கந்தர் அந்தாதி - செய்யுள் 46

செருக்கும் பராக வயிராவ தத்தெய்வ யானைமணஞ்
செருக்கும் பராக தனந்தோய் கடம்ப செகமதநூல்
செருக்கும் பராக மநிரு பனந்தந் தெளிவியம்பு
செருக்கும் பராகம் விடுங்கடை நாளுந் திடம்பெறவே

பதம் பிரித்த வடிவம்:

செரு கும்ப ராக அயிராவத தெய்வயானை மணம்
செருக்கும் பராக தனம் தோய் கடம்ப செக மதநூல்
செருக்கும் பர ஆகம நிருபன அந்தம் தெளிவி
(அம்பு) செர் உக்கு உம்பர் ஆகம் விடும் கடை நாளும் திடம் பெறவே.

பொருள்:

செரு கும்ப ராக அயிராவத தெய்வயானை மணம் செருக்கும் பராக தனம் தோய் கடம்ப 

செரு கும்ப ராக – போர் புரியும் திறமும், மத்தகமும் கோபமும் உடைய

அயிராவத தெய்வயானை – ஐராவதம் எனும் (இந்திரனின்) யானையால் வளர்க்கப்பட்ட தெய்வயானையின்

மணம், செருக்கும், பராக – மணம் வீசுவதும், இறுமாப்பும், பூந்தாதுக்களும் உடைய

தனம் தோய் கடம்ப – தனபாரத்தில் மூழ்கும், கடப்ப மாலை அணிந்தவனே! 

ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட தெய்வயானையின் தனபாரத்தில் மூழ்கும் கடப்ப மாலை அணிந்தவனே!


செக மதநூல் செருக்கும் பர ஆகம நிருபன 

செக மத நூல் செருக்கும் – இவ்வுலகிலுள்ள பரசமய நூல்களைப் படிப்பதால் ஏற்படும் கர்வத்தை

பர ஆகம நிருபன – வெல்லுகின்ற வேத ஆகம நூல்களை சிருஷ்டித்தவனே! 

பரசமய நூல்களைப் படிப்பதால் உண்டாகும் கர்வத்தை வெல்லும் வேதாகம நூல்களைக் கொடுத்தவனே!

அம்பு செர் உக்கு உம்பர் ஆகம் விடும் கடை நாளும் திடம் பெறவே

அம்பு செர் உக்கு – தாமரை மலரில் உதித்த பிரம்மாக்களும் அழிந்து

உம்பர் ஆகம் விடும் கடை நாளும் – தேவர்களும் தம் சரீரத்தை விடுகின்ற யுகாந்த காலத்திலும்

திடம் பெறவே – நான் நித்யத்துவம் அடையும் பொருட்டு

பிரம்மாக்களும் தேவர்களும் அழியும் யுக முடிவிலும் நான் நித்தியத்துவம் அடைவதற்காக வேண்டி

அந்தம் தெளிவி – இப்பிரபஞ்சத்தின் முடிவான பொருள் என்ன என்பதை உபதேசிப்பாயாக.

முடிவான பொருள் என்ன என்பதை உபதேசம் செய்வாய்.

பொழிப்புரை:

தெய்வயானை மணாளனே! பிற சமய போதனைகளில் நான் மயக்கம் அடையாதபடியும், யுக முடிவில் நான் அழிவு அடையாதபடியும் நித்தியப் பொருளை எனக்கு நீ உபதேசிப்பாயாக.

செயல்மாண்டு சித்தம் அவிழ நித்தத்
     த்வம்பெறப் பகர்ந்த ...... உபதேசம்
சிறியேன் தனக்கும் உரைசெயிற் 
     (சற்)றும் குருத்துவம் ...... குறையுமோதான்
[சயிலாங்கனை – மதுராந்தகத் திருப்புகழ்]

Comments