கந்தர் அந்தாதி - செய்யுள் 56
தென்ன வனங்கனஞ் சூழ்காத் திரிநக சூலகரத்
தென்ன
வனங்கனந் தப்பத நீட்டினன் செல்வமுன்பின்
தென்ன
வனங்கனன் னீற்றாற் றிருத்திய தென்னவின்னந்
தென்ன
வனங்கனங் கைச்சிலைக் கூனையுந் தீர்த்தருளே
பதம் பிரித்த வடிவம்:
தென்ன
வனம் கனம் சூழ் கா திரிநக! சூலகர
தென்னவன்
அங்க னந்த பத நீட்டினன் செல்வ! முன்பின்
தென்னவன்
அங்கம் நன்னீற்றால் திருத்திய தென்ன இன்னம்
தென்ன
அனங்கன் அம் கை சிலை கூனையும் தீர்த்து அருளே.
பொருள்:
தென்ன வனம் கனம் சூழ் கா திரிநக
தென்ன
வனம் – தென்னஞ்சோலைகளும்
கனம்
– மேகங்களும்
சூழ்
கா – கவிந்து கொண்டிருக்கும் பூஞ்சோலைகளும் உடைய
திரி நக – திருத்தணி, திருப்பரங்குன்றம், திருச்செங்கோடு ஆகிய மும்மலைகளுக்கும் அதிபனே!
தென்னஞ்சோலைகள், மேகங்கள்,
பூஞ்சோலைகள் நிறைந்த திருத்தணி, திருப்பரங்குன்றம், திருச்செங்கோடு ஆகிய மூன்று மலைகளுக்கும்
அதிபதியே!
சூலகரத் தென்னவன் அங்க னந்த பத நீட்டினன் செல்வ
சூலகர
– கையில் சூலத்தைப் பிடித்திருக்கும்
தென்னவன்
– தென் திசைக்கு அதிபதியான யமராஜனின்
அங்கனந்த
– உடல் அழியும்படி
பத
நீட்டினன் – காலை நீட்டி உதைத்த பரமசிவனின்
செல்வ
– குமாரனே!
கையில் சூலத்தைப் பிடித்திருக்கும்
யமனுடைய உடல் அழியும்படி உதைத்த பரமசிவனின் குமாரனே!
முன்பின் தென்னவன் அங்கம் நன்னீற்றால் திருத்திய தென்ன
முன்
பின் – முன்னே மார்பிலும், பின்னால் முதுகிலும் வளைவுகளை உடைய
தென்னவன்
– பாண்டியனின்
அங்கம்
– உடல் கூனை
நன்னீற்றால் திருத்தியதென்ன – நன்மையே பயக்கும் திருநீற்றால் சரிசெய்து நிமிர்த்தியது போல
உடலின் முன்னும், பின்னும்
கூனைப் பெற்ற பாண்டியனது கூனை, திருநீற்றால் சரிசெய்து நிமிர்த்தியது போல்
இன்னம் தென்ன அனங்கன் அம் கை சிலை கூனையும் தீர்த்து அருளே
இன்னம்
– இப்போது
தென்னன்
அனங்கன் – வனப்புடைய ஆனால் கண்ணிற்குப் புலப்படாத மன்மதனின்
அம்
கை சிலை – அழகிய கையில் பிடித்த கரும்பு வில்லின்
கூனையும்
– வளைவையும்
தீர்த்தருளே – [அவன் பாணங்களை என் மீது வீசுவதால் எனக்கு ஏற்படும் விரகதாபத்தையும்] தீர்த்தருள்வாயாக.
மன்மதன் என் மேல் பாணப் பிரயோகம்
செய்யாதபடி உன் மலர் மாலையைத் தந்தருள வேண்டும்.
“மால்கொண்ட
பேதைக்கு உன் மணநாறும்
மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே”
[நீலங்கொள்
மேகத்தின் – பொதுத் திருப்புகழ்]
[ஞானசம்பந்தராகத் தோன்றிய முருகன், கூன் பாண்டியனின் உடலில் இருந்த கூனை, திருநீறு தடவித் திருத்தினார் என்பது புராணம்]
பொழிப்புரை:
மும்மலைகளுக்கு அதிபனே! கூற்றை உதைத்த காலகாலனாம் சிவனாரின் மைந்தனே! முன்னும் பின்னும் விளங்கிய பாண்டியனது கூனை, திருநீற்றால் சரி செய்தது போன்று, மன்மதன், என்னை வருத்தும் கரும்புவில்லை வளைத்தலையும் தடுத்தருள வேண்டும். மன்மதனின் பாணங்கள் என் விரகதாபத்தை அதிகரித்துவிடாதபடி உன் மலர் மாலையைத் தந்தருள்வாயாக!
கந்தர் அந்தாதி செய்யுள் 56 விளக்கவுரை
.jpg)
Comments
Post a Comment