கந்தர் அந்தாதி - செய்யுள் 54
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே
பதம் பிரித்த வடிவம்:
திதத்தத் தத்தித்தத் திதி தாதை, தாத, துத்தித் தத்தி தா
திதத் தத்து அத்தி ‘ததி தித்தித்ததே து’ துதித்து இதத்து
(ஆ)தி! தத்தத்து அத்தித் தத்தை தாத! தீதே துதை
(தாது அதத்து உ)தி, தத்து அத்து, அத்தித் தித்தி தீ தீ திதி துதி தீ தொத்ததே
பொருள்:
திதத்தத் தத்தித்தத் திதி தாதை
திதத்தத் தத்தித்தத் – திதத்த தத்தித்த எனும் தாள வரிசைகளை
திதி – தனது நடனம் மூலம் நிலைப்படுத்துகின்ற
தாதை – உனது தந்தையாம் பரமசிவனும்
தாள வரிசைகளை நடனம் மூலம் நிலைப்படுத்துகின்ற உன் தந்தையாம் சிவபெருமானும்
தாத – மறை கிழவோனாம் பிரமனும்
துத்தி தத்தி தா திதத் தத்து அத்தி ‘ததி தித்தித்ததே து’
துத்தி – புள்ளிகளை உடைய படம் விளங்கும்
தத்தி – பாம்பாகிய ஆதிசேஷனின்
தா – முதுகாகிய இடத்தையும்
திதத் தத்து அத்தி – இருந்த இடத்திலேயே நிலைபெற்று, ஆனால், அலைகள் வீசுகின்ற பாற்கடலையும் தனது வாசஸ்தலமாகக் கொண்டு
ததி தித்தித்ததே து – (ஆயர்பாடியில்) “தயிர் மிக இனிப்பாக உள்ளதே” என்று கூறி அதை வாரி உண்ட திருமாலும்
புள்ளிகளை உடைய படம் விளங்கும் பாம்பாகிய ஆதிசேஷனின் முதுகையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று, ஆனால் அலைவீசுவதுமான பாற்கடலையும் தனது வசிப்பிடமாகக் கொண்டு, ஆயர்பாடியில், “தயிர் மிக இனிப்பாக உள்ளது” என்று கூறி அதனை வாரி உண்ட திருமாலும்
(பரமசிவனும், பிரமனும், திருமாலும்)
துதித்து இதத்து ஆதி
துதித்து – போற்றி வணங்குகின்ற
இதத்து – பேரின்ப சொரூபியான
ஆதி – மூலப்பொருளே!
சிவபெருமானும், பிரமனும், திருமாலும் போற்றி வணங்குகின்ற பேரின்ப வடிவான மூலப்பொருளே!
தத்தத்து அத்தி தத்தை தாத!
தத்தத்து அத்தி – தந்தங்களை உடைய யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட
தத்தை தாத – கிளி போன்ற தெய்வயானையின் தாசனே!
தந்தங்களை உடைய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட கிளி போன்ற தெய்வயானையின் தாசனே!
தீதே துதை தாது அதத்து உதி தத்து அத்து, அத்தி தித்தி
தீதே துதை – பல தீமைகள் நிறைந்ததும்
தாது – ரத்தம், மாமிசம் முதலான சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்
அதத்து உதி – மரணம் - பிறப்பு இவற்றோடு கூடியதும்
தத்து அத்து – ஆபத்துகள் நிறைந்ததுமாகிய
அத்தி தித்தி – எலும்பை மூடியிருக்கும் தோல் பை ஆகிய இந்த உடம்பு
பல தீமைகள் நிறைந்ததும், ரத்தம் முதலான சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் – பிறப்பு இவற்றோடு கூடியதும், ஆபத்துகள் நிறைந்ததுமாகிய எலும்பை மூடியிருக்கும் தோல் பை ஆகிய இந்த உடம்பு
தீ தீ திதி துதி தீ தொத்ததே
தீ – அக்னியினால்
தீ – தகிக்கப்படும்
திதி – அந்த இறுதி நாளில்
துதி தீ – இவ்வளவு நாள்களாக உன்னைத் துதித்து வந்த என் புத்தி
தொத்ததே – உன்னுடன் ஐக்கியமாகிவிட வேண்டும்
நெருப்பினால் தகிக்கப்படும் இறுதி நாளில், இவ்வளவு நாள்களாக உன்னைத் துதித்து வந்த என் புத்தி, உன்னுடன் ஒன்று சேர வேண்டும்.
பொழிப்புரை:
நடராஜ மூர்த்தியாகிய சிவபெருமானும், பிரமனும், இடைச்சேரியில் தயிர் உண்டு, பாற்கடலையும் ஆதிசேஷனையும் வாசஸ்தலமாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆதிமுதலே! தெய்வயானையின் தாசனே! ஜனன மரணத்திற்கு இடமாய், சப்த தாதுக்கள் நிறைந்த, பொல்லாத இவ்வுடம்பு, தீயினால் தகிக்கப்படும் அந்திம காலத்தில் இதுநாள்வரை உன்னைத் துதித்து வந்த என் சித்தத்தை உன் திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும்.
[‘த’கர வர்க்கத்தில் அமைந்த இச் செய்யுளுக்கு உரை கூறமுடியாமல் வில்லிபுத்தூரார் அருணகிரிநாதரிடம் தோல்வியுற்றார்.]
.jpg)
Comments
Post a Comment