கந்தர் அந்தாதி - செய்யுள் 49
சேதக மொன்று மனாதியுந் தாதையுந் தேடரியார்
சேதக மொன்றுஞ் சதங்கையங் கிண்கிணி செச்சையந்தாள்
சேதக மொன்றும் வகைபணி யாயினித் தீயவினைச்
சேதக மொன்று மறியா துழலுயிர்ச் சித்திரமே
பதம் பிரித்த வடிவம்:
சேத கம் ஒன்றும் மன் ஆதியும் தாதையும் தேட அரியார்
சே! தகம் ஒன்றும் சதங்கை அம் கிண்கிணி செச்சை அம் தாள்
சேது அகம் ஒன்றும் வகை பணியாய்! இனி தீய வினை
சேதகம் ஒன்றும் அறியாது உழல் உயிர் சித்திரமே
பொருள்:
சேத கம் ஒன்றும் மன் ஆதியும் தாதையும் தேட அரியார் சே!
சேத கம் ஒன்றும் – தனது ஐந்து சிரங்களில் ஒன்றை இழந்தவரும்
மன் – மற்ற தேவர்களைக் காட்டிலும் நிலையான வாழ்க்கையை உடையவருமாகிய
ஆதியும் – ஆதி கடவுளுமாகிய பிரம்மனும்
தாதையும் – அவனின் பிதாவாகிய திருமாலும்
தேட அரியார் – அடிமுடி தேடி கண்டு பிடிக்க முடியாத பரமசிவனின்
சே – குமாரனே!
பிரம்மனும் திருமாலும் தேடி அறியமுடியாத சிவபெருமானின் குமாரனே!
தகம் ஒன்றும் சதங்கை அம் கிண்கிணி செச்சை அம் தாள் சேது அகம் ஒன்றும் வகை பணியாய்
தகம் ஒன்றும் – நல்ல முறையில் ஒலி செய்யும்
சதங்கை – காலில் அணியும் ஆபரணமான சதங்கை
அம் – சிரேஷ்டமான
கிண்கிணி – மணிகள்
செச்சை - வெட்சி மாலை
(இவற்றை அணிந்த)
அம் தாள் – அழகிய உனது திருவடிகளில்
சேது அகம் - சிவந்த என் இருதயம்
ஒன்றும் வகை – தியானித்து ஒருமைப்படும்படி
பணியாய் – எனக்கு அருள வேண்டும்
ஒலிக்கும் சதங்கை, மணிகள், வெட்சி மாலை இவற்றை அணிந்த உனது அழகிய திருவடிகளில் என் இதயம் தியானித்து ஒருமைப்பட எனக்கு அருள வேண்டும்.
இனி தீய வினை சேதகம் ஒன்றும் அறியாது உழல் உயிர் சித்திரமே
இனி – இனிமேல்
தீய வினை – முன் செய்த தீவினையாகிய
சேதகம் – சேற்றில்
ஒன்றும் அறியாது – கரை சேருவதற்கு வழிதெரியாமல்
உழல் – உழலுகின்ற
உயிர் – இச் சீவ வாழ்க்கை
சித்திரமே – பொய்யானதுவே.
இனிமேல், முன்வினையாகிய சேற்றில் சிக்கித் தவிக்கும் இவ்வாழ்க்கை பொய்யனதுவே.
பொழிப்புரை:
முன் செய்த வினையால் அல்லல் படும் இப்பிரபஞ்ச வாழ்க்கை பொய்யானதால் பிரம்மன் மால் இவர்கள் காணா சிவனின் குமரனே உன்னுடைய திருவடிகளில் என் சித்தம் ஒடுங்கும்படி அருள வேண்டும்.
.jpg)
Comments
Post a Comment