கந்தர் அந்தாதி - செய்யுள் 69

சீவன சத்துரு கன்பாற் பிறப்பறத் தேவருய்யச்

சீவன சத்துரு மிக்குமெய் யோன்கையிற் சேர்த்தசெவ்வேள்

சீவன சத்துருச் செய்யாண் மருகவெ னாதிடையே

சீவன சத்துரு வெய்தியெய் தாப்பழி சிந்திப்பதே


பதம் பிரித்த வடிவம்:

சீவன் அசத்து; உருகு அன்பால் பிறப்பு அற, தேவர் உய்ய,

சீவன் அசத்து உருமிக்கு மெய்யோன் கையில் சேர்த்த செவ்வேள்!

சீ வனசத்து உருச் செய்யாள் மருக! எனாது இடையே

சீவன் அசத்து உரு எய்தி, எய்தாப் பழி சிந்திப்பதே;


பொருள்:

சீவன் அசத்து

சீவன்பிராணனானது

அசத்துநித்தியத் தன்மை இல்லாததால் அசத்தாகும்


பிராணனானது நித்தியத்தன்மை இல்லாததால் அசத்தாகும்.


[ஆதலால் பிராணனும் உடலும் ஒன்று சேர்ந்திருக்கும் பொழுதே]


உருகு அன்பால் - நெஞ்சத்தை உருக வைக்கும் பக்தியினால்


பிறப்பு அறஇப்பிறப்பு ஒழியும்படி


தேவர் உய்ய, சீவன் அஜத்து உருமிக்கு மெய்யோன் கையில் சேர்த்த செவ்வேள்


தேவர் உய்ய – தேவர்கள் நற்கதி அடையும்படி


சீவன் – சகல ஜீவராசிகளுக்கும் மூலகாரணமான சிவபெருமானால்


அஜத்து – ஆட்டு வாகனமும்


உருமிக்கு – வெப்பமும் கொண்ட


மெய்யோன் – உடம்பினை உடைய அக்னிதேவனின்


கையில் சேர்த்த – (பொறிகாளாய் இருக்கும் போதே) கரத்தில் கொடுக்கப்பட்ட


செவ்வேள் – குமர வேளே!


தேவர்கள் நற்கதி அடையும்படி, எல்லா உயிர்களுக்கும் மூலமாய் விளங்கும் சிவபெருமானால் (பொறிகளாய் இருக்கும்போதே), ஆட்டினை வாகனமாகக்கொண்டவனும் வெப்பம் நிறைந்த உடம்பை உடையவனுமான அக்னிதேவனின் கரத்தில் கொடுக்கப்பட்ட குமரனே!


சீ வனசத்து உருச் செய்யாள் மருக


சீ வனசத்து – ஸ்ரீ வனஜத்து – ஒளிவீசும் தாமரையை இருப்பிடமாகக் கொண்ட

உருச் செய்யாள் – சிவந்த நிறமுடைய மகாலட்சுமிக்கு

மருக – மருகனே!


ஓளிவீசும் தாமரையில் வீற்றிருக்கும் சிவந்த நிறத்தினளாம் மகாலட்சுமிக்கு மருகனே!

 

எனாது – என்றெல்லாம் சித்தத்தில் நிலைபெறச் செய்து தியானிக்காமல்


இடையே சீவன் அசத்து உரு எய்தி எய்தாப் பழி சிந்திப்பதே


இடையே – ஒரு பிறப்புக்கும் இறப்பிற்கும் இடையே

சீவன் – ஜீவனானது

அசத்து உரு எய்தி – ஜடமானதும், மலபாண்டமானதுமான தேகத்தை அடைந்து

எய்தாப் பழி சிந்திப்பதே - அதற்கு ஏற்கத்தகாத பெரிய பழியையே சிந்தித்துக்கொண்டு அவமே காலத்தைப் போக்குகிறது.


ஒரு பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே ஜீவனானது, ஜடமானதும், மலபாண்டமானதுமான உடலை அடைந்து, பெரும் பழியையே சிந்தித்துக்கொண்டு காலத்தைப் போக்குகிறது.


பொழிப்புரை:

தேவர்கள் உயிர் பிழைக்க, சிவபிரானால் அக்னியின் கரத்தில் கொடுக்கப்பட்ட வேளே! தாமரைச் செல்வி லட்சுமியின் மருமகனே! என்றெல்லாம் தியானித்துத் துதியாமல், அசத்தாகிய தன்னையும், சத்தாகிய பரம்பொருளையும் ஆராய்ந்து பார்க்காமல், மல சேர்க்கையாகிய தேகத்தைப் பெற்று, பிழைக்க வழி தேடுவதில் வீணாகக் காலம் கழிகிறது.

Comments