கந்தர் அந்தாதி - செய்யுள் 66
சீகர
சிந்துர வுத்தவெஞ் சூர செயபுயவ
சீகர
சிந்துர வல்லிசிங் கார சிவசுதசு
சீகர
சிந்துர கந்தர வாகன் சிறைவிடுஞ்சு
சீகர
சிந்துர மால்வினைக் குன்றைச் சிகண்டிகொண்டே
பதம் பிரித்த வடிவம்:
சீகர
சிந்து ரவுத்த வெஞ்சூர செய புய
(வ)சீகர
சிந்துர வல்லி சிங்கார சிவசுத
(சு)சீ
கர சிந்துர கந்தர வாகன் சிறைவிடும்
(சு)சீகர
சிந்து உர மால் வினை குன்றை சிகண்டி கொண்டே.
பொருள்:
சீகர சிந்து ரவுத்த வெஞ்சூர செய
சீகர
– அலைவீசும்
சிந்து
– கடலின் கண்
ரவுத்த
– பெரிய போர் வீரனான
வெம்
சூர செய – கொடிய சூரபத்மனை ஜெயித்தவனே!
அலைவீசும் கடலிடத்தே போர் வீரனான சூரபத்மனை வென்றவனே!
புய வசீகர சிந்துர வல்லி சிங்கார
புய
வசீகர – உனது தோள்களை விரும்பி அணைப்பதில் பிரியமுள்ளவளும்
சிந்துர
– நெற்றியில் திலகம் தீட்டியவளும்
வல்லி
– கொடி போன்றவளுமாகிய வள்ளியம்மைக்குரிய
சிங்கார – அழகு ஆபரணங்களை அணிந்தவனே!
உன்னுடைய தோள்களை விரும்புபவளும்,
நெற்றித் திலகம் அணிந்தவளும், கொடி போன்றவளுமான வள்ளியம்மைக்காக அழகிய ஆபரணங்களை அணிந்தவனே!
சிவசுத – சிவகுமரனே!
சுசீ கர – அக்னியினால்
கையில் ஏந்தப்பட்டவனே!
சிந்துர கந்தர வாகன் சிறைவிடும் சுசீகர
சிந்துர
– ஐராவதத்தையும்
கந்தர
– மேகத்தையும்
வாகன்
– வாகனமாகக் கொண்ட இந்திரன்
சிறைவிடும்
– சிறையைக் களைந்த
சுசீகர – பரிசுத்த மூர்த்தியே!
ஐராவதத்தையும் மேகத்தையும்
வாகனமாகக் கொண்ட இந்திரனின் சிறையைக் களைந்த தூயவனே!
சிந்து உர மால் வினை குன்றை சிகண்டி கொண்டே.
உர
– வலிமை மிக்க
மால்
– மயக்கத்தைத் தருகின்ற
வினைக்குன்றை
– இருவினைகளாகிய கல் மலையை
சிகண்டிகொண்டே
– மயில் வாகனத்தில் வந்து / மயில் வாகனத்தை ஏவி
சிந்து – சிதற அடித்துவிடு
[படர் சக்ரவாளகிரி துகள்பட வையாளி வரு மயில் (மயில் விருத்தம்)]
வலியதும் மயக்கம் தரக்கூடியதுமான
இருவினைகளாகிய கற்குன்றை, மயிலில் ஏறி வந்து அல்லது மயில் வாகனத்தை ஏவி, சிதற அடித்துவிடுவாயாக.
பொழிப்புரை:
சமுத்திரத்தில் ஒளிந்த சூரனை ஜெயித்தவனே! வள்ளி நாயகிக்காக அலங்காரம் புரிந்துகொண்ட அழகிய தோள்களை உடையவனே! சிவகுமரனே! அக்னியின் கைகளால் ஏந்தப்பட்டவனே! இந்திரனின் சிறையைக் களைந்த தூயவனே! நீ மயிலேறி வந்து என் பூர்வ வினையாகிய குன்றைப் பொடியாக்கிவிடு.
.jpg)
Comments
Post a Comment