கந்தர் அந்தாதி - செய்யுள் 50
சித்திர மிக்க னவில்வாழ் வெனத்தெளி யுந்தவவா
சித்திர மிக்க னெறிக்கழிந் தேற்கினிச் செச்சைநல்வி
சித்திர மிக்க தனக்குறத் தோகை திறத்தமுத்தி
சித்திர மிக்க வருளாய் பிறவிச் சிகையறவே
பதம் பிரித்த வடிவம்:
சித்திரம் இக்கனவு இல்வாழ்வு எனத் தெளியும்
(தவ வா)சித் திரம் இக்கன் நெறிக்கு அழிந்தேற்கு இனி செச்சை
(நல் வி)சித்திர மிக்க தன குறத் தோகை திறத்த
(முத்தி) சித்தி ரமிக்க அருளாய் பிறவிச் சிகை அறவே.
பொருள்:
சித்திரம் இக்கனவு இல்வாழ்வு எனத் தெளியும் தவ வாசித் திரம்
சித்திரம் – பொய்யாக உள்ள
இக் கனவு – நாம் காண்கின்ற கனவைப் போன்றது
இல்வாழ்வு – இந்தப் பிரபஞ்ச வாழ்க்கை
[பொய்யாக உள்ள இந்தப் பிரபஞ்ச வாழ்க்கை நாம் உறக்கத்தில் காணும் கனவைப் போன்றது]
எனத் தெளியும் – என்ற மனத்தெளிவை நல்கும்
தவ வாசித் திரம் – தவ வலிமையை நாடாமல்
இப்பிரபஞ்ச வாழ்க்கை, கனவைப் போன்றது என்ற மனத்தெளிவை நல்கும் தவத்தை நாடாமல்
இக்கன் நெறிக்கு அழிந்தேற்கு
இக்கன் – கரும்பு வில் கொண்ட மன்மதனுடைய
நெறிக்கு – காம நூல் வழியில்
அழிந்தேற்கு – கெட்டுப்போன எனக்கு
மன்மதனுடைய காமநூல் நெறியை நாடி, கெட்ட எனக்கு
இனி செச்சை நல் விசித்திர
(இனி – இனிமேலாவது)
செச்சை நல் விசித்திர! – வெட்சி மாலை அணிந்த சிறந்த, அற்புத அழகுடையவனே!
மிக்க தன குறத்தோகை திறத்த! – பெருத்த தன பாரமுடைய மயில் போன்ற வள்ளியின் மணாளனே!
முத்தி சித்தி ரமிக்க அருளாய் பிறவிச் சிகை அறவே
பிறவிச் சிறை அறவே – இப்பிறப்பாகிய பந்தம் நீங்க
முத்தி சித்தி – மோட்சப் பேறானது (இனிமேலாவது)
ரமிக்க அருளாய் – பரிபூரணமாகக் கிட்டும்படி எனக்கு அருள வேண்டும்.
வெட்சிமாலை அணிந்த அழகனே! வள்ளி நாயகனே! இப்பிறப்பாகிய பந்தம் நீங்க, இனியாவது, மோட்சப் பேற்றை நான் பெறும்படி எனக்கு அருள்வாய்.
பொழிப்புரை:
வெட்சிமாலை அணிந்த வள்ளி மணாளனே! இல்வாழ்க்கையின் நிலையற்ற தன்மையைப் புரிந்துகொள்ளாமல், சிற்றின்ப வழியில் காலம் கழித்த அடியேனுக்கு, இனிமேலாவது பிறப்பு இறப்பாகிய பந்தம் நீங்கும்படியும், முத்திவீடு கிட்டும்படியும் நல்லுபதேசம் செய்வாயாக.
.jpg)
Comments
Post a Comment