைகளிலும் முகத்தை உடைய
வேதன் – வேதத் தலைவனாகிய பிரம்மனும்
ஐயன் – அவரது தந்தையாம் திருமாலும்
பாற்கரன் – பாஸ்கரன் – சூரியனும்
திங்கள் – சந்திரனும்
தங்கள் அவதி – தத்தம் ஆயுள் முடிந்து
சாம் – இறந்துபோகும்
உக வேதனை ஈறிலும் – யுக முடிவில் துன்பம் அடையும் காலத்திலும்
ஈறிலர் – அழிய மாட்டார்கள் [யார் அழியமாட்டார்கள்?]
பிரம்மன், திருமால், சூரியன், சந்திரன் முதலானோர் தங்கள் ஆயுள் முடிந்து அழியும் காலமான யுகமுடிவிலும் அழியாது இருப்பார்கள். யார் எனில்…
சீறும் அம்போதி சாமுக வேதனை வென் கண்ட வேலன்
சீறும் – கோபித்து ஆரவாரம் செய்கின்ற
அம்போதி – கடலின் கண் தோன்றி
சாமுக – அழிவைக் காட்டும் முகத்தை உடையவனும்
வேதனை – தேவர்களுக்கு அழிவில்லாத் துன்பத்தை விளைவித்தவனுமான சூரனை
வென் கண்ட – ஜெயித்து அழித்த
வேலன் – வேலாயுதம் கொண்ட முருகன் வசிக்கும்
ஆரவாரம் செய்கின்ற கடலில் தோன்றி, தேவர்களுக்குத் துன்பம் விளைவித்த சூரனை வென்ற வேலாயுதப் பெருமானாம் முருகன் வசிக்கும்…
தினைப்புன தந்தி சாமுக வேய் தனை நண்ணு தண் கார் வரை சேர்பவரே
தினைப்புன – தினைக் காடுகளையும்
தந்தி – யானைகளின்
சாமுக – கூட்டங்களையும்
வேதனை – வேய் தனை – மூங்கில் மரங்களையும்
நண்ணு – தன்னுடன் பொருந்தி இருக்கும்
தண் கார் வரை – குளிர்ந்த மேகங்கள் தவழ்கின்ற பழமுதிர்சோலை மலையை
சேர்பவரே – அடைந்து இடைவிடாது தியானிப்பவர்களே.
[ஈறிலர் – யுகமுடிவிலும் அழிய மாட்டார்கள்]
தினைக்காடுகள், யானைக் கூட்டங்கள், மூங்கில் மரங்கள் ஆகியவற்றைத் தன்னிடம் கொண்டதும், குளிர்ந்த கருமேகங்கள் தவழ்வதுமான பழமுதிர்சோலை மலையை அடைந்து இடைவிடாது தியானிப்பவர்கள்.
பொழிப்புரை:
சமுத்திரத்தில் சூரனை வென்ற வேலாயுதப் பெருமான் நீங்காமல் உறைகின்ற சோலைமலையைத் தியானிப்பவர்கள், தேவர்களெல்லாரும் அழிந்து போகும் யுகமுடிவிலும் நித்ய சூரியராய் இருப்பார்கள்.
.jpg)
Comments
Post a Comment