கந்தர் அந்தாதி - செய்யுள் 63
தியங்காப் பொறியுண் டெனுந்தனுத் தீதலு மேதியையூர்
தியங்காப் பொறியுண் டவமிலி யேயென்று செப்பலுஞ்சத்
தியங்காப் பொறியுண் டயன்கைப் படாது திரவெற்புநி
தியங்காப் பொறியுண்டை பண்டுயப் போர்செய்த சேவகனே
பதம் பிரித்த வடிவம்:
தியங்காப் பொறி உண்டு எனும் தனு தீதலும், மேதியை
(ஊர்)தி, "அங்கா பொறி உண் தவமிலியே" என்று செப்பலும்
(சத்)தியம்; கா பொறியுண்டு அயன் கைப்படாது; திர வெற்பு
(நி)தியம் கா பொறியுண்டை பண்டு உய போர் செய்த சேவகனே!
பொருள்:
தியங்காப் பொறி உண்டு எனும் தனு தீதலும்
தியங்கா – சற்றும் கலக்கமில்லாத
பொறி உண்டு எனும் – ஐம்புலன்களை உடைய
தனு – இந்தத் தேகம்
தீதலும் – அந்திம காலத்தில் அக்னியில் வெந்து போவதும்
கலக்கமில்லாத ஐம்புலன்களை உடைய இந்த உடம்பு, இறுதி காலத்தில் தீயில் வெந்து போவதும்…
மேதியை ஊர்தி, "அங்கா பொறி உண் தவமிலியே" என்று செப்பலும் சத்தியம்
மேதியை ஊர்தி – எருமை வாகனமுடைய எமதூதன்
(என்னை எமபுரத்திற்குக் கொண்டு சென்று)
அங்கா! – வாயைத் திற
தவமிலியே – சற்றும் தவம் செய்யாத பாவியே
பொறி உண் – (கருணை இல்லாமல் பிராணிகளைக் கொன்று சாப்பிட்ட பாவத்திற்காக) தீப்பொறிகளைச் சாப்பிடு
என்று செப்பலும் – என்று சொல்வதும்
சத்தியம் – உண்மை (ஆதலால்)
எருமையின் மேல் வரும் எமதூதர்கள் என்னை எமபுரத்திற்குக் கொண்டு சென்று, “தவப் பலன் ஏதும் இல்லாத பாவியே! வாயைத் திற” என்று சொல்லி, கருணை சிறிதும் இல்லாத நான் செய்த பாவத்திற்காக என் வாயில் தீப்பொறிகளை இடப்போவதும் சத்தியம்.
கா பொறியுண்டு அயன் கைப்படாது
பொறியுண்டு – பிரமலிபி என் தலையில் எழுதப்பட்டு
அயன் கைப்படாது – பிரமன் மீண்டும் என்னைச் சிருஷ்டிக்காதபடி
கா – காப்பாற்றுவாயாக
ஆதலால், மீண்டும் நான் பிறவாதபடி என்னைக் காப்பாய்.
திர வெற்பு நிதியம் கா பொறியுண்டை பண்டு உய போர் செய்த சேவகனே!
நிதியம் – சங்கநிதி, பதுமநிதி இவைகளும்
கா – கற்பக விருட்சமும் ஆக விளங்கும்
பொறியுண்டை – செல்வத்தினை உடைய பொன்னுலகு
பண்டு உய்ய – முன்பு அழியாமல் பிழைக்கும்படி
திரவெற்பு போர்செய்த சேவகனே! – நிலைபெற்ற கிரௌஞ்ச கிரியைப் போரில் வென்று அழித்த முழு வீரனே!
சங்க-பதும நிதிகளும், கற்பகத்தருவும் உடைய செல்வச்செழிப்பு மிக்க பொன்னுலகு முற்காலத்தில் அழியாதவாறு, கிரௌஞ்ச கிரியின் மேது வேலைச் செலுத்தி அழித்த வீரனே!
பொழிப்புரை:
தேவலோகத்தைக் காக்கும் பொருட்டு, கிரௌஞ்ச கிரியை அழித்தவனே! வாழ்நாள் முடிவில் இவ்வுடல் தகிக்கப்பட்டு என் ஜீவனை யமன் கொண்டு போய் நரக வேதனைக்கு ஆளாக்குவது நிஜம். ஆதலால் மீண்டும் பிறவியை எடுக்காதபடி நீ என்னைக் காத்தருள்வாயாக!
.jpg)
Comments
Post a Comment