கந்தர் அந்தாதி - செய்யுள் 57
தீத்தன் பரவை வெளிநீங்கிச் சேய்தொழச் செல்பதவுத்
தீத்தன் பரவை முறையிட மாங்குறை தீங்குறவே
தீத்தன் பரவை தழைக்கவிண் காவெனச் சென்னியின்மேல்
தீத்தன் பரவையில் வேலத்த னேகுரு சீலத்தனே
பதம் பிரித்த வடிவம்:
தீத்தன் பரவு ஐ வெளி நீங்கிச் சேய் தொழ செல் பத
(உத்)தீத்தன், பரவை முறையிட, மாங்குறை தீங்கு அறவே
தீத்து, அன்பர் அவை தழைக்க “விண் கா” எனச் சென்னியின் மேல்
தீத்தன் பரவு ஐயில் வேல் அத்தனே! குருசீலத்தனே!
பொருள்:
தீத்தன் பரவு ஐ வெளி நீங்கிச் சேய் தொழ செல் பத உத்தீத்தன், பரவை முறையிட
தீத்தன் – கிரணங்களை உடைய சூரியன்
பரவு – சஞ்சாரம் செய்யும்
ஐ வெளி – அழகிய ஆகாச வெளியையும்
நீங்கி – கடந்து சென்று
சேய் – தன் பிள்ளையாம் பிரம்மனும்
தொழ – பயந்து வணங்கும்படி
செல் – த்ரிவிக்ரம அவதாரத்தில்
பத உத்தீத்தன் – பாதத்தை ஊர்த்துவ தாண்டவமாக எடுத்த திருமாலும்
பரவை – கடலும்
முறையிட – அபயம் என்று கூறி முறையிட்டனர்
திருமாலும், கடலும் முறையிட
மாங்குறை தீங்கு அறவே தீத்து
மாங்குறை – மாமரமாகிய சூரனால் உண்டான துன்பத்தையும்
தீங்கு – தீமையையும்
அறவே தீத்து – முழுவதும் நீங்கும்படி ஒழித்து
சூரபத்மனால் உண்டான தீமை, துன்பம் ஆகியவை முழுதும் அழிந்து
அன்பர் அவை தழைக்க “விண் கா” எனச் சென்னியின் மேல் தீத்தன் பரவு ஐயில் வேல் அத்தனே! குருசீலத்தனே!
அன்பர் அவை தழைக்க – அடியார் கூட்டம் செழிக்கும்படி
விண் கா என – விண்ணுலகைக் காப்பாற்று என
சென்னியின் மேல் – சிரசின் கண்
தீத்தன் – கங்கை ஜலத்தைச் சூடியிருக்கும் பரமசிவன் சொல்ல
பரவு – அவரை வணங்கி (அவ்வேலையைச் செய்து முடித்து)
ஐயில் வேல் அத்தனே! – கூரிய வேலாயுதத்தைக் கையில் ஏந்திய முருகப்பெருமானே!
குரு சீலத்தனே – குருவாய் அச் சிவனுக்குப் பிரணவப் பொருளை உபதேசித்த நற்குணக் குன்றே!
அடியார் கூட்டம் செழிக்க, சூரனை அழிக்கும்படி சிவன் கட்டளை இட, அதனை ஏற்று அவரை வண0ங்கி அந்த வேலையைச் செய்துமுடித்த பெரிய வீரனே!
பொழிப்புரை:
வாமன அவதாரம் எடுத்து உலகளந்த பெருமாளாம் திருமாலும், சமுத்திரமும் முறையிட, சூரனை வதைத்து அடியார் கூட்டம் சுகமாய் வாழ அமராவதியைக் காத்து வா என பரமசிவன் பணிக்க, அவரை வணங்கி அவ்வேலையைச் செய்து முடித்த வேலாயுதனே! சிவனுக்குக் குருவாய் விளங்கிப் பிரணவப் பொருளை உபதேசித்தவனே!
சிவன் "நீ போய் வானவர் சிறைதீரச்
சகல லோக்கியமே தானாளுறும்
அசுர பார்த்திபனோடே சேய் அவர்
தமரை வேற்கொடு நீறாயேபட விழமோது"என்(று)
அருள ஏற்று அமரோடே போய் அவர்
உறையு மாக்கிரியோடே தானையும்
அழிய வீழ்த்தெதிர் சூரோடே அமர் அடலாகி
அமரில் வீட்டியும் வானோர் தானுறு
சிறையை மீட்(டு) அரனார்பால் மேவிய
அதி பராக்ரம வீரா
[நிருதரார்க்கொரு – பொதுத் திருப்புகழ்]
.jpg)
Comments
Post a Comment