கந்தர் அந்தாதி - செய்யுள் 64

சேவக மன்ன மலர்க்கோமுன் னீசொலத் தெய்வவள்ளி

சேவக மன்ன வதனாம் புயகிரி செற்றமுழுச்

சேவக மன்ன திருவாவி னன்குடிச் செல்வகல்விச்

சேவக மன்ன முநிக்கெங்ங னாணித் திகைப்புற்றதே


பதம் பிரித்த வடிவம்:

சே அகம் மன்னு அமலர்க்கு ஓம் முன் நீ சொல, தெய்வ வள்ளி

சே அகம் அன்ன வதனாம்புய! கிரி செற்ற முழுச்

சேவக! மன்ன! திருஆவினன்குடிச் செல்வ! கல்விச்

சேவகம் அன்ன முனிக்கு எங்ஙன் நாணி திகைப்புற்றதே!


பொருள்:

தெய்வ வள்ளி சே அகம் அன்ன வதனாம்புய! 

தெய்வ வள்ளி – தெய்விகம் பொருந்திய வள்ளியின்

சே அகம் அன்ன – கருணையினால் சிவந்த இதயத்தாமரை போல் விளங்கும்

வதனாம்புய – முகாரவிந்தம் உடையவனே!

வள்ளியின் இதயத்தாமரை போல் விளங்கும் முகம் உடையவனே!


கிரி செற்ற முழுச்சேவக! 

கிரி செற்ற – கிரௌஞ்ச மலையை அழித்த

முழுச்சேவக - ஒப்பற்ற வீரனே!


கிரௌஞ்ச மலையை அழித்த சுத்த வீரனே!


மன்ன! – தலைவனே


திருஆவினன்குடிச் செல்வ!ஆவினன்குடியில் வாழ் குமரனே! 


சே அகம் மன்னு அமலர்க்கு ஓம் முன் நீ சொல

சே அகம் மன்னு – ரிஷப வாகனத்தின் மேல் நிலைபெற்று விளங்கும்

அமலர்க்கு – குற்றமற்ற பரிசுத்தரான சிவபிரானுக்கு

ஓம் முன் நீ சொல – பிரணவத்தின் பொருளை முன்பு நீ உபதேசம் செய்ய


ரிஷபத்தின் மேல் விளங்கும் குற்றமற்ற பரிசுத்தரான சிவபிரானுக்கு, முன்பொரு நாள் பிரணவத்தின் பொருளை நீ உபதேசிக்க


கல்விச் சேவகம் அன்ன முனிக்கு எங்ஙன் நாணி திகைப்புற்றதே!

கல்விச் சேவகம் – வேதம் ஓதுவதில் வல்லமையும்

அன்ன – அன்ன வாகனமும் உடைய

முனிக்கு – பிரமனுக்கு

எங்ஙன் நாணி – எவ்விதத்தில் வெட்கம் ஏற்பட்டு

திகைப்புற்றதே – பிரணவப் பொருள் தெரியாமல் மயங்கி நின்றான்?

வேதம் ஓத வல்லவனும் அன்ன வாகனனுமான பிரமன் எதற்காக பொருள் தெரியாமல் வெட்கி நிற்க வேண்டும்?


பொழிப்புரை:

வள்ளியின் இதயக்கமலம் போன்று சிவந்த முகமுடையவனே! கிரௌஞ்ச கிரியை அழித்த வீரனே! ஆவினன்குடி ஆண்டவனே! நீ சிவபெருமானுக்கு உபதேசித்த பிரணவத்தின் பொருள் தெரியாமல் பிரமன் வெட்கமுற்று நின்றது ஏன்?

Comments