கந்தர் அந்தாதி - செய்யுள் 53
தீவிலங் கங்கை தரித்தார் குமார திமிர முந்நீர்
தீவிலங் கங்கை வருமான் மருக தெரிவற்றவான்
தீவிலங் கங்கை வரவா விரைக்குத் திரிந்துழலுந்
தீவிலங் கங்கை யமன்றொட ராமற் றிதம்பெறவே
பதம் பிரித்த வடிவம்:
தீ விலம் கங்கை தரித்தார் குமார, திமிர முந்நீர்
தீ வில் அங்கம் கை வரு மால் மருக, தெரிவற்ற வான்
தீவில் அங்கங்கு ஐவர் அவாவு இரைக்குத் திரிந்து உழலும்
தீ விலங்கம் கை யமன் தொடராமல் திதம் பெறவே
பொருள்:
தீ விலம் கங்கை தரித்தார் குமார!
தீ – கரத்தில் அக்னியையும்
விலம் – தோளில் வில்வ மாலையையும்
கங்கை – சிரசின்கண் கங்கா நதியையும்
தரித்தார் – புனைந்திருக்கும் சிவபெருமானின்
குமார – பாலகனே!
கையில் நெருப்பையும், தோளில் வில்வமாலையையும், தலையில் கங்கையையும் புனைந்திருக்கும் சிவபெருமானின் பாலகனே!
திமிர முந்நீர் தீ வில் அங்கம் கை வரு மால் மருக!
திமிர – இருண்ட
முந்நீர் – ஊற்று நீர், ஆற்று நீர், மழை நீர் இவற்றால் உண்டாகிய சமுத்திரம்
தீ – வறண்டுபோகும்படித் தகிக்க
வில் அங்கம் – வில் வித்தையைக் காண்பித்த
கை வரு – வல்லவராகிய
மால் மருக – ராமசந்திரமூர்த்தியின் மருகனே!
இருளின் நிறம் கொண்டதும், ஊற்று நீர், ஆற்று நீர், மழை நீர் ஆகியவற்றால் உண்டானதுமான கடல் வற்றிப்போகும்படி வில் வித்தையைக் காண்பித்த ராமபிரானின் மருகனே!
“இலங்காபுரிக்குப் போகைக்கு நீ வழிகாட்டு என்று போய்க் கடல் தீக்கொளுந்த வாகைச்சிலை வளைத்தோன் மருகா” – (சாகைக்கு - கந்தர் அலங்காரம் பாடல் – 54)
தெரிவற்ற வான் தீவில் அங்கங்கு ஐவர் அவாவு இரைக்குத் திரிந்துழலும் தீவிலங்கம் கை
தெரிவற்ற – அறிவதற்கு அரிதான
வான் தீவில் – பெரிய தீவுகளிலும்
அங்கங்கு – வேறு பல இடங்களிலும்
ஐவர் – பஞ்சேந்த்ரியங்களால் ஏற்படும்
அவாவு – இச்சையினால் உந்தப்பட்டு
இரைக்கு – பல புலன் நுகர்ச்சிகளைப் பூர்த்தி செய்யும் உணவிற்காக
திரிந்துழலும் – அலைந்து திரிகின்ற
தீவிலங்கம் – துன்பத்தின் பலத்த தொடர்ச்சியை
கை – நீ கோபித்து அழிக்க வேண்டும்
அறிவதற்கு அரிதான பெரிய தீவுகளிலும், மற்ற இடங்களிலும் இந்த்ரியங்களினால் உண்டாகும் ஆசைகளால் உந்தப்பட்டு, அவற்றை நிறைவேற்றும் உணவிற்காக அலைந்து திரிகின்ற துன்பத்தின் தொடர்ச்சியை நீ அழிக்கவேண்டும்.
யமன் தொடராமல் திதம் பெறவே
யமன் தொடராமல் – யமன் என்னைத் தொடர்ந்து பிடிக்காமல்
திதம் பெறவே – உனது திருவடியில் நான் நிலை பெறவேண்டும்
[இப்பிறவியில் நிலையான பேறு பெற அருள்வாயே]
யமன் என்னைத் தொடர்ந்து வந்து பிடிக்காமல் உன் திருவடியில் நான் நிலைபெறவேண்டும்.
பொழிப்புரை:
கங்கையையும் வில்வத்தையும் அணிந்து, கரத்தில் அக்னியை ஏந்தும் பரமசிவனின் குமரனே! கடல் நீர் வற்றும்படி அதன் மேல் பாணம் செலுத்திய திருமாலின் மருகனே! என்னை யமன் வந்து பிடித்துக்கொள்ளாமல், நான் உன் திருவடியை ஸ்திரமாகப் பற்றிக்கொள்ளும்படி, ஐம்புலன்களின் ஆசைகளை ஒழித்தருள வேண்டும்.
.jpg)
Comments
Post a Comment