கந்தர் அந்தாதி - செய்யுள் 52

தித்திக்குந் தொந்திக்கு நித்தம் புரியுஞ் சிவன்செவிபத்

தித்திக்குந் தொந்திக் கறமொழி பாலக தேனலைத்துத்

தித்திக்குந் தொந்திக் கிளையாய் விளையுயிர்க் குஞ்சிதைதோல்

தித்திக்குந் தொந்திப் பனவேது செய்வினைத் தீவிலங்கே


பதம் பிரித்த வடிவம்:


தித்திக்கும் தொந்திக்கு நித்தம் புரியும் சிவன் செவி

(பத்)தித்திக்கு உந்து ஒம் திக்கற மொழி பாலக! தேன் அலைத்து

தித்திக்கும் தொந்திக்கு இளையாய்! விளை உயிர்க்கும் சிதை தோல்

தித்திக்கும் தொந்திப்பன ஏது செய் வினை தீ விலங்கே.


பொருள்:


தித்திக்கும் தொந்திக்கு நித்தம் புரியும் சிவன் செவி பத்தித்திக்கு உந்து ஒம் திக்கற மொழி பாலக!


தித்திக்கும் தொந்திக்கு – தித்தி, தொந்தி எனும் தாள வரிசைகளுக்கேற்ப

நித்தம் புரியும் – நடனம் புரிகின்ற

சிவன் – சிவபெருமானின்

செவி – செவிகளாகிய

பத்தித்திக்கு – வரிசையான ஐம்புலன்களிடத்து

உந்து – நுழையும்படி

ஒம் – ஓம் என்ற பிரணவத்தின் பொருளை

திக்கற – அச் சிவனின் கலக்கம் நீங்கும்படி [மருளற]

மொழி – உபதேசம் செய்த 

பாலக! – குமாரனே!


நடம் புரியும் சிவபெருமானின் செவிகளில் பிரணவோபதேசம் செய்தவனே!


தேன் அலைத்துத் தித்திக்கும் தொந்திக்கு இளையாய்!


தேன் அலைத்து – தின்பண்டங்களின் இனிமையினால்

தித்திக்கும் – இனிப்புற்று இருக்கும்

தொந்திக்கு – வயிற்றை உடைய கணபதிக்கு

இளையாய்! – தம்பியே!


இனிப்புப்பண்டங்களை உண்டு, அவற்றின் இனிமையால் இனிப்புற்றிருக்கும் பெருத்த வயிற்றையுடைய கணபதிக்குத் தம்பியே!


விளை உயிர்க்கும் சிதை தோல் தித்திக்கும் தொந்திப்பன ஏது செய் வினை தீ விலங்கே


விளை உயிர்க்கும் – கருப்பையில் உண்டாகிற ஜீவனுக்கும்

சிதை – அழிந்துபோகிற

தோல் தித்திக்கும் – தோலாகிய இந்த பைக்கும்

தொந்திப்பன – சம்பந்தம் ஏற்பட்டு பிறப்பு உண்டாவதற்கு

ஏது – காரணம்

செய் – நான் முற்பிறப்பில் செய்த

வினை – கருமங்களாகிய

தீ விலங்கே – கொடிய தளைகள் தானோ?


இவ்வுடலினுள் இவ்வுயிர் இருப்பதற்குக் காரணம் முற்பிறப்பில் செய்த கருமங்கள் தானா?


பொழிப்புரை:


தாளங்களுக்கேற்ப நடனம் புரியும் சபாபதியின் திருச்செவியில் ஓங்காரத்தை உபதேசித்த பாலகனே! விநாயகரின் இளையோனே! ஜடமாகிய இந்த பூத உடம்பிற்கும், சூட்சுமமாகிய உயிருக்கும் தொடர்பு உண்டாகி, பிறப்பு ஏற்படுவதற்கு என் பூர்வ ஜென்ம வினைகள் தாம் காரணமோ? 


(என் ஜீவன், தோல்பையாகிய இவ்வுடம்பில் கட்டுண்டு கிடக்கிறதே!)

Comments