கந்தர் அந்தாதி - செய்யுள் 68

சேகர வாரண வேல்வீர வேடச் சிறுமிபத
சேகர வாரண மேவும் புயாசல தீவினையின்
சேகர வாரண வெற்பாள நாளுந் த்ரியம்பகனார்
சேகர வாரண நின்கையில் வாரணஞ் சீவனொன்றே

பதம் பிரித்த வடிவம்:

சே கரவா ரண வேல் வீர! வேடச்சிறுமி பத
சேகர! வாரணம் மேவும் புயாசல! தீவினையின்
சேகு அர! ஆரண வெற்பாள! நாளும் த்ரியம்பகனார்
சே கர வாரணம் நின் கையில் வாரணம் சீவன் ஒன்றே.

பொருள்:

சே கரவா ரண வேல் வீர

சே - அடியவர்களைக் காப்பதில்
கரவா - வஞ்சனை இல்லாத அல்லது பின்வாங்குதல் இல்லாத
ரண வேல் வீர - போர் செய்வதில் வல்லமையுள்ள வேலாயுதத்தைத் தாங்கிய வீரனே!

அடியார்களைக் காப்பதில் பின்வாங்குதல் இல்லாததும் போர் புரிவதில் வல்லமையுள்ளதுமான வேலைக் கையில் தாங்கிய வீரனே!

வேடச்சிறுமி பத சேகர 

வேடச்சிறுமி - வள்ளி நாயகியின்
பத - தாள்களை
சேகர - சிரசில் ஏந்தியவனே!

[தந்தை- சந்திரசேகரன்; மகன் - வள்ளிபதசேகரன்]
[பணி யா என வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயாபரனே - கந்தர் அநுபூதி]

வள்ளியின் பாதத்தைத் தலையில் தாங்கியவனே!

வாரணம் மேவும் புயாசல 

வாரணம் மேவும் - தெய்வயானை தழுவும்
புயாசல - மலை போன்ற தோள்களை உடையவனே!

தெய்வயானை தழுவும் மலை போன்ற தோள்களை உடையவனே!

தீவினையின் சேகு அர

 தீவினையின் - அடியார்களின் கொடியவினையின்
சேகு - வஜ்ரம் போன்ற திடத்தன்மையை
அர - அரம் போன்று பொடி செய்தவனே!

அடியார்களுடைய கொடுவினையின் திடத்தன்மையைப் பொடி செய்தவனே!

ஆரண வெற்பாள - வேதங்கள் போற்றும் திருச்செங்கோட்டு அதிபனே! 

நாளும் த்ரியம்பகனார் சே கர வாரணம் நின் கையில் வாரணம் சீவன் ஒன்றே

நாளும் - தினந்தோறும் (ஒலியெழுப்பும் காரணத்தால்)
த்ரியம்பகனார் - முக்கண்ணராம் சிவபெருமான் ஏறும்
சே - விடையாகிய திருமாலின்
கர - கையிலிருக்கும்
வாரணம் - பாஞ்சஜன்யம் என்னும் சங்கிற்கும் 
நின் கையில் - உன் கையில் உள்ள கொடியில் இருக்கும்
வாரணம் - சேவலுக்கும்
சீவன் ஒன்றே - (இரண்டிற்கும்) உயிர் ஒன்றாய் இருக்குமோ?

தினமும் ஒலி எழுப்பி இரவு காலத்தை நீடிக்க விடாமல் பொழுது புலர்வதை அறிவிக்கும் திருமாலின் சங்கிற்கும் உன் கொடியில் உள்ள சேவலுக்கும் உயிர் ஒன்றுதானோ?

பொழிப்புரை:

முருகா! உனைச் சேர்ந்திருக்கும் இரவு காலத்தை நீடிக்க விடாமல் பொழுது புலர்வதைத் தொனிசெய்து காட்டும் திருமாலின் பாஞ்சஜன்யத்திற்கும் உன் கையில் உள்ள கொடியில் விளங்கும் சேவலுக்கும் உயிர் ஒன்றுதானோ?

[பொழுது விடிந்து விட்டால் தலைவன் தன்னை விட்டுப்பிரிவான் என்று வருந்தும் தலைவி, பொழுது புலர்வதைத் தன் ஒலியால் அறிவிக்கும் சங்கிற்கும், முருகனின் கொடியில் இருக்கும் சேவலுக்கும் உயிர் ஒன்றாக இருக்குமோ என்று கேட்கிறாள்.]

கந்தர் அந்தாதி செய்யுள் 68 விளக்கவுரை 



Comments