கந்தர் அந்தாதி - செய்யுள் 60

செப்பத் தமதிலை மாற்றார் கொளுமுன்னஞ் செல்வர்க்கிடச்
செப்பத் தமதிலை யெங்ஙனுய் வார்தெய்வ வேழமுகன்
செப்பத் தமதிலை வாணுத னோக்கினர் சேணில்வெள்ளிச்
செப்பத் தமதிலை வென்றார் குமாரவத் திக்கரசே

பதம் பிரித்த வடிவம்:

செப்பத் தமது இலை மாற்றார் கொளும் முன்னம் செல்வர்க்கு இடச்
செப்பு அத்தம் அது இலை எங்ஙன் உய்வார்? தெய்வ வேழமுகன்
செப்பு அத்தம! திலை வாள் நுதல் நோக்கினர் சேணில் வெள்ளி,
செப்பு, அத்த மதிலை வென்றார் குமார! அத்திக்கு அரசே!

பொருள்:

செப்பத் தமது இலை மாற்றார் கொளு முன்னம் செல்வர்க்கு இடச்
செப்பு அத்தம் அது இலை எங்ஙன் உய்வார்? 

செப்ப – நடு நிலைமையுடன்
தமது இலை – இல்வாழ்க்கைக்குரிய தமது மனைவியைக்கூட
மாற்றார் கொளு முன்னம் – பகைவர்கள் அபகரித்துக் கொள்ளுமுன்பே
செல்வர்க்கு – தனவந்தர்களுக்கு
இட செப்பு – தானம் கொடுத்துச் சிவந்துபோன
அத்தம் அது இலை – கைகள் வாய்க்கப் பெறாவிடில்
எங்ஙன் உய்வார்? – எப்படி நற்கதி அடைவார்கள்?

செல்வத்தின் நிலையாத் தன்மையை அறிந்திருக்கும் செல்வந்தர்கள், அவற்றை தானம் செய்யாவிடில் எவ்வாறு உய்வார்கள்?

தெய்வ வேழமுகன் செப்பு அத்தம! 

தெய்வ வேழமுகன் – தெய்விகமான யானைமுகனாம் கணபதியார்
செப்பு அத்தம – புகழ்ந்து பேசிய தம்பியே!

விநாயகப்பெருமான் போற்றும் இளையவனே!

திலை வாள் நுதல் நோக்கினர் சேணில் வெள்ளி, செப்பு, அத்த மதிலை வென்றார் குமார! 

திலை – தில்லை ஆடலரசரும்

வாள் நுதல் நோக்கினார் – ஒளி பொருந்திய நெற்றியில் மூன்றாவது கண்ணை உடையவரும் (அ) பார்வதியை விரும்பினவரும்

சேணில் – ஆகாயத்தில்
வெள்ளி, செப்பு, அத்த – வெள்ளி, செம்பு, பொன் இவற்றாலான
மதிலை வென்றார் குமார – திரிபுரங்களை ஜெயித்தவருமான பரமசிவனின் குமாரனே!

தில்லையில் நடமாடுபவரும், நெற்றிக்கண் உடையவரும். ஆகாயத்தில் திரிந்துக்கொண்டிருந்த திரிபுரங்களை வென்றவருமான சிவனாரின் மகனே!

அத்திக்கு அரசே!

தேவயானையின் தலைவனே!

பொழிப்புரை:

கணபதிக்கு இளையவரே! நெற்றிக்கண்ணரும், திரிபுரம் எரித்தவரும், சிதம்பர நடராஜருமாகிய பரமசிவனின் மைந்தனே! தெய்வயானை மணாளனே! செல்வத்தின் நிலையாமை பற்றி அறிந்த செல்வந்தர்கள், தான தர்மங்கள் செய்யாவிடில் எப்படிக் கடைத்தேறுவார்கள்?

Comments