கந்தர் அந்தாதி - செய்யுள் 71

திங்களு மாசுண மும்புனை வார்செல்வ னென்னையிரு

திங்களு மாசுண மாக்கும் பதாம்புயன் செந்திலன்னாள்

திங்களு மாசுண மன்போல் விழியுஞ் செழுங்கரும்புந்

திங்களு மா சுண நன்றான மாற்றமுந் தீட்டினன்றே


பதம் பிரித்த வடிவம்:


திங்களும் மாசுணமும் புனைவார் செல்வன்;

(என் ஐ இரு) திங்களும் மா சுணமாக்கும் பதாம்புயன்; செந்தில் அன்னாள்

தீங்கு அளும் மாசு உள் நமன்போல் விழியும் செழும் கரும்பும்

தீம் களும் மா சுண நன்றான மாற்றமும் தீட்டின் நன்றே


பொருள்:


திங்களும் மாசுணமும் புனைவார் செல்வன்


திங்களும் - சந்திரனையும்

மாசுணமும் - பாம்பையும் 

புனைவார் - தரித்திருக்கும் சிவபெருமானின்

செல்வன் - குமாரனும்


சந்திரனையும் பாம்பையும் அணிந்திருக்கும் சிவபெருமானின் குமாரனும்..


என் ஐ இரு திங்களும் மா சுணமாக்கும் பதாம்புயன்


என் - என்னுடைய

ஐ இரு திங்களும் - பத்து மாதமெனும்‌ கால‌ அளவையில் சேர்ந்து, அன்னையின் கருப்பையில் படும் பிறவித் துன்பத்தையும்

மா சுணமாக்கும் - மிகவும் நீறாக்கும் (சுண்ணம் - சுண்ணாம்பு) 

பதாம்புயன் - தாமரை போன்ற பாதங்களை உடைய குமாரக் கடவுளின்


[அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே - கந்தர் அலங்காரம்]


பத்து மாதங்கள் என் அன்னையின் கருப்பையில் நான் படும் பிறவித் துன்பத்தையும் நீறாக்கும் தாமரை போன்ற பாதங்களை உடைய குமார கடவுளின்..


செந்தில் அன்னாள் தீங்கு அளும் மாசு உள் நமன்போல் விழியும், செழும் கரும்பும், தீம் களும் மா சுண நன்றான மாற்றமும் தீட்டின் நன்றே


செந்தில் அன்னாள் - செந்திற்பதியை ஒத்து விளங்கும் இந்த மங்கையின் 


தீங்கு அளும் - தீமைகளை உண்டாக்கும்


மாசு - ஜீவராசிகள் செய்யும் பாவங்களாகிய குற்றங்களை

உள் - ஆராய்ந்து பார்க்கும்

நமன்போல் விழியும் - எமனைப் போன்ற கண்ணையும்


செழும் கரும்பும் - செழிப்பான கரும்பும்

தீம் களும் - இனிய தேனும்


மா சுண - ஒப்பில்லாததால் குற்றம் வரும்படிச் செய்யும்


நன்றான மாற்றமும் - இனிமையான மொழியையும்


தீட்டின் நன்றே - உன்னால் மடல் எழுத முடிந்தால் நன்மையாகும் 


செந்திற்பதியைப் போல் விளங்கும் இந்த மங்கையின் தீமைகளை உண்டாக்கும் ஜீவராசிகள் செய்யும் குற்றங்களை ஆராய்ந்து பார்க்கும் எமனைப் போன்ற கண்ணையும், செழிப்பான கரும்பும் இனிய தேனும் ஒப்பில்லாததால் குற்றம் வரும்படிச் செய்யும் இனிமையான மொழியையும் உன்னால் மடல் எழுத முடிந்தால் நன்மையாகும் 


பொழிப்புரை:


திங்களும் அரவமும் ஆபரணமாகக் கொண்ட சிவபெருமானின் மைந்தனும், தன் திருத்தாள்களை அளித்து, என் பிறவித் துன்பத்தைப் போக்குபவனும் ஆகிய குமாரக் கடவுளின் செந்திற்பதியைப் போன்றவள் இப்பெண்; அவளது யமன் போன்ற கூரிய கண்ணையும், தேனையும் கரும்பையும் தோற்கடிக்கவல்ல இனிய மொழியையும் உன்னால் வரைய முடியாது. மடல் எழுதுதல் அரிது. [எனவே நீ மடல் ஊர்தல் வேண்டும்]. 


பின் குறிப்பு:


செந்திலன்னாள் - செந்தூர் என் ஆருயிருக்கு எவ்வளவு அருமையோ, அவ்வளவு அருமை வாய்ந்தவள் என் தலைவியுமே.


மடல் எழுதுதல் - தலைவியின் உடலில் உள்ள அங்கங்களை எல்லாம், அழகிய ஓவியமாகத் தீட்டி எடுத்துக்கொண்டு, நாற்சந்தியில் அமரும் தலைவன், வருவோர் போவோரை எல்லாம், "இப்பெண்ணை எனக்குத் திருமணம் செய்து தாருங்கள்" என வேண்டுவான். ஆனால் அவளது இனிய மொழியை எவ்வாறு வரைவாய் என்று தலைவனைக் கேட்கிறாள் தோழி.


மடல் ஏறுதல் - மடல் எழுதிய தலைவன் தன் காதலியை அடைய முடியாவிட்டால், தான் வரைந்த அவளது படத்தை எடுத்துக் கொண்டு, பனங்கருக்கால் குதிரை போல் செய்த ஊர்தி மேல் அமர, சிறுவர்கள் அவனை வீதிகளில் இழுத்துக் கொண்டு செல்வர். இது மடல் ஏறுதல் எனப்படும்.

Comments