கந்தர் அந்தாதி - செய்யுள் 59

சேர்ப்பது மாலய நீலோற் பலகிரித் தெய்வவள்ளி

சேர்ப்பது மாலய முற்றா ரெனப்பலர் செப்பவெப்புச்

சேர்ப்பது மாலய வத்தைமன் யாக்கை சிதைவதன்முன்

சேர்ப்பது மாலய வாசவன் செப்பிய செப்பதத்தே


பதம் பிரித்த வடிவம்:

சேர் பதும் ஆல் அய நீலோற்பல கிரி தெய்வ வள்ளி

சேர்ப்ப! துமால் லயமுற்றார் எனப் பலர் செப்ப வெப்பு,

சேர்ப்பது, மால் ஐ அவத்தை மன் யாக்கை சிதைவதன் முன்

சேர்ப்பது மால் அய வாசவன் செப்பிய செ பதத்தே.


பொருள்:

சேர் பதும் ஆல் அய நீலோற்பல கிரி தெய்வ வள்ளி சேர்ப்ப!

சேர் – நெருங்கி இருக்கும்

பதும் – தாமரைகளும்

ஆல் – அசைகின்ற

அய – ஜலத்தின் கண்

நீலோற்பல கிரி – செங்கழுநீர் மலர்கள் பூக்கின்ற திருத்தணியில் வாழும்

தெய்வ – தெய்விக சக்தி ஆகிய

வள்ளி சேர்ப்ப – வள்ளி மணாளனே!

தாமரை, செங்கழுநீர் மலர்கள் பூக்கின்ற திருத்தணியில் வாழும் தெய்விக சக்தியாகிய வள்ளி மணாளானே!


துமால் லயமுற்றார் எனப் பலர் செப்ப

துமால் – தும்மல் போட்டார், போட்டதும்

லயமுற்றார் – இறந்து விட்டாரே

எனப் பலர் செப்ப – என்று பலரும் வியப்புடன் சொல்வதற்கு முன்

[97 ஆவது செய்யுளில் தும்மல் ஏற்படும் போதெல்லாம் குமரா சரணம் என்று சொல்லச் சொல்கிறார்]

தும்மல் போட்டார்; போட்டதும் இறந்து விட்டார் என்று பலரும் வியந்து சொல்வதற்கு முன்


வெப்பு, சேர்ப்பது, மால் ஐ அவத்தை மன் யாக்கை சிதைவதன் முன்

வெப்பு சேர்ப்பது – வெதும்புகின்ற பித்தம், வாயு, கபம்

மால் – மயக்கம்

ஐ அவத்தை – ஐந்து அவஸ்தைகள்,


(இவை)


மன் – நிரம்பி இருக்கும்

யாக்கை – இவ்வுடல்

சிதைவதன் முன் – அழிந்து போகும் முன்

பித்தம், வாயு, கபம், மயக்கம், ஐந்து அவஸ்தைகள் நிறைந்த இவ்வுடல் அழியும் முன்


[பஞ்ச அவஸ்தைகள் – 

ஜாக்ரத் – விழிப்பு நிலை

சொப்னம் – கனவு நிலை (மனம் வேலை செய்யும்)

சுஷுப்தி – மனமும், புலனும் செயலற்றிருக்கும் நிலை

துரியம் – யோகியர் செயலற்றிருக்கும் நிலை

துரியாதீதம் – ஆன்மா மிகத் தூய்மையாய் நிற்கும் நிலை]

 

சேர்ப்பது மால் அய வாசவன் செப்பிய செ பதத்தே

சேர்ப்பது – என்னைச் சேர்த்தருள வேண்டும்


(எங்கே என்றால்)


மால் – திருமால்

அய – பிரம்மன்

வாசவன் – இந்திரன்


(இவர்கள் யாவரும்)


செப்பிய – போற்றி வணங்கிய

செ பதத்தே – சிறந்த உன் திருவடித்தாமரையில்

திருமால், பிரம்மன், இந்திரன் ஆகியோர் வணங்கிய உன் திருவடித் தாமரையில் என்னைச் சேர்த்தருள வேண்டும்.


பொழிப்புரை:

தணிகேசனே! வள்ளி மணாளனே! வெப்பு, சிலேத்துமம் (கபம்), மயக்கம் முதலான கேடுகள் நிறைந்த இவ்வுடல் அழிவதற்கு முன்னாலும், “தும்மினான், உடனே இறந்தான்” என்று பலர் பேசுவதற்கு முன்னும், தேவர்கள் அனைவரும் போற்றும் உனது சிறந்த திருவடிகளில் நீ என்னைச் சேர்த்துக்கொண்டுவிட வேண்டும். 

[திருப்புகழ் உரையாசிரியர் டாக்டர் செங்கல்வராயப் பிள்ளை அவர்கள், தணிகேசன் சந்நிதியில் கந்தர் அந்தாதியை ஓதிக்கொண்டிருந்த போது, ‘சேர் பதும் ஆல்’ எனத் தொடங்கும் இந்த 59 ஆவது அந்தாதியை ஓத மறந்துவிட்டார். அன்றிரவு அவர் கனவில், சிறுவனாகத் தோன்றிய முருகன், “நல்ல எலுமிச்சம்பழமொன்று கந்தர் அந்தாதியில் மறந்தனை” என்று கூறிச் சென்றாராம். பெரியவர்களைப் பார்க்கச் செல்லும் போது, எலுமிச்சம்பழக் காணிக்கை செலுத்துவது வழக்கம். எனவே தணிகேசனுக்கு அருணகிரியார் அளித்த இந்தக் காணிக்கை அவனுக்கு மிகவும் விருப்பமாயிற்று என்று தெரியவருகிறது]

Comments