கந்தர் அந்தாதி - செய்யுள் 51
சிகைத்தோகை மாமயில் வீரா சிலம்புஞ் சிலம்பம்புரா
சிகைத்தோகை மாமயில் வாங்கிப் பொருது திசைமுகன்வா
சிகைத்தோகை மாமயில் வானில்வைத் தோய்வெஞ் செருமகள்வா
சிகைத்தோகை மாமயில் செவ்விநற் கீரர்சொற் றித்தித்ததே
பதம் பிரித்த வடிவம்:
சிகை தோகை மா மயில் வீரா சிலம்பும் சிலம்பு
(அம்புரா)சி கை தோகை மா மய் இல் வாங்கி பொருது திசைமுகன்
(வா)சி கைத்து ஓகை மாமய் இல் வானில் வைத்தோய் வெஞ் செரு மகள்
(வா)சி கைத்தோ கைமா மாயில் செவ்வி நற்கீரர் சொல் தித்தித்ததே
பொருள்:
சிகை தோகை மா மயில் வீரா
சிகை – கொண்டையையும்
தோகை – கலாபத்தையும் உடைய
மா - பெரிய
மயில் – மயிலை வாகனமாக உடைய
வீரா வீரனே!
கொண்டையையும் கலாபத்தையும் உடைய பெரிய மயிலை வாகனமாக உடையவனே!
சிலம்பும் சிலம்பு அம்புராசி கை தோகை மா மய் இல் வாங்கி பொருது
சிலம்பும் – கிரௌஞ்ச மலையையும்
சிலம்பு அம்புராசி – முழங்குகின்ற சமுத்திரத்தினிடத்தில்
கை தோகை – ஒழுங்கான மேல் பரந்த கிளைகளை உடைய
மா – மாமரமாக நின்ற சூரபத்மனையும்
மய் இல் – இருளுக்கு இடமாகிய மாயையையும்
வாங்கிப் பொருது – விலக்கிப் போர் புரிந்தும்
கிரௌஞ்ச கிரியையும் சமுத்திரத்தினிடத்தில் மா மரமாக நின்ற சூரபத்மனையும் மாயையையும் விலக்கிப் போர் புரிந்தும்
திசைமுகன் வாசி கைத்து
திசைமுகன் – நான்கு முகங்கள் கொண்ட பிரம்மன்
வாசி – பிரணவத்தின் பொருளை அறியாமல் வேதத்தை ஓதிய குற்றத்திற்காக அவனை
கைத்து – கோபித்தும்
பிரணவத்தின் பொருளை அறியாமல் வேதம் ஓதிய குற்றத்திற்காக பிரம்மனைக் கண்டித்தும்
ஓகை மாமய் இல் வானில் வைத்தோய்
ஓகை – பெருமகிழ்ச்சியை
மாமய் இல் – அழகுக்கு இருப்பிடமான
வானில் – தேவலோகத்தில்
வைத்தோய் – விளைவித்தவனே
பெருமகிழ்ச்சியை, அழகுக்கு இருப்பிடமான தேவலோகத்தில் விளைவித்தவனே!
வெஞ் செரு மகள் வாசி கைத்தோ
வெஞ்ச் செரு மகள் – கொடிய போரில் வல்லவனாகிய பாண்டிய மன்னனது மகளின்
வாசி – குதிரை முகத்தை
கைத்தோ – மாற்றியவனே
போரில் வல்ல பாண்டிய மன்னனின் மகளின் குதிரை முகத்தை மாற்றியவனே!
[கலிங்க தேசத்து ராஜகுமாரி அங்கசுந்தரி ஹயக்ரீவ முநிவரை ஏளனம் செய்ததால், மறுபிறவியில் பாண்டிய அரசகுமாரியாக, குதிரை முகத்தோடு பிறந்தாள். சாப நிவர்த்தி வேண்டி, பல புனித தீர்த்தங்களில் நீராடி, செந்தூரில் கோயிலுக்கு முன்னிருக்கும் கடல் பகுதியில் நீராடிய போது, குதிரை முகம் நீங்கப்பெற்றாள்]
கைமா மாயில் செவ்வி
கைமா மயில் – யானையாம் ஐராவதத்தினாலே வளர்க்கப்பட்ட மயிலனைய அழகுடைய தேவயானையின்
செவ்வி – கலவி இன்பத்தை விட
உனக்கு, தேவயானையின் கலவி இன்பத்தை விட
நற்கீரர் சொல் தித்தித்ததே
நற்கீரர் – நக்கீரரின்
சொல் – திருமுருகாற்றுப்படை
தித்தித்ததே – அதிக இனிமையாக இருந்ததோ?
நக்கீரரின் திருமுருகாற்றுப்படை அதிக இனிமையாக இருந்ததோ?
[வளவாய்மை சொற்பிரபந்தம் உள கீரனுக்குகந்து
மலர்வாயிலக்கணங்கள் இயல்போதி
அடிமோனை சொற்கிணங்க ‘உலகாம் உவப்ப’ என்றுன்
அருளால் அளிக்கு கந்த! – கடிமாமலர் – சுவாமிமலைத் திருப்புகழ்]
பொழிப்புரை:
மயில் வாகனனே! சூரபத்மனாகிய மாமரத்தையும், கிரௌஞ்ச மலையையும், மாயையையும் அடியோடு அழித்து, அமராவதியில் மகிழ்ச்சியை விளைவித்தவனே! பிரம்மனைத் தண்டித்தவனே! குதிரை முகத்தை ய்டைய பெண்ணின் முகத்தை மாற்றிய உனக்கு, உன் தேவியாகிய தேவசேனையின் கலவி இன்பத்தை விட, நக்கீரரின் திருமுருகாற்றுப்படை அதிகம் இனிமையாக இருந்ததோ?
.jpg)
Comments
Post a Comment