கந்தர் அந்தாதி - செய்யுள் 62

திலமுந் தயில முநிகர வெங்குந் திகழ்தருசெந்

திலமுந் தயில முருகா வெனாதத் திநகையினித்

திலமுந் தயிலமு தத்தா லுருகிய சித்தவென்னே

திலமுந் தயில கலவினை மேவித் தியங்குவதே

 

பதம் பிரித்த வடிவம்: 

திலமும் தயிலமும் நிகர எங்கும் திகழ்தரு

(செந்)தில! முந்து அயில! முருகா! எனாது அத்தி நகை இன்

(நித்)திலம் உந்து அயில் அமுதத்தால் உருகிய சித்த! என்

(ஏ)திலம் முந்தயில் அகல வினை மேவி தியங்குவதே

 

பொருள்

திலமும் தயிலமும் நிகர எங்கும் திகழ்தரு செந்தில!

திலமும் தயிலமும் நிகர – எள்ளும் எண்ணெயும் போல (கண்ணுக்குத் தெரியாமல் எள்ளில் எண்ணெய் விரவி இருந்தாலும், அது எள்ளை அரைக்கும் போது மட்டுமே வெளிவரும்.‌ அது போல..)

எங்கும் திகழ் தரு – சராசரமெங்கும் நீக்கமற நிறைந்து கொண்டு, ஆனால் பக்தியினால் வெளிப்படும் போது மட்டுமே நேரே தெரிகின்ற

செந்தில – செந்தில் ஆண்டவனே!

எள்ளும் எண்ணெயும் போல் கலந்து எங்கும் நீக்கமற நிறைந்துகொண்டு, பக்தியால் மட்டும் வெளிப்படுகின்ற செந்தில் ஆண்டவனே!

முந்து அயில! முருகா!

முந்து அயில – ஆயுதங்களுள் முதன்மை ஸ்தானத்தை வகிக்கின்ற வேலாயுதத்தை ஏந்தியவனே!

முருகா – கந்தக் கடவுளே!

ஆயுதங்களுள் முதன்மை ஸ்தானமுடைய வேலை ஏந்தியவனே! கந்தா!


அத்தி நகை இன் நித்திலம் உந்து அயில் அமுதத்தால் உருகிய சித்த! 

அத்தி நகை – தெய்வயானையின் பல்லாகிய

இன் நித்திலம் – இனிய முத்தானது

உந்து – செலுத்துகின்றதும்

அயில் – தன்னால் நுகரப்பட்டதுமான

அமுதத்தால் உருகிய – அதரபானமாகிய அமுதத்தால் மனம் குழைந்த

சித்த – உள்ளம் உடையவனே!

தெய்வயானையின் பல்லாகிய இனிய முத்து செலுத்துகின்றதும், தன்னால் நுகரப்பட்டதுமான அதரபானமாகிய அமுதத்தால் மனம் குழைந்த உள்ளம் உடையவனே!

(எனாது)என்றெல்லாம் துதியாமல்


ஏதிலம் முந்தயில் அகல வினை மேவி தியங்குவதே 

ஏதிலம் – உனது வழியடிமையாகிய நான் உன் மீது பக்தி இல்லாத மற்றவர்கள் போல்

முந்தயில் – முற்பிறவியில் சம்பாதிக்கப் பட்ட

அகல வினை மேவி – பெரிய தீவினைகளை அடைந்து

தியங்குவதே – வருந்தி உழல்வது

(என்) – என்ன காரணத்தினாலோ?

உன் வழியடிமையாகிய நான் உன் மீது பக்தியற்ற மற்றவர்களைப் போல் முற்பிறப்பில் சம்பாதிக்கப்பட்ட தீவினைகளை அடைந்து வருந்துவது என்ன காரணத்தினாலோ?

பொழிப்புரை:

தெய்வயானையின் அணைப்பில் இன்பம் காணும் முருகக்கடவுளே! எள்ளும் எண்ணெயும் போல் எங்கும் நிறைந்து நிற்பவனே! வேலாயுதனே! செந்திலம்பதியோனே! என்றெல்லாம் துதியாமல் உனது வழிவழி அடிமையாகிய நான், அயலாரைப் போல், பழவினையால் மயங்குவது பொருத்தமாகுமோ? 

“வினை ஓடவிடும் கதிர் வேல்” – கந்தர் அநுபூதி

பழவினைகளைப் போக்க வல்ல உனது வேலும், என் விஷயத்தில் பாராமுகமுமாக உள்ளது என்ற குறிப்பும் வருகிறது.

Comments