கந்தர் அந்தாதி - செய்யுள் 70
சிந்துர வித்தக வாரும் புகர்முகத் தெய்வவெள்ளைச்
சிந்துர வித்தக வல்லிசிங் காரசெந் தூரகுன்றஞ்
சிந்துர வித்தக முத்திக்கு மாய்நின்ற செல்வதுஞ்சா
சிந்துர வித்தக னம்போலு மிங்கிளந் திங்களுமே
பதம் பிரித்த வடிவம்:
சிந்துர இத் தகவு ஆரும் புகர்முகத் தெய்வ வெள்ளைச்
சிந்துர வித்தக வல்லி சிங்கார! செந்தூர! குன்றம்
சிந்து உர! வித்தக! முத்திக்கும் ஆய் நின்ற செல்வ! துஞ்சா
சிந்து ரவித் தகனம் போலும் இங்கு இளம் திங்களுமே.
பொருள்:
சிந்துர இத் தகவு ஆரும் புகர்முகத் தெய்வ வெள்ளைச் சிந்துர வித்தக வல்லி சிங்கார!
சிந்துர – திலகம் தீட்டிய
இத் தகவு – இந்த அழகு
ஆரும் – நிறைந்திருக்கின்ற
புகர்முக – புள்ளியை உடைய முகம் பொருந்திய
தெய்வ வெள்ளைச் சிந்துர – தெய்விகமான ஐராவதத்தால் வளர்க்கப்பட்டவளும்
வித்தக – அற்புதமான அழகை உடையவளுமாகிய
வல்லி – கொடி போன்ற தேவயானைக்கு
சிங்கார – இன்பம் பயப்பவனே!
திலகம் தீட்டிய, அழகு நிறைந்த புள்ளிகள் பொருந்திய முகமுடைய தெய்விகமான ஐராவதத்தால் வளர்க்கப்பட்டவளும் அழகும் அற்புதமும் உடையவளும் கொடிபோன்றவளுமான தேவயானைக்கு இன்பத்தை அளிப்பவனே!
செந்தூர! – செந்திற்பதியானே!
குன்றம் சிந்து உர!
குன்றம் – கிரௌஞ்ச கிரியை
சிந்து உர – சிதற அடித்த வலிமை உடையவனே!
கிரௌஞ்ச கிரியை சிதற அடித்த வலியவனே!
வித்தக! – ஞான மூர்த்தியே!
முத்திக்கும் ஆய் நின்ற செல்வ! – முத்தி வீட்டை அடையச் செய்த குமரனே! அல்லது முத்திக்கு மூல காரணமாய் நின்ற செல்வனே!
துஞ்சா சிந்து ரவித் தகனம் போலும் இங்கு இளம் திங்களுமே
துஞ்சா சிந்து - கடல் ஓயாமல் முழங்குகிறது
இங்கு – இவ்விடத்தில்
இளம் திங்களுமே – பிறைச் சந்திரனும்
ரவித் தகனம் போலும் – சூரியனின் காந்தி போல் தகிக்கிறது
கடல் ஓயாமல் முழங்கும் இவ்விடத்தில், பிறைச்சந்திரனும் சூரியனின் காந்திபோல் தகிக்கிறது.
[இந்துவை சிந்துவை செய்வதென் யான்? – கந்தர் அந்தாதி செய்யுள் 9]
[இமராஜனிலா அதெறிக்கும் கனலாலே
இளவாடையும் ஊரும் ஒறுக்கும்படியாலே
சமராகிய மாரன் எடுக்கும் கணையாலே
தனி மான் உயிர் சோரும் அதற்கொன்றருள்வாயே
- திருவண்ணாமலைத் திருப்புகழ்]
பொழிப்புரை:
குங்குமம் தீட்டிய முகபடம் உடைய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட தேவயானையின் மணாளனே! முத்திக்கு வித்தே! கிரௌஞ்ச மலையை அழித்த செந்திற்பதியானே! வித்தகனே! கடல் ஓயாமல் முழங்கியும், சந்திரன் வெப்பத்தைத் தந்தும், எனது விரகதாபத்தை அதிகரிக்கச் செய்வதை நீ ஆய்ந்து அருள்வாயாக!
.jpg)
Comments
Post a Comment