கந்தர் அந்தாதி - செய்யுள் 47
திடம்படு கத்துங் கெடீர்கன்ம லோகச் சிலுகுமச்சோ
திடம்படு கத்துந் திரித்தம்பு வாலி யுரத்தும்பத்துத்
திடம்படு கத்துந் தெறித்தான் மருக திருகுமும்ம
திடம்படு கத்துங் கநகங் குனித்தவன் சேயெனுமே
பதம் பிரித்த வடிவம்:
திடம் படு உகத்தும் கெடீர்; கன்ம லோக சிலுகும்
(அச் சோ)திடம் படுகத்தும் திரித்து, “அம்பு வாலி உரத்தும் பத்து
திடம்படு கத்தும் தெறித்தான் மருக! திருகு மும்மதிள்
தம்படு உக துங்க நகம் குனித்தவன் சேய்!” எனுமே
பொருள்:
திடம் படு உகத்தும் கெடீர் – உறுதி நிலை அழியும் யுக இறுதியிலும் அழிவில்லாமல் இருப்பீர்கள்.
கன்ம லோக சிலுகும் அச் சோதிடம் படுகத்தும் திரித்து
கன்ம லோக சிலுகும் – பூர்வ வினையால் நமக்கு இவ்வுலகத்தில் ஏற்படும் மூ வேடணைகளையும் (மண், பெண், பொன்)
அச் சோதிடம் படு கத்தும் – ஓயாமல், கல்விச்செருக்கை அளிக்கும் சோதிட நூல்களைப் படித்துப் பிதற்றுவதையும்
திரித்து – மாற்றி
வினையால் உண்டாகும் மூவேடணைகளையும், செருக்கை அளிக்கும் சோதிட நூல்களைப் படித்துப் பிதற்றுவதையும் ஒழித்து,
அம்பு வாலி உரத்தும், பத்து திடம்படு கத்தும் தெறித்தான் மருக
அம்பு வாலி உரத்தும் – தன் பாணத்தை வாலியின் மார்பு மீதும்
பத்துத் திடம்படு கத்தும் – ராவணனது உறுதியான பத்துத் தலைகள் மீதும்
தெறித்தான் மருக – பிரயோகித்த ராமபிரானின் மருகனே!
[கைதான் இருபதுடையான் தலை பத்தும் கத்தரிக்க எய்தான் மருகன் – கந்தர் அலங்காரம்]
அம்பினை வாலியின் மீதும், ராவணனின் மீதும் பிரயோகித்த ராமபிரானின் மருகனே! என்றும்…
திருகு மும்மதிள் தம்படு உக துங்க நகம் குனித்தவன் சேய் எனுமே
திருகு மும்மதிள் – பகைகொண்ட முப்புரங்களையும்
தம்படு உக – தாம் தோன்றிய இடத்திலேயே விழுந்து அழியும்படி
[திரிபுரம் அதனை ஒரு நொடியதனில் எரிசெய்தருளிய சிவன் வாழ்வே – பொதுத் திருப்புகழ்]
துங்க நகம் – உயர்ந்த மேருமலையை
குனித்தவன் – வில்லாக வளைத்த சிவபெருமானின்
சேய் எனுமே – மைந்தனே என்று துதியுங்கள்
திரிபுரத்தை அழிக்க, மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமானின் மகனே! என்றும் துதியுங்கள்
பொழிப்புரை:
அனைவரும் அழியும் யுக இறுதி காலத்திலும் அழியாமல் இருக்கவேண்டுமென்றால், மூவாசைகளையும் ஒழித்து, சோதிட நூல்களைப் படித்துப் பிதற்றுவதையும் விட்டு, வாலியையும் ராவணனையும் சம்ஹாரம் செய்த ஸ்ரீ ராமரது மருகனே! முப்புரங்களையும் நொடியில் சிரித்து எரித்தழித்த சிவனாரின் மகனே! என்று குமரனைத் துதியுங்கள்.
.jpg)
Comments
Post a Comment